சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷனுக்கு மாறுமா நியோமேக்ஸ்?
நியோமேக்ஸ் வழக்கில், அதிரடி திருப்பமாக சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷன் (SIFO) அமைப்புக்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி முன் எழுந்திருக்கிறது. நியோமேக்ஸ் முன்னணி இயக்குநர்களின் பிணை ரத்து தொடர்பான வழக்குகளை, விசாரித்துவரும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை பொது ஏலத்துக்கு கொண்டு வந்து அதனை ரொக்கமாக மாற்றி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக்கொடுக்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறார். வெளிநபர்கள் ஏலத்தில் பங்கேற்க ஆர்வம் செலுத்தாத நிலையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களே தங்களது முதலீட்டிற்கு ஏற்ப நிலங்களை தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக, டி.டி.சி.பி., ரெரா அப்ரூவ்டு பெறப்பட்ட 9935 பிளாட்டுகள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இரண்டு சுற்று ஏலம் நிறைவடைந்த நிலையில், 5715 பிளாட்டுகள் ஏலம் போயிருக்கின்றன. இரண்டு சுற்றுகளிலும் ஏலம் போகாத, 4220 பிளாட்டுகள் அடுத்த சுற்று ஏலத்துக்கு வரவிருக்கின்றன. இரண்டு சுற்றுகளில் ஏலம் எடுத்தவர்களில், 2237 பேர் மட்டுமே ஏலத்தை நடத்தும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கு சேர வேண்டிய சேவைக்கட்டணத்தை செலுத்தியிருக்கிறார்கள். எஞ்சிய 3478 பேர் இன்னும் சேவைக்கட்டணத்தை செலுத்தாமல் இருப்பது, சந்தேகத்திற்குரிய நடவடிக்கையாக நீதிமன்றம் கருதத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. ஏலத்தை சீர்குலைப்பதற்கான முயற்சியா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

மேலும், நியோமேக்ஸ் தொடர்புடைய 11 வணிகரீதியிலான சொத்துக்களை அடுத்தக்கட்ட ஏலத்துக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அவற்றில் உள்ள சில சட்ட சிக்கல்களை முன்வைத்து அவை குறித்து முடிவெடுக்க 15 நாள் அவகாசம் நிறுவனத் தரப்பில் கேட்டிருக்கிறது.
ஏற்கெனவே, சுமார் 65,000 அளவுக்கு புகார்கள் வந்துள்ள நிலையில், இறுதி வாய்ப்பாக ஜூலை-10 அன்று வரை வழங்கப்பட்ட காலக்கெடுவில் சுமார் 8000 முதல் 10,000 வரையில் வரப்பெற்றிருப்பதாக பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், நியோமேக்ஸ் தொடர்பான வழக்கை சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷன் (SIFO) அமைப்புக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையுடன் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது, நீதிமன்றம். நீதிபதி விக்டோரியா கௌரி தனிநபர் அமர்வில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, சம்பந்தபட்ட அமைப்பின் பதிலுக்காக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டு, முறையான விசாரணை ஜூலை-30 அன்று தொடங்கும் என்பதாக தேதி வழங்கப்பட்டிருப்பது, இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
முழுமையான வீடியோவை காண
நியோமேக்ஸ் நில ஏலம் | அதிரடி திருப்பம்! சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷனுக்கு மாறுமா?
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.