நியோமேக்ஸ் தில்லாலங்கடிகளை திரை கிழிக்கும் ராமமூர்த்தி !
நியோமேக்ஸ் மோசடி விவகாரத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் ? விவரிக்கிறார் சிவகாசி ராமமூர்த்தி !”நியோமேக்ஸ் நிறுவனம் செட்டில்மென்ட் செய்ய முன் வருகிறது. அதை பயன் படுத்திக் கொள்வோம்” எனக் கேட்டுக் கொண்டதால் இவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருந்தேன்.
அனைவருக்கும் கொடுத்த காலக் கெடு முடிந்து விட்டதால் இனி தீவிர சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.” என்பதாக குறிப்பிடுவதோடு, ”யாரிடமிருந்தும் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் எல்லா செலவுகளையும் நானே ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட உங்களில் ஒருவனாக இருந்து தேவையான அனைத்து நீதிமன்றங்களிலும் அனைவரும் பலன் பெரும் வகையில் சரியான முறையான வழக்குகள் தொடுத்து நீதிமன்றம் மூலமாக செட்டில்மென்ட் பெற்றுத்தர நான் தயாராக இருக்கிறேன். ” என்பதாக தெரிவிக்கிறார் நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான சிவகாசியைச் சேர்ந்த ராமமூர்த்தி.

சவுதி அரேபியாவில் பெட்ரோலிய நிறுவனம் ஒன்றில் பொறியாளராக 34 ஆண்டுகள் பணி செய்தவர் ராமமூர்த்தி. மாதம் ஒன்றுக்கு நான்கு இலட்சங்களுக்கு குறையாமல் சம்பளம் பெற்றவர். தங்களது குடும்பத் தேவை போக சேமித்து வைத்திருந்த தொகையிலிருந்து, 2010-ல் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். அன்றிலிருந்து 2023 வரையிலான இந்த கால இடைவெளிக்குள் பல்வேறு தவணைகளில் ஆக மொத்தம் இதுவரை 6.5 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்.
நியோமேக்ஸ் தொடர்பான வழக்கு விவரங்களை தொடர்ந்து அவதானித்து வரும் ராமமூர்த்தி, அவசியமான நீதிமன்ற தலையீடும் செய்திருக்கிறார். நியோமேக்ஸ் நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான தடை உத்தரவுகள் சிலவற்றையும் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுத்து பெற்றுமிருக்கிறார். இந்நிலையில், தற்போதைய சூழல் குறித்து விரிவாகவே விளக்குக்கிறார் ராமமூர்த்தி.

இனி அவரது வார்த்தைகளிலே… “ இப்பொழுது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையினரால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வழக்கின் போக்கில் திருப்தி இல்லை.
ஏதோ சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு காலம் கடத்தி சில குழுக்களுடன் சேர்ந்து உதவாத சொத்துக்களை அதிக விலைக்கு கொடுத்து ஏனோதானோ என்று செட்டில்மென்ட் செய்து முடிக்க நிறுவனம் முயல்கின்றது இதில் உடன்பாடில்லை.
பணமாக சரியான முறையில் கணக்கிட்டு விரைவில் செட்டில்மென்ட் செய்து முடிக்க DRO அலுவலகம் உதவுமா? என்ற நம்பிக்கையும் முழுவதுமாக இல்லை.
நீதிமன்ற உத்தரவை நிறுவனம் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நிறுவனத்தார் மற்றும் ஏஜெண்டுகள் சொத்துக்களை விற்று மேலும் பல வியாபாரங்களைத் தொடங்கி அதன் மூலமாக மறைமுகமாகவோ நேரடியாகவோ பணம் சம்பாதித்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களைப் பற்றிய கவலை இல்லை மற்றும் செட்டில்மென்ட் செய்து கொடுப்பதில் எந்த அக்கறையும் இல்லை என ஆதங்கப்படுபவர்கள் பலர் இருக்கின்றனர்.
”நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது துரிதமான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இவர்களை மிக விரைவில் குறைந்தது ஏழு ஆண்டுகளுக்காவது சிறை செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் ஏதோ ஒருவகையில் செட்டில்மென்ட் பற்றி யோசிப்பார்கள்.
பணம் தான் வேண்டும் என கேட்பவர்களுக்கு மற்றும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பார்கள்.” என கருதுபவர்களுக்காக யாரிடமிருந்தும் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் எல்லா செலவுகளையும் நானே ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட உங்களில் ஒருவனாக இருந்து தேவையான அனைத்து நீதிமன்றங்களிலும் அனைவரும் பலன் பெரும் வகையில் சரியான முறையான வழக்குகள் தொடுத்து நீதிமன்றம் மூலமாக செட்டில்மென்ட் பெற்றுத்தர நான் தயாராக இருக்கிறேன்.

