சமரச தீர்வு மையத்திற்கு மாறிய பிரணவ் ஜூவல்லரி நகை சேமிப்புத் திட்ட மோசடி வழக்கு !
சமரச தீர்வு மையத்திற்கு மாறிய பிரணவ் ஜூவல்லரி நகை சேமிப்புத் திட்ட மோசடி வழக்கு !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 8 இடங்களில் செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி, பல்வேறு வகையான நகை சேமிப்புத் திட்டங்களில் பணம் செலுத்தியிருந்த வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும் நகையை திருப்பிக் கொடுக்க முடியாமல் சர்ச்சையில் சிக்கியது.
அடுத்தடுத்து தனது 8 கிளைகளையும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட நிலையில், பிரணவ் ஜூவல்லரியை நம்பி பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் தமிழகம் முழுவதும் மூடிய கடைகளுக்கு முன்பாக திரண்டு முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து, திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கார்த்திகா, திருச்சி கிளை மேலாளர் நாராயணன் ஆகியோர் மீது ஆசை வார்த்தைக்கூறி மோசடி செய்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல் என்பது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே, குற்றவாளிகள் வெளிநாடு தப்பிச் செல்லாதவாறு அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீசு வழங்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக பதுங்கியிருக்கும் மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கிருத்திகா சார்பில், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் முன்ஜாமீன் கேட்டும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் குற்றவியல் நடைமுறைக்கு எதிராகவும் மனு அளித்திருந்தனர்.
மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கம் காரணமாகவே வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் நகைகளை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதாகவும், உரிய கால அவகாசம் வழங்கினால் உரிய ஏற்பாடுகளை செய்து வாடிக்கையாளர்களுக்கு நகையை திருப்பியளிப்பதாக பிரணவ் ஜூவல்லரி தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி சிவஞானம்.
”பிரணவ் ஜூவல்லரி தரப்பில் சுமுகமான முறையில் செட்டில்மெண்ட் செய்து கொள்வதற்கு முன்வந்திருப்பது வரவேற்கக்கூடிய ஒரு விசயம்தான். வழக்கு, விசாரணை, சட்ட நடைமுறைகள் என ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்காமல், வாடிக்கையாளர்கள் ஏற்கத்தக்கவகையில் குறுகிய கால அவகாசத்தில் ஏதோவொரு ஏற்பாட்டில் பணமாகவோ, நகையாகவோ திருப்பி கொடுத்தால் நல்லதுதானே” என்கிறார்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வட்டாரத்தில்.
– அங்குசம் செய்திப் பிரிவு