அங்குசம் பார்வையில் ‘ரெய்டு’ !
அங்குசம் பார்வையில் ‘ரெய்டு’.
தயாரிப்பு : ஓப்பன் ஸ்கிரீன் & ஜி பிக்சர்ஸ் எஸ்.கனிஷ்க் , ஜி.மணிகண்ணன். டைரக்டர்: கார்த்தி, வசனம்: முத்தையா. ஆர்ட்டிஸ்ட்: விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, வேலுபிராபகரன், ஹரிஷ் பெராடி, அனந்திகா, செல்வா, ரிஷி, செளந்தர் ராஜா, கண்ணன் பொன்னையா. இசை: சாம் சி.எஸ். ஒளிப்பதிவு: கதிரவன், எடிட்டிங்: மணிமாறன், ஸ்டண்ட் மாஸ்டர்: கணேஷ். பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & ரேகா டி ஒன்

டைட்டிலில் கார்டு முடிந்து படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்திலேயே அதிரி புதிரியாக எண்ட்ரி ஆகிறார் ஹீரோ விக்ரம் பிரபு. போலீஸ் அதிகாரி கெட்டப்பில் ஏழெட்டு ரவுடிகளை சுட்டுத் தள்ளுகிறார். வீச்சரிவாளால் பொலி போடுகிறார். பேக் ரவுண்டில் பற்றி எரியும் நெருப்பில் நடந்து வருகிறார்.
ஏன் இப்படி? எதுக்கு இப்படி? ங்கிறதுக்கான ஃப்ளாஷ் பேக் தான் இந்த ‘ரெய்டு’. நடிகர் திலகத்தின் பேரனான விக்ரம் பிரபுவுக்கு இத்தனை படங்கள் நடித்தும் நடிப்பு இன்னும் வசப்படவில்லை என்பது தான் நமக்குள்ள வருத்தம்.ஆனால் போலீஸ் மிடுக்கு, துடிப்பு, கம்பீரம் இதற்கு நல்ல பெர்ஃபாமென்ஸ் கொடுத்திருக்கார். மத்தபடி ரவுடிகளைப் பிடிச்சு உட்கார வைத்து ” ஆமான்டா நீ அந்த புள்ளய எப்படி சீரழிச்ச, அவனை எப்படி போட்டுத் தள்ளுன”என்று கதை கேட்டு நம்மை ரெய்டு அடிக்கிறார்.

கரண்ட் சிச்சுவேஷ ன் சீன் ஓடும் போது ஃப்ளாஷ் பேக், அந்த ஃப்ளாஷ் பேக்குக்குள்ள ஒரு ஃப்ளாஷ் பேக்குன்னு ரொம்பவே ரெய்டு அடித்து விடுகிறார் புதுமுக இயக்குனர் கார்த்தி. இவருடைய தாய்மாமா டைரக்டர் முத்தையா விடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை செய்ததால், மருமகனுக்காக முத்தையாவே வசனம் எழுதியிருக்கார்.
விக்ரம் பிரபு மட்டும் தத்துவம் பேசுனா ஓரளவு தாங்கிக்கலாம். ஆனால் அம்புட்டு ரவுடிகளும் தத்துவம் பேசுனா எங்க பாடி தாங்குமா முத்தையாண்ணே? அடடே ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவப் பத்தி சொல்ல மறந்துட்டேன்? அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். ஏன்னா டைரக்டரே மறந்துவிட்டதால தான் இடைவேளைக்குப் பிறகு ஸ்ரீதிவ்யாவை கொண்டு வந்திருக்கார்.

ரெண்டு சாங், ரெண்டு ரொமான்ஸ் சீன் முடிஞ்சதும் அவரையும் ரவுடிகள் போட்டுத் தள்ளிவிடுகிறார்கள். ரவுடிகளாக வேலு பிரபாகரன், ரிஷி, செளந்தர் ராஜா, கண்ணன் பொன்னையா வருகிறார்கள். எல்லாப் பேருக்கும்”அந்த போலீஸ்காரனை போட்டுத் தள்ளாம விடமாட்டேன்” இந்த ஒரே டயலாக் தான். வழக்கம் போல அவர்கள் அம்புட்டுப் பேரையும் பொட்டுன்னு போட்டுத் தாளித்து விடுகிறார் விக்ரம் பிரபு. சரக்கு அடிக்க, கஞ்சா இழுக்க சில சீன்களில் அனந்தி காவை யூஸ் பண்ணியிருக்கிறார்கள். மொத்தத்தில் விக்ரம் பிரபுவின் சினிமா லிஸ்டில் இந்த ‘ரெய்டு’ ம் இருக்கு
-மதுரை மாறன்