இதற்கு முன்பு நிறுவனம் தவறான பாதையில் சென்ற போது அதை எதிர்த்து தடை உத்தரவு வாங்கிய தனி நபர் நான் தான். அதன்பின் ”சில குழுக்கள் நீதிமன்றம் சென்றால் கால தாமதம் ஆகும். அதனால் பல முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள். நிறுவனம் செட்டில்மென்ட் செய்ய முன் வருகிறது. அதை பயன் படுத்திக் கொள்வோம்” எனக் கேட்டுக் கொண்டதால் இவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருந்தேன். அனைவருக்கும் கொடுத்த காலக் கெடு முடிந்து விட்டதால் இனி தீவிர சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இத்துடன் நாங்குநேரி வழக்கையும் பெரியளவில் கொண்டு சென்றால் தான் நிர்வாகிகள் மீதுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய இயலும். நீதிமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் நியோமேக்ஸ் நிறுவனம் அவர்கள் வியாபாரத்தில் செய்த சட்ட விரோதங்கள் தில்லு முல்லுகள் மோசடிகள் பினாமி சொத்து விசயம் போன்ற பல விதமான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வரும்.
நிறுவனத்தார் மற்றும் அதனைச் சார்ந்தோர்கள் பலர் இன்னும் இந்த வழக்கின் மூலமாக சிறை செல்லவில்லை. சென்ற சிலர் ஜாமீன் பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களை மீண்டும் சிறைக்கு விரைவில் அனுப்ப வேண்டும். அதை என்னால் செய்ய இயலும். அதற்காக எவ்வளவு செலவு ஆனாலும் அதற்கு நான் தயாராக உள்ளேன்.
சிறந்த வழக்கறிஞர்கள் உள்ளனர். வெற்றி நமதே. உண்மை நியாயம் தர்மம் நம் பக்கம் உள்ளது. எனது முயற்சி சரி என கருதுபவர்கள் பலர் இருப்பர் என நம்புகின்றேன். உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன் மகள் படிப்பு சம்பந்தமாக சொந்த வேலைகள் இருந்தன. அதனாலும் நியோமேக்ஸ் விசயத்திலிருந்து ஒதுங்கி இருந்தேன்.

இனி தீவிரமாக செயல்பட்டால் தான் முதலீட்டாளர்களுக்கு கிடைக்க வேண்டியவை விரைவில் கிடைக்கும். இல்லை என்றால் லாபம் அடையப் போவது சுந்தர் தியாகராஜன் போன்றோர் தான். இப்பொழுது பலர் அவர் வழியில் சென்று கொண்டிருப்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலீட்டாளர்களின் செட்டில்மென்ட் விசயத்தில் நியோமேக்ஸ் குழும நிறுவனத்தார்கள் அரசாங்கத்திற்கு நீதிமன்ற உத்தரவு படி ஒத்துழைக்கவில்லை, சொத்துக்களை மறைக்கிறார்கள்; விற்கிறார்கள்; குற்றவாளிகள் சரண்டர் ஆகாமல் உல்லாசமாக வாழ்கிறார்கள். அவர்களின் கைது நடவடிக்கைகளில் தாமதம்.
சொத்துக்களை பினாமி பெயர்களுக்கு மாற்றுகிறார்கள். முதலீட்டாளர்களை மிரட்டுகிறார்கள். புகார் கொடுக்க விடாமல் தடுக்கிறார்கள். பல குழுக்களுக்கு இடையூறு செய்கிறார்கள்… என்றால் ஏன் நாம் இவற்றை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நீதி மன்றத்தின் கதவுகளை தட்டினால் தான் இனி நீதி கிடைக்கும். பணம் வேண்டும் என்றால் DRO முலமாக முயற்சிக்கலாம். அதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நல்ல முயற்சி.
ஆனால் அது எப்பொழுது கிடைக்கும்? என்று அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் உள்ளதா? இதிலும் வேறு குழுக்கள் மூலமாக நிறுவனம் மறைமுகமாக இடையூறு செய்யக்கூடும். இப்படியே காலம் கடந்து போகும்.
நீதிமன்ற உத்தரவின் படி இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க EOW விற்கு உத்தரவு கிடைக்க வேண்டும். எல்லா சொத்துக்களையும் EOW வில் சமர்பிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கப்படும். விற்ற சொத்துக்களின் பட்டியல் சமர்பிக்கப்படும். ஏலம் விடுவதில் மற்றும் GO பெறுவதில் கால தாமதம். காவல் துறை மற்றும் DRO நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.
இது போன்ற உத்தரவுகளை விரைவில் பெற வேண்டும். பினாமி சட்டம் பாய வேண்டும். நீதி மன்றம் மூலமாக IT, ED, ROC, RBI, GST, SEBI போன்ற துறைகளையும் இதில் தாராளமாக சேர்த்து விட்டு நடவடிக்கை எடுக்க வைத்து விடலாம். முதலீட்டாளர்களை மட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசுகளையும் மோசம் செய்திருக்கிறார்கள். அதிக ரொக்கப் பணப் பறி மாற்றம் நடந்துள்ளது. நிறுவனத்தை எல்லா விதமான வழக்குகளிலும் சிக்க வைத்து விடலாம். NCLT யில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் திவாலானதாக அறிவிக்க வேண்டும். அதை வேறு நிறுவனம் கைப்பற்றி முதலீட்டாளர்களுக்கு முழு செட்டில்மென்ட் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நிறுவனமே முறையாக முழு செட்டில்மென்ட் கொடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் நிறுவனம் புகார் கொடுத்தவர்கள் யாரையும் ஏமாற்றிவிட இயலாது. இறுதியில் புகார் கொடுத்தவர்களுக்கு முழு செட்டில்மென்ட் விரைவில் கிடைக்கும் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளேன்.” என்பதாக தெரிவித்திருக்கிறார் ராமமூர்த்தி.
சிவகாசி ராமமூர்த்தியின் விரிவான இந்த பகிர்வு, நியோமேக்ஸ் நிறுவனத்தின் தில்லாலங்கடிகளை போதுமான அளவுக்கு அம்பலமாக்கியிருக்கிறது.

