யார் இந்த ஆம்புலன்ஸ் பிரபாகரன் – ராமஜெயம் கொலையும் – வெர்ஷா காரும் ! திகிலூட்டும் கொலைகளும் !

0
அங்குசம் இதழ்
அங்குசம் இதழ்

”ராமஜெயம் கொலையும் வெர்ஷா காரும்.. அவிழும் முடிச்சுகள்!” என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 1 – 15  அங்குசம் இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையின் போக்கில், வெர்ஷா காரை நோக்கிய பயணத்தில், திருட்டு வாகனத்தை வாங்கி விற்றதாக ஆம்புலன்ஸ் பிரபாகரன் என்பவரை சிபிசிஐடி போலீசார் சுற்றி வளைத்த சம்பவத்தை குறிப்பிட்டிருந்தோம்.

ஆம்புலன்ஸ் பிரபாகரன் வெட்டிக்கொலை 

ஆம்புலன்ஸ் பிரபாகரன் வெட்டிக்கொலை
ஆம்புலன்ஸ் பிரபாகரன் வெட்டிக்கொலை

சிபிசிஐடி போலீசாரின் விசாரணை வளையத்தில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் பிரபாகரன், டிசம்பர்-11 அன்று இரவு 9.30 மணிக்கு  மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆம்புலன்ஸ் பிரபாகரன் நடத்திவந்த தாயார் ஹோம்கேர் சர்வீஸ் என்ற நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கிறது. முகத்தில் மாஸ்க் அணிந்த கொலையாளிகள் மூவர் சர்வ சாதாரணமாக பட்டாக்கத்தியோடு நடந்து வருவதும் எந்தவித பதட்டமும் இல்லாமல் வெட்டி சாய்த்துவிட்டு செல்வதுமான பதைபதைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி காமெராவில் பதிவாகியிருக்கிறது.

வீடியோ லிங்:

இரத்தம் ஆறு போன்ற
இரத்தம் ஆறு போன்ற

இந்த கொலையில் தொடர்புடையதாக திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (38), பஷீர் (29), ரியாஸ் ராஜேஷ் (24) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (28) ஆகியோரை போலீசார் விசாரித்து வருவதாக தெரிகிறது.

யார் இந்த ஆம்புலன்ஸ் பிரபு?

பிரபாகரன் - பிரபு
பிரபாகரன் – பிரபு

திருச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு இயக்கிவந்த தொழில் காரணமாக, பிரபு (எ) பிரபாகரன், ஆம்புலன்ஸ் பிரபாகரன் என அழைக்கப்பட்டிருக்கிறார்.

”ஆம்புலன்ஸ் வண்டிய ஸ்டேண்டுல போடுறது, சவாரி எடுக்கிறதுனு எல்லாத்திலயும் பிரச்சின பன்னுவாரு. ஆஸ்பத்திரிக்குள்ள நர்ஸ்-ங்கள, எங்கள மாதிரி வேலை செய்ற ஆளுங்கள வச்சிகிட்டு அத வாங்கி தாரேன், இத வாங்கித்தாரேனு செஞ்சிட்டு இருந்தாரு.” என்கிறார்கள், மருத்துவமனை ஊழியர்கள் சிலர்.

”குற்றுயிரும் கொலை உயிருமாக உயிருக்குப் போராடும் நிலையில்தான் ஆம்புலன்ஸை நாடுவாங்க. அந்த மாதிரி உணர்ச்சி பூர்வமான சூழலை சாதகமாக்கி, கூட வர்ற குடும்ப பெண்கள் கிட்ட உதவி செய்ற மாதிரி பேசி பழகி நம்பர வாங்கிடுவாரு. அப்புறம், அவங்களை இவர் வழிக்கு கொண்டு வந்து வாழ்க்கைய நாசமாக்கிடுவாரு. இவரால நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க.” என்கிறார் ஆம்புலன்ஸ் பிரபாகரனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

பிரபு (2)
பிரபு (2)

மேலும், ”ஆம்புலன்ஸ் வாகனத்தில் டெட்பாடிக்குள் பிரவுன் சுகரை வைத்துக் கடத்தியது; ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்து விபத்து நடந்து வாகனம் உருக்குலைந்ததை போல பொய்யான ஆவணத்தை உருவாக்கி இன்சூரன்ஸ் கம்பெனிகளை ஏமாற்றி பணம் பறித்தது; வாகனத்திருட்டு தொடர்பான வழக்கில் கேரளா – திருச்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது; ஆம்புலன்ஸ் வாகனம் வழியே அறிமுகமான பெண் ஒருவரிடம் இடம் வாங்கித் தருவதாகக்கூறி ஆறு இலட்சம் ஆட்டையப் போட்டது; உச்சமாக பெண்டாட்டி கையைப் பிடித்து இழுத்தார் என்று பெற்ற தகப்பன் மீதே பொய்கேசு போட்டது” என ஆம்புலன்ஸ் பிரபாகரனைப் பற்றிய பேப்பர் கட்டிங்குகளை எடுத்துப்போட, நமக்கே தலை கிறுகிறுத்துத்தான் போனது.

