நியோமேக்ஸ் மோசடி கிளை நிறுவனங்கள் பட்டியல் வெளியிட்ட போலீஸ் ! மீண்டும் ஏமாறாதீர்கள்” ! தைரியமாக புகார் கொடுங்கள்

0

நியேமேக்ஸ் நிறுவனத்தின் பொய் வாக்குறுதியை நம்பி ”மீண்டும் ஏமாறாதீர்கள்” ! தைரியமாக போலீசில் புகார் கொடுங்கள் !

நியோமேக்ஸ் நில நிதி மோசடி நிறுவனம் தொடர்பான வழக்கு விவகாரம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள் முன்ஜாமீன் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்கள் தடைச்சட்டத்தின் (Banning of Unregulated Deposit Schemes Act, 2019 (BUDS) Act) கீழும் வழக்குப் பதிவு செய்யப்படுவது குறித்து விசாரணை அலுவலர் பரிசீலிக்க வேண்டும் என்று சுட்டிகாட்டியிருந்தது.

பெருமளவில் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இம்மோசடி குறித்த முழுமையான விவரங்களை அறிய குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசு காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், முன்ஜாமீன் கோரிய மனுக்கள் (CRL OP MD 13071/2023) அனைத்தையும் தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்டு-22 அன்று நீதிபதி ஜி.இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியை நியமித்து பஞ்சாயத்தை முடித்து வைக்க வேண்டுமென்று நியோமேக்ஸ் தொடுத்த வழக்கு (WP MD 57397/2023: 18991/2023), நீதிபதி டி.நாகர்ஜுன் முன்பாக நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் செப்-14 அன்று தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

மதுரை பொருளாதார குற்றபிரிவு போலீஸ் வெளிட்ட அறிவிப்பு
மதுரை பொருளாதார குற்றபிரிவு போலீஸ் வெளிட்ட அறிவிப்பு

ஓய்வுபெற்ற தனிநீதிபதியை நியமித்து கமிஷன் அமைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி, பொருளாதாரக் குற்றப்பிரிவின் புலன் விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டுமென்று பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வாதங்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏதுவாக மதுரையில் “மூன்றாவது மனு மேளா’ நடத்தப்போவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே சொற்பமான புகார்களே பதிவாகியுள்ள நிலையில், மீண்டும் எதற்காக இந்த மூன்றாவது மனு மேளா? என்ற கேள்விகளோடு, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு இன்ஸ்பெக்டர் திருமதி ராஜநளாயினி அவர்களிடம் அங்குசம் சார்பில் பேசினோம்.

“நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் கொடுப்பதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது உண்மைதான். போலீசிடம் புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது என மிரட்டுகிறார்கள். கோர்ட்டில் நமக்கு சாதகமாக ஆர்டர் ஆகிவிடும் என பொய் வாக்குறுதி கொடுத்து வருகிறார்கள். இதுவரை 75 கோடி ரூபாய்க்கான 349 புகார்கள்தான் வரப்பெற்றிருக்கின்றன. இவர்கள் பொதுமக்களிடமிருந்து எவ்வளவு தொகை வசூலித்திருக்கிறார்கள் என்ற முழுப்பரிமாணம் கிடைப்பதற்காகவே, புகார் கொடுங்கள் என கோருகிறோம்.

இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி 5000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றிருப்பதாக தெரிவித்திருந்தோம். ஆனால், அதற்கு மேல் இருக்க வாய்ப்பிருப்பதாகவே சந்தேகிக்கிறோம். ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எங்களது தரப்பில் அவர்களது கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமென்ற வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கிறோம். இதற்கு முன்னர் இது போன்ற நிதிமோசடி தொடர்பான வழக்குகளில் நியமிக்கப்பட்ட கமிஷன்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையவில்லை என்பதே உண்மை. 20 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் கமிஷன்களும் இருக்கின்றன. 20 முதல் 25 சதவிகித பேருக்குத்தான் அதிலும் நிவாரணம் கிடைத்திருக்கிறது. நியோமேக்ஸ் நிறுவனத்தின் மிரட்டலுக்கு அஞ்சாமலும் மற்றும் பொய் வாக்குறுதிகளை நம்பி மீண்டும் ஏமாறாமலும் மக்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்பதற்காகவே இந்த மனுமேளாவை நடத்துகிறோம்.” என்கிறார் இன்ஸ்பெக்டர் திருமதி ராஜநளாயினி.

தலைமறைவாக இருக்கும் நியோமேக்ஸ் நிர்வாகிகள் அ
தலைமறைவாக இருக்கும் நியோமேக்ஸ் நிர்வாகிகள் 

மனுமேளா குறித்து, பொருளாதாரக் குற்றப்பிரிவின் வடக்கு மண்டல, காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஸ் தங்கையா விடுத்துள்ள செய்தி குறிப்பில் …

” மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 20.06-2023-60 பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குற்ற எண். 03/2023 u/s 406, 420 r/w 34 IPC & Section 5 of TNPID Act and 3, 4, 5, 21 (1) (2) (3), 22, 23, 25 of BUDS சட்டம் 2019 புலன்விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட “
(1) நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(2) கார்லாண்டோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(3) ட்ரான்ஸ்கோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(4) டிரைடாஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(5) குளோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்” மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் ஆன,
(i) நியோமேக்ஸ் ரியல்டார்ஸ் பிரைவேட் லிமிடெட்,
(ii) நியோமேக்ஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
(iii) சென்ட்ரியோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(iv) ரிகாரியோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(v) அட்வெண்டாஸ் குளோபல் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(vi) எக்ஸ்புளோரா ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட்,
(vii) சப்ரோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(viii) அட்லாண்டினோ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
(ix) லோமி பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(x) ரெபாக்கோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(xi) லிபர்ட்டாஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(xii) அஸ்டோனிஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(xiii) மில்லியானா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
(xiv) லிவ்பிரைட் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(xv) எஸ்.டி.சி.எஸ்.லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட்,
(xvi) க்ரீன் ராயல் ரீடெய்ல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்,
(xvii) சில்வர்கார்ப் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(xviii) டெட்ரா குளோபல் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(xix) லிவ்ஸ்மார்ட் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(xx) வென்டூரா டெவலப்பர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,

” ஆகிய நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் புகார் மனுக்களை பெறுவதற்காக “மூன்றாவது மனு மேளா’ நடத்தப்பட உள்ளது.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் மனுக்களை அனைத்து தொடர்புடைய ஆவணங்களுடன் (நகல்கள்) மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க கீழ்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.

நியோமேக்ஸ் மோசடி புகார் தொடர்பான “மூன்றாவது மனு மேளா’
நாள் : 08.09.2023 வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி
இடம் : ஆயுதப்படை மைதானம், மதுரை
தொலைபேசி எண் : 0452-2642161
கைபேசி எண் : காவல் ஆய்வாளர் திருமதி ராஜநளாயினி 96006-72735

– வே.தினகரன், ஷாகுல்.

Leave A Reply

Your email address will not be published.