பெரம்பலூரிலிருந்து உருவாகும் புதிய ”சினிமா”!

0

பெரம்பலூரிலிருந்து உருவாகும் புதிய ”சினிமா”!

பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகாவின் கணவர்; வழக்கறிஞர் என்ற அடையாளத்தைவிட, ”ஆ.ராசாவின் தோஸ்த்” என்ற அடையாளம்தான் இவருடையது.  தற்போதையஎம்.பியும்., முன்னால் மத்திய அமைச்சரும் மற்றும் தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே, அவருடன் ராஜேந்திரன் என்கிற சி.டி.ராஜேந்திரனுக்கு உண்டான நெருக்கம் இன்றுவரையில் தொடர்கிறது.

ஆ.ராசாவுடன் ராஜேந்திரன்.
ஆ.ராசாவுடன் ராஜேந்திரன்.

பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவி பொது தொகுதியாக மாற்றப்பட்ட நிலையில், ஆ.ராசாவின் துணையோடு அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி தனது மனைவி அம்பிகாவை நகர்மன்ற தலைவராக அமர்த்திவிட்டார். அதற்காக, ஆ.ராசாவின் செல்வாக்கையும் தாண்டி இவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல; சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பதவியேற்ற ஆறே மாதத்தில் வந்தது அடுத்த சோதனை. அ.தி.மு.க. கவுன்சிலரின் தயவோடு, தமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் தகர்த்தெறிந்தார்.

பெரம்பலூர் ராஜேந்திரன்
பெரம்பலூர் ராஜேந்திரன்

”மாப்பிள்ளை இவருதான்.. ஆனா, இவரு போட்டிருக்கும் சட்டை என்னோடது” என்ற கதையாக, பெயருக்குத்தான் பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா. நகர் மன்றத் தலைவர் அமரும் இருக்கையைக்கூட, ராஜேந்திரன் விட்டுவைக்கவில்லை. மனைவி அமர வேண்டிய இருக்கையில் தான் அமர்ந்து கொண்டு அனைத்தையும் ஆட்டிப்படைத்தார் ராஜேந்திரன். இதுவும் சர்ச்சையாகவே, ”இருக்கை”தானே உங்களுக்கு பிரச்சினை? என்று தனது மனைவியின் இருக்கையை விட்டுகொடுத்துவிட்டு; அதற்குப் பக்கத்திலேயே மற்றொரு இருக்கையை போட்டு அமர்ந்துகொண்டு “பெப்பே” காட்டிவந்த ராஜேந்திரன் சினிமா படம் எடுக்க ஆயத்தமாகிவிட்டாராம்.

தன்னுடைய மகன் பெயரில் ”மாறா பிலிம்ஸ்” என்ற நிறுவனத்தை பதிவு செய்து திரைப்படம் தயாரிக்க இருக்கிறாராம். அவரே தயாரிக்கும் படத்தில் தான் நடிக்காமல் விடமாட்டேன் என்று அடம் பிடித்து, இவரே காவல்துறை துணை கண்காணிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறாராம். ஏற்காட்டில் நடைபெற்று வரும் இந்த படபிடிப்பு வேலைகள் கன ஜரூராகப் போய்க்கொண்டிருக்கிறதாம்.

சகாயம் ஐ.ஏ.எஸ். படபிடிப்பின் போது ...
சகாயம் ஐ.ஏ.எஸ். படபிடிப்பின் போது …

சி.டி. ராஜேந்திரன் தயாரிக்கும் படத்தின் பெயர் ”சகாயம் ஐ.ஏ.எஸ்.” நேர்மையாக பணியாற்ற முடியாத நிலை வந்தபோது, அந்தஸ்தும் அதிகாரமும் பொருந்திய ஆட்சியர் இருக்கையே வேண்டாமென்று தூக்கி கடாசிவிட்டு சென்ற சகாயத்தின் பெயரில் படம் எடுக்கிறார், பொண்டாட்டி இருக்கையைக்கூட விட்டுக்கொடுக்காத சி.டி.ராஜேந்திரன். என்னே ஒரு முரண்நகை!

– கே.சி.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.