ஆம்புலன்ஸ் பிரபு வாகனம்
ஆம்புலன்ஸ் பிரபு வாகனம்

”தற்போது திருச்சி ஜி.எச். எதிரில் நிறுத்தப்பட்டிருக்கும் TN 37 BV 9106 என்ற பதிவெண் கொண்ட வாகனமும் திருட்டு வாகனம்தான். கேரளா, ஆந்திரா, கர்நாடகானு எல்லாமே வெளி மாநிலத்திலிருந்து திருடி கொண்டு வரப்பட்டவைதான். எப்போதும் தனி ஆளாக செல்லமாட்டார். கூடவே யாரையாவது கூட்டிக்கொண்டுதான் போவார். வாடகைக்கு வீடு கேட்பது போல, நோட்டமிடுவார். பின்னர், நேரம் காலம் பார்த்து நேக்காக வண்டியை தூக்கி கொண்டு வந்துவிடுவார்.

பெங்களூருவில் நிலமங்களா, காமாட்சிபாளையம், மாகானாயக்கன் அள்ளி போலீஸ் ஸ்டேசன்ல இவர் மேல வாகன திருட்டு வழக்கு இருக்கு. இவர் வைத்திருக்கும் எல்லா வண்டிகளின் உண்மைத் தன்மையையும் ஆராய்ந்தால், இன்னும் பல இரகசியங்கள் வெளிவரும்” என பகிரூட்டினார் அவரைப் பற்றி நன்கறிந்த நண்பர் ஒருவர்.

“விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனங்களை ஆவணங்களுடன் ஸ்கிராப் எடுக்கும் ”ததபுத” ரமேஷ் என்பவருடன் கூட்டு சேர்ந்து கொண்டுதான், திருட்டு வாகனங்களை ‘ஆவணங்களுடன் கூடிய நல்ல வாகனங்களாக’ உலவ விட்டார்.” என காத்து வாக்கில் கிடைத்த தகவலை உறுதிபடுத்தும் பொருட்டு, ஸ்கிராப் ரமேஷிடம் பேசினோம்.

பழைய வாகனம் எடுக்கும் கும்பல் 

“நீங்க நினைக்கிற மாதிரி தப்பான தொழில் செய்றவன்லா இல்லை. 2000-க்கு முன்னாடி ஹைதராபாத்ல பாத்திர வியாபாரம் செய்திட்டு இருந்தேன். அதற்குபிறகுதான், திருச்சிக்கு வந்தேன். 2006-க்கு பிறகுதான், ஆக்சிடென்ட் ஆகுற வண்டிகளை டாகுமெண்டோட வாங்கி விக்கிற பிசினஸ்ல இறங்குனேன். அதுவும் முகம் தெரியாத ஆளுங்களுக்கெல்லாம் கொடுக்க மாட்டேன். நல்லா அறிமுகம் ஆனவங்களுக்கு மட்டும்தான் கொடுப்பேன். டெல்லியிலிருந்து ஸ்கிராப் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கியாந்து விற்பேன். எல்லாமே கமிசன் பேசிஸ் பிசினஸ்தான். என்கிட்ட வண்டிய வாங்கி பிரபாகரன் என்ன பன்னுனாருனு எனக்குத் தெரியாது. சிபிசிஐடி போலீசார் என்னையும் விசாரிச்சாங்க. நடந்தத சொன்னேன். கைகட்டி பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துட்டோமேனு இப்போ வருத்தப்படுறேன்.” என்றார், ஸ்கிராப் ரமேஷ்.

