“கதையில் தலையிடாதீர்கள்” — தங்கர் மகன் தடாலடி!
E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஏப்ரல் 08- ஆம் தேதி இரவு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாதக சீமான், இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி உதயகுமார், தங்கர் பச்சான், கரு பழனியப்பன், வசந்த பாலன், திருமலை, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் தேவயானி, லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்,
இந்த நிகழ்வில் பேசியவர்கள்…
எஸ்ஏசி
“இளைஞனான தன் மகன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் போய் நன்கு ஒட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அவரை இன்னொரு இளைஞன் தன் படத்தில் இயக்கினால் தான் சரியாக இருக்கும் என நினைக்கும் தங்கர் பச்சான் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்துள்ளார்.
அந்த இயக்குநர் முதலில் வெற்றி பெற வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். ஆனால் வெற்றி அடைந்து விட்டார் என படம் பார்த்து சிலர் கூறினார்கள். நடிகர் விஜித் இந்த திரையுலகத்தில் ஒரு மிகப்பெரிய கலைஞனாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன்”
ஆர்.வி உதயகுமார்
” இந்தப் படத்தின் கதையைக் கேட்கும் போது தங்கர் பச்சான் தலையிடவில்லை என்று விஜித் சொன்னான். அப்படி என்றால் நீ ஜெயித்து விட்டாய்”.
நடிகர் மைம் கோபி
“இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை சரியாக செய்திருக்கிறேன் என்றால் அந்த புகழ் இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு மட்டுமே சேரும். ஒருவேளை சரியாக பண்ணவில்லை என்று நீங்கள் நினைத்தால் அந்த குறை என்னுடையதுதான். மிக அழகான நேர்த்தியான கதை”.
நடிகர் அருள்தாஸ்
“ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி உருவானால் எப்படி ஒரு சந்தோஷம் இருக்குமோ, அது போல தம்பி இயக்குநர் சிவப்பிரகாஷ் இந்த படத்தை இயக்கி இருப்பது சந்தோஷத்தை தருகிறது”.
நடிகை தேவயானி
“இளையராஜா சாரின் ஆசிர்வாதம் இந்த படத்திற்கு இருக்கிறது”.
கரு.பழனியப்பன்
“இயக்குநர் சிவப்பிரகாஷ் என் அலுவலகத்தில் நான் இருந்த நாட்களை விட அதிக நாட்கள் இருந்தவர். தினசரி வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒரு அரசியலை நுட்பமாக அறிந்தவர் சிவப்பிரகாஷ்.அவர் அடர்த்தியான திரைப்படத்தை எடுத்திருப்பதாக படம் பார்த்த எல்லோருமே குறிப்பிட்டு சொல்கிறார்கள்.இந்த படத்தின் வெற்றி, சிவபிரகாஷை விட எனக்குத்தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும். எந்த படத்தையும் வலுக்கட்டாயமாக ஓட வைக்க முயற்சி செய்ய வேண்டாம்.. நல்ல படமாக இருந்தால் அதுவே ஓடும். இந்தப் படம் வெற்றி படமாக அமையட்டும். இந்த படத்தை போல வரும் படங்களில் எல்லாம் பேரன்பும் பெரும் கோபமும் நிறைந்திருக்கட்டும்”.
நாயகன் விஜித்பச்சான்

” நான் சாமியை எல்லாம் பெரிதாக நம்புபவன் அல்ல. ஏதோ ஒன்று நடந்தது. இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் பொருந்துகிற மாதிரி நான் இந்த படத்தில் பயணித்தேன். இசைஞானி இளையராஜா சார் இந்த படைப்பிற்கு உயிர் கொடுத்திருக்கிறார்”.
தங்கர்பச்சான்
“இந்தப்படம் நான் முதற்கொண்டு நிறைய பேர் பேசத் தவறியதை பேசி இருக்கிறது. இது 40 ஆண்டுகளில் என் படங்கள், என் சிறுகதைகள், நாவல்கள் கூட செய்ய தவறியதை இந்த படம் செய்திருக்கிறது. இன்றைக்கு சமூகத்தில் இருக்கும் ஒரு பெரிய சிக்கலை இந்த படம் பேசுகிறது. ஒரு படம் என்பது சிரிக்க வைப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை அடைய வேண்டும். பல அரசியல் இயக்கங்கள் செய்யத் தவறியதை இந்த படம் சாதித்திருக்கிறது. இந்த படத்தின் மூச்சு இசைஞானி தான். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் நான் அவருடன் தான் இருக்கிறேன்.

இந்த படத்தை முழுமையாக புரிந்து அதை எப்படி மக்களிடம் கொண்டு போக வேண்டும் என அழகாக செய்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் தனது இசையால் செதுக்கி உள்ளார். இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவுக்கு தான் பெரும் பங்கு இருக்கிறது. என்னுடைய மகனுக்கு இரண்டாவது படத்திலேயே இந்த கொடுப்பினை கிடைத்துள்ளது. படத்தை நான் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஆனால் இந்த படத்தில் என் மகன் நடித்தபோது இந்த படத்தின் கதையை நீங்கள் கேட்க வேண்டாம் என்னை நடிக்க விடுங்கள் என்று கூறிவிட்டார்”.
சீமான்
“முதல் படத்திலேயே இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு இசைஞானியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இசைஞானி என்கிற வார்த்தை கூட குறைவுதான்.. இசை இறைவன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.. எது கேட்டாலும் அருள்வார். உலகில் எத்தனையோ இசைக்கலைஞர்கள் இருந்தாலும் இளையராஜாவுக்கு நிகர் வேறு எவருமில்லை.இயக்குநர் ஒரு திரைக்கதை எழுதினால் இளையராஜா தனது இசையால் இன்னொரு திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார். 40 வருடங்களாக அவர் பாடல்களை தான் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.. கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை. அவர் இசையை கேட்டால் சோறு தண்ணி எதுவுமே தேவையில்லை. அவர் விஜித் படத்திற்கும் இசையமைப்பார். விஜித்தின் பையன் வந்து இயக்கப் போகும் படத்திற்கும் இசையமைப்பார்.

எப்படி இலக்கிய உலகில் ஒரு பாரதி வந்தாரோ, அது போல தான் இசை உலகில் இளையராஜா.. அது ஒரு வரம். அந்த வகையில் இசை இறைவனின் ஆசி பெற்ற ஒரு படம் இது. தம்பி விஜித் பாலைவனச்சோலை படத்தில் சந்திரசேகர் வெளிப்படுத்தியது போன்று ஒரு அற்புதமான உடல் மொழி, நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.வெற்றிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கடுமையான உழைப்பு மட்டுமே”.
டெக்னீஷியன்கள்
வசனம்: முருகேஷ் பாபு
ஒளிப்பதிவு : ஜே. பி. தினேஷ்குமார் ,
படத்தொகுப்பு ; ராமர் ,
கலை : சரவணன்
நடனம் : ரேகா சுரேஷ் சித்,
சண்டைப் பயிற்சி: தினேஷ் காசி ,
மிக்சிங்: தபஸ் நாயக் ,
நிர்வாக தயாரிப்பாளர் : சாய் வினோத்
தயாரிப்பு நிர்வாகி: டி. முருகன்
தயாரிப்பு மேலாளர் : எம். சிவக்குமார்
ஒப்பனை: அறந்தை தினேஷ் ,
ஆடை வடிவமைப்பு: நித்யா ,
உடைகள்: செல்வம் ,
சிஜி& விஎப்எக்ஸ் ; Hocus Focus
பிஆர்ஓ: ஜான்சன்
— மதுரை மாறன்.