கோட்டையிலிருந்து பறந்த கடிதமும் மாளிகையிலிருந்து பறந்த ஆளுநரும் !
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற பொன்முடி, இதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பொன்முடி இழந்த கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுள்ளார். இதற்கான உத்தரவை சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று ( 13.03.2024) முதல் பொன்முடி கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார் என்றும் சட்டமன்ற செயலகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார் என்ற உத்தரவை அடுத்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற செய்ய மு.க.ஸ்டாலின் உடன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு எழுதிய கடிதத்தில்,“உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தண்டனை அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இதன் அடிப்படையில் பொன்முடி மீது எந்த தண்டனையும் இல்லை என்பதால் அவரை மீண்டும் அமைச்சராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைக்கவேண்டும் என்றும் அந்த விழா இன்று (13.03.2024) இரவு அல்லது நாளை (14.03.2024) காலை நடைபெற வேண்டும் என்பதற்குத் தங்களின் ஒப்புதலை வேண்டுகிறோம் என்று எழுதிய மடல் மாலை ஆளுநர் மாளிகையை அடைந்தது.
இந்த மடல் குறித்து ஆளுநர் மாளிகை இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் நேற்று (13.03.2024) இரவு 9.00 மணியளவில், தொலைக்காட்சிகளில்,“நாளை (14.02.2024) காலை ஆளுநர் டெல்லிக்குத் திடீர் பயணம் என்றும் 3 நாள்கள் கழித்தே சென்னை திரும்புவார்” என்று செய்திகள் வெளியிடப்பட்டன. ஆளுநர் டெல்லி சென்று உள்துறை அமைச்சரைச் சந்தித்து, பொன்முடி மீண்டும் அமைச்சராவது குறித்து ஆலோசிக்கச் சென்றிருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
எப்படியோ, பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்பது என்பது தள்ளிப்போய்விட்டது என்பது என்னவோ உண்மைதான். கோட்டையிலிருந்து கடிதம் பறந்தவுடன், மாளிகையைவிட்டு ஆளுநர் பறந்துவிட்டார் என்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் உள்ளது. என்னதான் நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
-ஆதவன்