திருட்டு வண்டிய ஒரிஜினல் வண்டியா மாற்றுவது

ஆம்புலன்ஸ் பிரபாகரன்
ஆம்புலன்ஸ் பிரபாகரன்

”பத்து இலட்ச ரூபாய்க்கு ஷோரூம்ல விலைக்கு வாங்குன வாகனம், வாங்குன ஆறு மாசத்துக்குள்ள விபத்துல சிக்கிடுச்சுன்னா இன்சூரன்ஸ்ல 100% க்ளைம் அப்படியே கிடைக்கும். ஒரு வருசத்துக்குள்ள வண்டினா, 82% வரையில் ஒர்க்கிங் ஆர்டர் போடலாம். அப்படி செலவு செஞ்சி வண்டிய ரெடி பன்னினாலும், ஆக்சிடெண்ட் வண்டி, வேற ஸ்பேர் பார்ட்ஸ்னு கஸ்டமர்ஸ் வண்டிய வாங்க யோசிப்பாங்க. அதனால, வண்டி தனியா, டாகுமெண்ட் தனியா வித்திருவாங்க. ஆக்சிடெண்ட் ஆன வண்டிய ஸ்கிராப் போட்டுட்டு, அதோட இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர  அதே மாடல் திருட்டு வண்டியில அச்சடிச்சி, திருட்டு வண்டிய ஒரிஜினல் வண்டியா மாத்தி நல்ல விலைக்கு வித்துருவாங்க. இதுதான் இதுக்கு பின்னாடி இருக்கிற சீக்ரெட்.” என்கிறார், இந்த வியாபாரத்தை பற்றி தெரிந்த மெக்கானிக் ஒருவர்.

ஆம்புலன்ஸ் பிரபாகரன்
ஆம்புலன்ஸ் பிரபாகரன்

”ஸ்கிராப் ரமேஷ், மெக்கானிக் ராமகிருஷ்ணன், இன்னொரு மெக்கானிக் கிருஷ்ணன் ராஜாமணி என எல்லாமே ஆம்புலன்ஸ் பிரபாகரனோடு நண்பர்களாக இருந்தவர்கள்தானாம். எல்லோருடனும் முரண்பாடாக பேசும் முரட்டு குணம் கொண்டவராம் ஆம்புலன்ஸ் பிரபாகரன். காலப்போக்கில், நண்பர்களுக்கிடையே ஒத்துப்போகாமல் ஏதோ விரிசல் ஆகியிருக்கிறது. இந்த கடுப்பில், மெக்கானிக் ராமகிருஷ்ணன் என்பவர் அவரது நண்பரான மற்றொரு மெக்கானிக் கிருஷ்ணன் வழியாக ஆம்புலன்ஸ் பிரபாகரன் மீது மொட்டை கடுதாசி போட்டதாகவும்; இதற்கிடையில், ராமகிருஷ்ணனுக்கும் கிருஷ்ணனுக்கும் முரண்பாடு வர, ஆம்புலன்ஸ் பிரபாகரனிடம் இந்த விசயத்தை கிருஷ்ணன் போட்டு கொடுத்து விட்டதாகவும்; அதை வைத்தே ராமகிருஷ்ணனை மிரட்டி ஆறு இலட்சத்தை ஆம்புலன்ஸ் பிரபாகரன் பணத்தை கறந்ததாகவும்” கிடைத்த தகவலை உறுதிபடுத்த மெக்கானிக் ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

ஆம்புலன்ஸ் பிரபாகரன்
ஆம்புலன்ஸ் பிரபாகரன்

” பேட்டி எல்லாம் வேண்டாம் ப்ளீஸ் …’’ என விலகிச் சென்றவரை இழுத்துப் பிடித்து பேசினோம். ‘’ஆம்புலன்ஸ் வண்டியை சர்வீஸ்க்கு எடுத்து வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர்தான் பிரபாகரன். அந்த பழக்கத்துல, அவரோட ஆம்புலன்ஸ் வண்டி ஒன்னு ஆக்சிடென்ட் ஆச்சு. சர்வீஸ்க்கு கொண்டு வந்தாரு. சேஸ் மாத்தியாகனும்ங்கிற கண்டிசன். முறையா, கம்பெனி ஷோரூம்ல ஸ்பேர் பார்ட்ஸ்-க்கு ஆர்டர் பன்னி, ஆர்.டி.ஓ.வுக்கு அப்ளை பண்ணி சேஸிஸ் மாத்தனும்னா இரண்டு இலட்சம் வரைக்கும் கூட செலவு பிடிக்கும். சேவையாதான் பன்றேன். பெருசா வருமானம்லா இல்லை. பாத்து பன்னுங்கனு கேட்டதால இரக்கப்பட்டு, ஸ்கிராப்ல எடுத்த சேசிஸ எடுத்து ஆக்சிடெண்ட் ஆன ஆம்புலன்ஸ்ல மாத்தி கொடுத்தேன்.

