நியோமேக்ஸின் மான் கராத்தே !

0

மான் கராத்தே முயற்சியில் நியோமேக்ஸ் ! நியோமேக்ஸ் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுள் ஒரு பிரிவினர் மதுரையில் கூடி அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதித்திருக்கின்றனர். முக்கியமாக, வாய்ஸ் ஆப் லா (voice of law) என்ற யூட்யூப் சேனல் வழியே நியோமேக்ஸ் வழக்கு தொடர்பான அப்டேட் தகவல்களை வழங்கி வந்தவரும் வழக்கறிஞருமான அழகர்சாமி என்பவரை மத்தியஸ்தராக கொண்டு இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, அவர்கள் வெளியிட்டிருந்த காணொளியில், டான்பிட் சட்டம் 5 அ விதியின்படி, நியோமேக்ஸ் நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோருடன் சுமுகமான முறையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முனைவதாக தெரிவித்துள்ளனர்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஆசிபெற்ற ஒருவரது முயற்சியில் முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து வருவதாகவும்; பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுள் ஒரு குறிப்பிட்ட மாவட்ட பகுதியைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கி இந்த சுமுக நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த ”மான் கராத்தே” முயற்சிகளுக்கு பின்னணியில் ஆளும்கட்சி அரசியல் பின்புலம் பலமாக இருப்பதாக சொல்கிறார்கள். நியோமேக்ஸ் விவகாரத்தில் தொடர்ந்து “வாய்ஸ்” கொடுத்து வரும் சட்ட பிரமுகர், ஆளும் கட்சியின் பெண் வாரிசு ஆளுமைக்கு அறிமுகமானவராம். அந்த செல்வாக்கை பயன்படுத்தியே இந்த சுமுக உடன்பாட்டுக்கு முன் நிற்பதாகவும் தகவல்.

- Advertisement -

நியோமேக்ஸ் விவகாரத்தில் ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலரும் முதலீடு செய்திருப்பதாகவும்; போலீசு அதிகாரி தொடங்கி நீதிபதிகள் வரையில் பலரும் பணம் போட்டிருப்பதாகவும்; இவர்கள் எல்லோருமே இன்னும் வெளிப்படையான புகார் அளவுக்கு போகவில்லை என்றும்; இவர்களது இன்ஃபுளூயன்சில்தான் இந்த விவகாரத்தை கமுக்கமாக முடித்துக் கொள்வதற்கான முயற்சி நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

neomax
neomax
4 bismi svs

பெரிய அளவிலான கைது நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்வது; அதிரடி நடவடிக்கைகள் இருக்காது என்ற உத்தரவாதம் ஆளும் கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்; முடிந்த அளவுக்கு இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு புதியதாக யாரும் புகார் கொடுக்காமல் பார்த்துக் கொள்வது; இதுவரை புகார் அளித்தவர்களுக்கு முடிந்தவரை செட்டில்மெண்ட் செய்து வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்வது என்ற முடிவிலிருந்தே நகர்வுகள் தொடர்வதாக தகவல்.

நியோமேக்ஸ் இயக்குநர்கள் தரப்பிலேயே இரண்டு குரூப்பாக பிரிந்துக் கிடப்பதாகவும் தகவல். ஒருகுரூப் தனது மண்டலத்தில் வாங்கிப் போட்ட சொத்துக்களையெல்லாம் நியோமேக்ஸ் பெயரில் பதிவு செய்யாமல், சொந்த பந்தங்கள் பெயரில்தான் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதைவைத்து, தன்னை நம்பி பணத்தை போட்டவர்களுக்கு அதை வைத்து செட்டில் செய்து வருவதாகவும் தகவல். எதிர் குரூப்போ, கைவசம் உள்ள பினாமி சொத்துக்களையெல்லாம் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்து கைப்பற்றுவதற்குள்ளாக, முடிந்தவரை விற்று காசாக்கிவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறதாம். இதுவரை 300 கோடி அளவில் சொத்துக்களை விற்று காசாக்கிவிட்டதாம். அந்த காசை வைத்து பினாமி பெயரில் புதுக் கம்பெனியையும் தொடங்கியும் விட்டார்களாம்.

நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு குரூப்பாக செயல்படுகிறார்களாம். இவர்களுள் சட்ட அறிவு உள்ளவர்கள், மற்றவர்களை அணிதிரட்டும் ஆற்றல் கொண்டவர்கள், தலைமை பண்பு கொண்டவர்களை தனியே கண்டறிந்து அவர்களுக்கு தனிச்சலுகைகளை வழங்குவதாக பேரம் பேசி விசயத்தை சுமுகமாக முடித்துக் கொடுக்க ஒத்துழைக்குமாறு நியோமேக்ஸ் தரப்பில் தேன் தடவப்படுவதாகவும் தகவல். இதனால், இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை குறையாக தெரிவிக்கிறார்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில்.

டி.எஸ்.பி. மனிஷாவை பொறுத்தவரையில், ஸ்ட்ரைட் பார்வர்டு. அவர் அவரது வேலையை முறையாக செய்து கொண்டேதான் இருக்கிறார். இன்ஃபுளூயன்ஸ் செய்யும் நபர்களோ, இவருக்கும் மேலிடத்தில் பேசி உரிய சலுகைகளை வாங்கி வந்துவிடுகிறார்கள். இவர்களது நடவடிக்கைக்கு டி.எஸ்.பி.யின் செயல்பாடு குறுக்கீடாக இருக்குமேயானால், இடமாறுதலில் சென்னைக்கே திரும்ப செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள்.

இதுவரை புகாரை கொடுக்காமல், இவர்களின் பேச்சை நம்பி அமைதியாக காத்திருப்பவர்களுக்கு நியோமேக்ஸ் நிறுவனம் என்ன பரிகாரத்தை வழங்கப்போகிறது என்பதுதான் விடை தெரியாத குழப்பமாகவே நீடிக்கிறது. பட்டை நாமத்தை சாத்தாமல் இருந்தால் சரி!

– அங்குசம் புலனாய்வுக் குழு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.