அங்குசம் பார்வையில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’
தயாரிப்பு : ‘சினி கிராஃப்ட்ஸ் புரொடக்ஷன்’ & ‘குட்டி ஸ்டோரி’ பிக்சர்ஸ்’ ரவிராஜா & கோவை லக்ஷ்மி ராஜன். டைரக்ஷன் : சாய் ராஜகோபால். நடிகர்-நடிகைகள் : ‘காமெடி கிங்’ கவுண்டமணி, ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சைதன்யா, யோகிபாபு, சித்ரா லட்சுமணன், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், ஓ.ஏ.கே.சுந்தர், சிங்கமுத்து, வாசன் கார்த்திக், கஜேஷ், அன்பு மயில்சாமி, ஒளிப்பதிவு : எஸ்.ஏ.காத்தவராயன், இசை : சித்தார்த் விபின், எடிட்டிங் : ராஜா சேதுபதி, ஆர்ட் டைரக்டர் : மகேஷ் நம்பி. தமிழ்நாடு ரிலீஸ் : ‘ஃபைவ் ஸ்டார்’ செந்தில். பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
ஜி.கே.நகர் தொகுதியில் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வியடைந்ததால், ‘சித்தப்பா—பெரியப்பா மக்கள் கட்சி’யில் ஒத்த ஓட்டு முத்தையா’ வாக இருக்கிறார் ’காமெடி கிங்’ கவுண்டமணி. அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் போது, கட்சியில் செல்வாக்குள்ள முத்தையாவுக்கு சீட் கொடுக்காமல், முத்தையாவிடம் டிரைவராக இருக்கும் யோகிபாபுவுக்கு சீட் கொடுக்கிறார்கள். இந்தக் கட்சியிலிருந்து ஆளும்கட்சிக்குத் தாவிய ரவிமரியாவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் ஓ.ஏ.கே.சுந்தரின் சிபாரிசில் சீட் கொடுக்கிறார்கள். இதனால் முறுக்கேறும் முத்தையா, அதே தொகுதியில் சுயேட்சையாக நின்று ஜெயிக்கிறார்.

ஒத்த ஓட்டு முத்தையா’
இதான் கதை. இதப்படிச்சதும் அண்ணன் கவுண்டமணி படத்தின் மெயின் லைன். அதனால அரசியல் களம் சும்மா அதிரும்ல, காமெடி சும்மா கிழியும்லனு நினைச்சுக்கிட்டு தியேட்டருக்குள்ள போய், அவஸ்தையுடனும் அல்லலுடனும் நீங்கள் வெளியே வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
அவஸ்தை, அல்லல் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்திருக்கோம்னா.. அண்ணன் கவுண்டமணியின் உடல்நிலையையும் பாடி லாங்குவேஜையும் நம்மால் கண்கொண்டு பார்க்க முடியல. ஏம்பா இப்படி அந்த நகைச்சுவை சிங்கத்தை பாடாய்படுத்திருக்கீக? வழக்கமான கவுண்டரின் அட்டாக் டயலாக் இருந்தாலும் சிங்கத்தின் குரல் ஈனஸ்வரத்தில் தான் கேட்கிறது. அப்புறம் எங்கிட்டு அவரின் ‘சட்டையர் பொலிட்டிக்கல் டயலாக்கை ரசிக்க முடியும்? க்ளைமாக்ஸில் யோகிபாபுவைப் பார்த்து, “ டேய் மொட்டை அடிச்சுக்கிறேன்னு நீ சவால்விடாதடா. அதவச்சுத்தான் கஞ்சி குடிச்சுக்கிட்ருக்கே”ன்னு கவுண்டர் ஸ்பாட் டெலிவரி பண்ணிய போது தான் தியேட்டரில் சிரிப்புச் சத்தம் கேட்டுச்சு. மத்தபடி படம் முழுக்க ‘டெட் சைலண்ட்’ தான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கவுண்டமணி மனைவியாக வருபவர், கவுண்டரின் தங்கைகளாக வரும் மூவர், சிங்கமுத்து, இவரின் மகன் வாசன், மயில்சாமியின் மகன் அன்பு, கட்சியின் தலைவர்களாக சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரெல்லாம் சேர்ந்து நம்மை ரொம்பவே இம்சிக்கிறார்கள்.
அண்ணன் கவுண்டமணியின் அதிதீவிர ரசிகர்கள், அவர் மீது பெரிதும் அபிமானம் உள்ளவர்கள் விருப்பம் இருந்தால் போய்ப்பாருங்கள்.
அவ்வளவு தான்…
— மதுரை மாறன்.