அவர் சுட்டிக்காட்டுவதைப்போல, இதுவரை எத்தனை பேர் நியோமேக்ஸில் முதலீடு செய்திருக்கிறார்கள்? எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள்? நியோமேக்ஸ் நிறுவனத்தின் பெயரிலேயே பதிவாகியுள்ள சொத்துக்களின் மொத்த விவரங்கள் என்ன? பினாமிகளின் பெயரில் உள்ள சொத்துகளின் விவரங்கள் என்ன? என்பவை குறித்தெல்லாம் விரிவான விவரங்கள் வெளியானால் மட்டுமே இந்த மோசடியின் மொத்த பரிமாணம் புரியவரும்.
அதன்பிறகே, அதற்கான தீர்வை நோக்கி அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்பதைத்தான் இந்த விவகாரம் எடுத்துரைக்கிறது. பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
– அங்குசம் புலனாய்வுக் குழு.
இனி எடுத்து காலம் தாழ்த்துவது. இப்படி அப்படி என்று சொல்லி லாபம் ஈட்ட நினைக்காமல் ஒத்துப்போவதுதான் முக்கியம். இருக்கப்பட்டவங்க கேஸ் போட்டுட்டு தீர்ப்பு வரும்போது என்று இருக்கலாம். ஆனால் போட்ட பணத்துகாக காத்திருக்கும் எங்கள் நிலை மோசமாகிவிடும். தமிழ் நாட்டை பொறுத்தவரை போலிஸ், நீதி மன்றம் என்று போனால் லஞ்சம் கொடுத்தே செத்துப்போய்டுவான் தீர்ப்பு கிடைக்காது. காலம் விரையமாகும். போலிஸ், வக்கீல் இரண்டுபக்கமும் பணம் கொடுத்து போதும் போதும்னு ஆகிடும்.
இவர் கூறுவதைப் பார்த்தால் பழி வாங்கும் வேகம் மட்டும் தான் தெரிகிறது அனைவரையும் உள்ளே வைதாலோ மேற்கொண்டு வழக்கு தொடுதாலோ எண்களைப் போன்ற வாடிக்கையாளர்களுக்கு பணமோ நிலமோ கிடைப்பது தள்ளிப் போகுமே தவிர நல்லது நடக்கப் போவது இல்லை
2010 1 கோடி முதலிடு செய்துள்ளார் பல கோடி சம்பாரிதிருப்பார் நாங்கள் வந்து ஒரு வருடம் ஒரு வருடம் கூட ஆகவில்லை நிறுவனத்தில் சம்பாதித்த பணத்தை இப்போது கோர்ட்டு கேஸ் என்று செல்கிறார் கோர்ட் கேஸ் என்றால் இன்னும் பல நாட்கள் ஆகும் உங்களுக்கு பணம் கிடைக்க லேட் ஆகும் யோசித்து நல்ல முடிவை எடுங்கள். நீங்கள் நல்ல பத்திரிக்கை என்றால் மக்களுக்கு உதவி செய்யுங்கள் பல அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் வருவதே இல்லை இதுபோல மக்கள் பிரச்சினை பல உள்ளன அதையும் கண் திறந்து பாருங்கள்.