பள்ளிக்கல்வியை காவு வாங்கத்துடிக்கும் அரசியலைப் பற்றி பேசும் விழா !
“தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை”
மாலை 5 மணிக்கு நிகழ்வு தொடங்கும் என்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே அரங்கம் நிரம்பி வழிந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியர்களுக்கு முன்பாக பவ்யமாக அமர்ந்திருக்கும் மாணவர்களைப் போலவே, இருக்கைகள் அனைத்தையும் ஆக்கிரமித்திருந்தார்கள். அதில் சரிபாதிக்கும் மேலானோர், ஆசிரியர்கள் என்பதுதான் குறிப்பிடத் தகுந்த விசயம்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகள் பலரும் கரை வேட்டிகளுடனே அரங்கில் ஆஜராகியிருந்தார்கள். வந்தவர்கள் எல்லோருமே, தனது வருகையை உறுதி செய்யும் விதமாக அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில், ஆளுக்கொரு புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்டதோடு பேரார்வத்தோடு பிரித்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

அரங்கம் நிறைந்த ஆசிரியர்களின் கல்வி சார்ந்த விழாவா? அரசியல் கட்சி சார்ந்த விழாவா? என்பதிலே, ஒரு கணம் குழப்பம் மேலிட்டது. பின்னர்தான், புரிந்தது இது பள்ளிக்கல்வியை காவு வாங்கத்துடிக்கும் அரசியலைப் பற்றி பேசும் விழா என்று.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதியுள்ள “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் அறிமுக விழாவில் கண்ட காட்சிகள்தான் இவை.
ஜூன்-13 அன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், திருச்சி மாவட்ட வாசகர் வட்டம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், வி.சி.க. மாநில துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ், தேசிய நல்லாசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் இரா.சரவணன், ஜமால் முகமது கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் அ.கா.காஜா நஜீமுதீன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா, ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

”தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகனார், மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோரின் சிந்தனைகளை எழுத்தாக்கி நமக்கு கொடுத்து சிந்திக்க வைத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி – தேசிய கல்விக் கொள்கையை இனி திருத்த முடியாது! அதை நிறுத்ததான் வேண்டும்! ” என்றார், கவிஞர் தங்கம் மூர்த்தி. கல்விக்கொள்கையின் நோக்கம் குறித்தும் இதை ஆசிரியர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை சக ஆசிரியராக பணியாற்றிய அனுபவத்திலிருந்தே அனுபவ பாடமாகவே எடுத்தார் கவிஞர் தங்கம் மூர்த்தி. மிகக்குறிப்பாக, இந்த நூலில் குயவன் என்பதைக்கூட மிக நுட்பமாக குயவர் என்பதாக “ர்” விகுதி போட்டு பதிவு செய்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
”திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோடு இணைந்து பணியாற்றும் எம்.எல்.ஏ.க்களாக இனிகோ இருதயராஜ் இருக்கிறார். அப்தலு சமது இருக்கிறார். அதுபோலவே, அவர் பொறுப்பு அமைச்சராக இருக்கும் நாகை மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் இருக்கிறது. நாகூர் தர்கா இருக்கிறது. வேளாங்கண்ணி பேராலயம் இருக்கிறது. மதநல்லிணக்கத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறார், அமைச்சர்.

மதம் பிடித்த மனிதர்கள்தான் இந்த தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளார்கள். யார் யாரெல்லாம் இந்த கல்விக் கொள்கையை உருவாக்கினார்கள் என்பதை முழுமையான தரவுகளோடு வழங்கியுள்ளார் எழுத்தாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி” என்பதாக பேசினார், ஆளூர் ஷாநவாஸ்.
மிக முக்கியமாக, ஒரு வேளை தான் படிக்கும் காலத்திலேயே இப்போதைய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டிருந்தால், தனது தந்தையின் தொழிலான ஊதுபத்தி உருட்டும் தொழிலையே நான் செய்து கொண்டிருப்பேன் என்பதாக, உங்கள் முன் சட்டமன்ற உறுப்பினராக நின்றிருக்கும் வாய்ப்பை பறி கொடுத்திருப்பேன் என்பதாக, புதிய கல்விக்கொள்கையின் பாதகத்தை அவருக்கே உரிய மக்கள் மொழியில் எடுத்துரைத்தார், ஆளூர் ஷாநவாஸ்.

