வசிய பேச்சு … வருமானம் போச்சு ! அதிக வட்டிக்கு ஆசைப்படாதே ! பள்ளி மாணவர்களின் அசத்தல் கடிதங்கள் !
அன்புள்ள அப்பா, அம்மா, அத்தை, மாமா, சித்தி என்று அந்தந்த மாணவர்களுக்கு பிடித்தமான உறவுகளுக்கு, மாணவர்கள் தங்களது சொந்த மொழியில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி ...
வசிய பேச்சு … வருமானம் போச்சு ! அதிக வட்டிக்கு ஆசைப்படாதே ! உறவுகளுக்கு அஞ்சலட்டை எழுதிய பள்ளி மாணவர்கள் ! தேசிய அஞ்சல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் அட்டை எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் கல்லூரி மேநிலைப்பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள், திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.
திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் வி.ஜார்ஜ், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு இன்ஸ்பெக்டர் வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐநூறுக்கும் அதிகமான மாணவர்கள் இந்நிகழ்வில் ஆர்வத்தோடு பங்கெடுத்தனர்.
தமிழ் வழியிலோ அல்லது ஆங்கில வழியிலோ பயிலும் பள்ளி மாணவர்களை அணுகி ஒரு தகவலை சொல்லி, வாக்கியமாக எழுதுங்கள் என்றால் நிச்சயம் தடுமாறித்தான் போவார்கள். முழுக்க முழுக்க மனப்பாடம் செய்து அப்படியே ஒப்புவிக்கும் முறைக்குத்தான் பெரும்பாலான மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆன்ட்ராய்டு ஃபோனில் ஃப்ரீ பயர் கேம் விளையாடுவதில் இருக்கும் வேகம் நாலு வார்த்தையை கோர்வையாக எழுதுவதில் இருப்பதில்லை. வாட்சப் பயன்பாட்டிலும்கூட, வார்த்தைகளை சிதைத்து ”mm”, “tnx”, “f9” என்பதான புதுவகை மொழிக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலான மாணவர்களுக்கு அஞ்சல் அட்டையே கூட பரிச்சயம் இல்லாத ஒன்றுதான். இந்த பின்னணியிலிருந்து பள்ளி மாணவர்களின் பங்கேற்புடன் அஞ்சல் அட்டை எழுதும் நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள் என்பது நம் கவனத்தை பெறுகிறது.
அதுவும், அதிகவட்டிக்கு ஆசைபட்டு முகம் தெரியாத ஏதோ ஒரு நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துவிட்டு, பல்வேறு வகையில் முயற்சித்தும் போட்ட பணத்தை திரும்ப பெற முடியாத போதுதான், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரை நாடுவார்கள். இன்னும் சொல்லப்போனால், போலீசு துறையில் இப்படி ஒரு பிரிவு இயங்கிவருகிறது என்பதே பலருக்கும் தெரியாது என்பதே யதார்த்தம்.
இந்நிலையில், இப்படி ஒரு துறை இயங்கிவருகிறது என்பதையும் அதன் செயல்பாடுகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதோடு, மாணவர்களின் வழியே அவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்.
மாணவர்களிடையே இப்படி ஒரு நிகழ்வை நடத்த வேண்டுமென்ற யோசனை எப்படி வந்தது என்ற கேள்வியோடு, டி.எஸ்.பி. லில்லிகிரேஸை தொடர்புகொண்டோம். “எனது கணவர் ஆசிரியராகவும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்க் செய்தும் வருகிறார். என் பிள்ளைகளிடத்திலும் என்னிடத்திலும் கடிதம் எழுதும் பழக்கத்தை வலியுறுத்தி எப்போதும் பேசுவார். அதிலிருந்தே தேசிய அஞ்சல் தினத்தை இவ்வாறு கடைபிடிக்கலாமே என்று இந்நிகழ்வை ஒருங்கிணைத்தோம்.
பெரும்பாலோன பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டே சேமிப்பை திட்டமிடுவார்கள். அரசு துறை சார்ந்த நிறுவனங்கள் அல்லாமல், இதுபோன்ற மோசடி நபர்களின் ஆசை வார்த்தைகளுக்கு பலியாகிவிடக்கூடாது என்பதை அவர்களின் பிள்ளைகளின் வழியாகவே கருத்தாக சொல்ல முயற்சித்தோம். புதுக்கோட்டையிலும் எங்கள் யூனிட் சார்பில், ரனீஸ் பெண்கள் மேநிலைப்பள்ளியிலும் இதே நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள்.” என்கிறார், அவர்.
அன்புள்ள அப்பா, அம்மா, அத்தை, மாமா, சித்தி என்று அந்தந்த மாணவர்களுக்கு பிடித்தமான உறவுகளுக்கு, மாணவர்கள் தங்களது சொந்த மொழியில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகளை அஞ்சல் செய்திருக்கிறார்கள். ”வசிய பேச்சு… வருமானம் போச்சு ! நிதியை இழந்து நீதியைத் தேடாதே!” என்பது போன்ற பஞ்ச் வசனங்களும் அந்த அஞ்சலட்டையில் இடம்பெற்றிருந்தன.
– கலைமதி.