நிறைவாக பேசிய, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”கல்வியாளர்களுக்கு என்றைக்கும் நான் சேயாகவே இருக்க விரும்புகிறேன். பெற்றோர்களுக்கு முன்பு பிள்ளையாக பேசுகிறேன். மதயானை என்ற இந்த குழந்தையை பலரும் பல்வேறு விதமாக பாராட்டியிருக்கிறீர்கள். நான் அரசியல் பேசவில்லை. நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்? என்பதையே பேசியிருக்கிறேன். ஆளூர் ஷாநவாஸ் குறிப்பிட்டதை போல, முதலில் நாம் யார் என்பதை உணர வேண்டும்.
அதுபோலத்தான், இந்த கல்விக் கொள்கையின் தீமைகளை பற்றி பேசுவதற்கு முன்னால், இந்த கல்விக் கொள்கையை யாரெல்லாம் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை சொல்லவேண்டும் என தீர்மானித்தேன். அதிலிருந்துதான், புதிய கல்விக்கொள்கைக்கு பின்புலமாக இருந்தவர்களை பற்றி இந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன்.

தங்கம் மூர்த்தி எழுதிய நூல்கள் பலவற்றை நானே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இன்று,அவர் எனது நூலை திறனாய்வு செய்திருப்பதில் பெருமைபடுகிறேன். மாதா பிதா கூகுள் தெய்வம் என்பதாக நிலைமை மாறியிருக்கிறது என்பதாக, எளிமையாகவும் அப்டேட்டாகவும் பேசக்கூடிய திறமை கொண்டவர். அவரது மொழியில் எனது நூலை நயம்பட திறனாய்வு செய்திருக்கிறார்.
ஆளூர் ஷானவாஸ் பேசும் போது குறிப்பிட்டதை போல, அவர் படிக்கும் காலத்தில் இந்த தேசிய கல்விக்கொள்கை அமலாகியிருந்தால், அவர் 3,5,8 ஆகிய வகுப்புகளில் ஏதோ ஒன்றில் பெயிலாகியிருந்தால், அவரது அப்பாவின் தொழிலான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பார். இளைஞர்களை கட்டியிழுக்கும் வகையில் திறம்பட பேசும் பேச்சாளரை, சட்டமன்ற உறுப்பினரை, நல்ல ஆளுமையை தமிழகம் இழந்திருக்கும்.அந்த வகையில், என் பொருப்பை உணர்ந்து என் பணியை செய்திருக்கிறேன். பதவி இன்று வரும் நாளை போகும்.
நான் படித்து வாங்கிய பட்டம்தான் கடைசி வரை நிலைக்கும். அமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்தீர்கள்? நீங்கள் எல்லாம் அமைச்சராக இருந்து ஏன் இதை அனுமதித்தீர்கள்? என்று எதிர்காலத்தில் யாரும் ஒரு வார்த்தை சொல்லிவிடக்கூடாது என்று கருதிதான். அமைச்சராக எனது எதிர்ப்பை கருத்தை பதிவு செய்ய வேண்டுமென்ற நோக்கில்தான் இந்த நூலை எழுதியிருக்கிறேன்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம். எல்லோரையும் அரவணைக்கிறோம். மொழியை திணிக்காதீர்கள் என்கிறோம். அறிவியலில், கணக்குப்பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தவன்கூட, இன்று இந்தியில் பெயிலாகிறான். பெயில் பெயில்தான். அதனால்தான் கர்நாடகாவில் 90,000 பேர் பெயில் ஆகியிருக்கிறார்கள்.
என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்க என்னை தோளில் சுமந்தது கழகத் தோழர்கள். என் பொறுப்பின் மூலமாக அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என எண்ணினேன். திமுகவை சேர்ந்தவர்களுக்காக எழுதப்பட்டது அல்ல. ஐயா வீரமணி அழைத்து, உனது நூலை நான் திறனாய்வு செய்கிறேன். நீ என் அருகில் அமர்ந்து என் உரையைக் கேட்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். பெரியார் திடல் அழைக்கிறது. இதைவிட பெருமையான விசயம் எதுவுமில்லை.

எனது சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் முதல் நூல் திறனாய்வு நடந்திருப்பது உன்மையில் மகிழ்ச்சி. நான் எழுத்தாளர் கிடையாது. ஆனால், தமிழகம் முழுவதும் பயணப்பட்டிருக்கிறேன். பள்ளிக்கூட பிள்ளைகளிடம் கலந்துரையாடிக்கிறேன். ஆசிரியர்களிடம் பேசியிருக்கிறேன். இதுபோல, பலரை உணர்ந்து கொண்டதிலிருந்து உருவான புத்தகம்தான் இது.
பொதுவில் பள்ளிக்கூடங்களில், ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது ஆசிரியரின் கண்களை மாணவர்கள் நேரடியாக பார்ப்பதை தவிர்ப்பார்கள். எங்கே, அவரை நேருக்கு நேர் பார்த்துவிட்டால், வீட்டுப்பாடம் குறித்து கேட்டுவிடுவாரோ? அல்லது எழுந்து குறிப்பான கேள்விக்கு பதில் சொல்லும்படி ஆணையிட்டுவிடுவாரோ? என்ற அச்சத்தின் காரணமாக, ஐ காண்டாக்டை தவிர்க்கும் பிள்ளைகளை பார்த்திருக்கிறோம். பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள். அதுபோல, ஆசிரியர்களின் ஐ காண்டாக்டை தவிர்க்கும் பிள்ளைகள், தேசிய கல்விக்கொள்கையால் பள்ளிக்கூடத்தின் காண்டாக்டையே தவிர்க்கும் நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட புத்தகம் இது.
மாணவர்களிடம் மொழி சார்ந்து பேசுங்கள். இனம் சார்ந்து பேசுங்கள். கீழடியின் பெருமைகளை நாம் தான் எடுத்து சொல்ல வேண்டும். தமிழரின் பெருமையை, தமிழின் தொன்மையை மாணவர்களிடம் எடுத்து சொல்லுங்கள். நாம் தமிழன் என்ற பெருமையோடு இருக்க காரணம் ஆசிரியர்களாகிய நீங்கள்தான். அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனம்தான் இன்றளவும் நம்மை தற்காக்கும் கேடயமாக இருந்து வருகிறது. அந்த அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிங்கள். சட்டத்தை பற்றி பிள்ளைகளிடம் பேசுங்கள்.
இந்த சட்டப்பிரிவு இதைப்பற்றி சொல்கிறது என்று, ஒவ்வொரு சட்டப்பிரிவுகளை பற்றியும் மாணவர்களிடம் சொல்லுங்கள். இது நமக்கு முன் உள்ள மிகப்பெரிய கடமை.” என்பதாக, ஆழமான உரையை நிகழ்த்தி அமர்ந்தார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அமைச்சருக்கு சொந்தமான அன்பில் பதிப்பகத்தின் சார்பில் வெளியாகியிருக்கும் இந்நூலின் மூலம் கிடைக்கப்பெறும் நிகர வருவாய் “அன்பில் அறக்கட்டளை” மூலமாக அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்துக்காக வழங்கப்படும் என்பதாக அறிவித்திருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது.
– இளங்கதிர்.
முதலில் கல்விக் கொள்கை பற்றி முழுவதும் படித்து விட்டு பிறகு நிறை குறை தெரிவிக்க வேண்டும். இது போன்ற பிற்போக்கு சக்திகள் தமிழ்நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்