திருட்டு வண்டிய சேஸ் மாத்தி

இந்த பழக்கத்த வச்சிகிட்டு, புதுசா ஒரு வண்டிய கொண்டாந்து அதுல இருக்க சேஸ்-அ இதுல மாத்தி கொடுனு கேட்டாரு. முடியாதுனு மறுத்துட்டேன். அதுதான் எனக்கும் அவருக்கும் முரண்பாடா ஆச்சு.

திடீர்னு ஒருநாள், திருட்டு வண்டிய சேஸ் மாத்தி விக்கிறேன்னு, என்னை பத்தி நீதான் போலீசில் போட்டு கொடுத்திட்ட. உன்னால எனக்கு 25 இலட்சம் நட்டமாயிருச்சி. அதுக்கு ஃபைன் 7 இலட்சம் கொடுக்கனும்னு மிரட்ட ஆரம்பிச்சாரு. கேட்ட பணம் கொடுக்கலைனா உன் புள்ளைய கடத்திடுவேனு வேற மிரட்டினாரு.

ராமஜெயம்
ராமஜெயம்

என்னோட கஸ்டமர்ஸ் எல்லாமே பெரிய தொழிலதிபர்கள், செலிபிரட்டிகள்தான். இப்போ எல்லாமே, சாஃப்ட்வேர் மயமாகிடுச்சி. ஒவ்வொரு பிராண்டுக்கும் தனித்தனியா லேப்டாப் வச்சி ஸ்கேனிங் செஞ்சுதான் சர்வீஸ் பண்ணவே முடியும். 12 லேபர்ஸ் வச்சி இந்த பிசினஸ ரன் பன்னிட்டு இருக்கேன். இது ஆட்டோமேசன் தொடர்பான தொழில்ங்கிறதால, நாங்களும் அதுக்கேத்த மாதிரி அப்டேட் ஆகனும். என்னோட பிசினஸ பார்க்கவே நேரம் சரியா இருக்கும். இதுல பிரபாகரனோட டார்ச்சர்ல தொழில சரியா கவனிக்க முடியல. இவனால, நம்ம புள்ளையோட உசுருக்கும் பார்க்குற தொழிலுக்கும் பாதகம் வந்துற கூடாதுனு மூனு தவணையில மொத்தம் 6,40,000.00 கொடுத்திருக்கேன்.

சிபிசிஐடி போலீசார் பொறி

கடைசியில, பிரபாகரனுக்கு பயந்துபோயி நான் கொடுத்த பணமே எனக்கு பிரச்சினையாயிருச்சி. பிரபாகரனுக்கு எதுக்கு நீ இலட்சக்கணக்குல காசு கொடுத்தனு, என்ன தேதியில, எங்க வச்சி, யாரை வச்சி, எவ்வளவு பணம் கொடுத்தேனு புள்ளி விவரத்தோட சிபிசிஐடி போலீசார் கேட்டப்போ நானே உறஞ்சி போயிட்டேன். ஏதோ எனக்கும் பிரபாகரனுக்கும் தப்பான டீலிங் இருக்குமோனு சந்தேகத்தோட கேட்டாங்க. நடந்தத சொன்னேன். கண்டிச்சு அனுப்பி வச்சாங்க. பிரபாகரன் சாவகாசத்தால இவ்வளவு தொல்லைகளை அனுபவிச்சி வர்றேன்.” என விழிகளில் நீர் கசிய, விலகாத பீதியோடு பேசி முடித்தார் ராமகிருஷ்ணன்.

நம்பிக்கையான சோர்ஸ்கள் சிலரிடமும், போலீசு வட்டாரத்திலும் விசாரித்த வகையில், ஆம்புலன்ஸ் பிரபாகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.

சர்வீஸ் என்ற பெயரில் இவர் செய்த வேலையே வெளியில் சொல்லமுடியாத வேறு

ஸ்ரீ தாயார் ஹோம் (நர்சிங்) கேர் சர்வீஸ்
ஸ்ரீ தாயார் ஹோம் (நர்சிங்) கேர் சர்வீஸ்

”ஆம்புலன்ஸ் ’சேவை’ மட்டுமில்லை; ஸ்ரீ தாயார் ஹோம் (நர்சிங்) கேர் சர்வீஸ் என்ற பெயரில் இவர் செய்த வேலையே வெளியில் சொல்லமுடியாத வேறு ரகம்.” என பகீர் கூட்டினார், அவரைப் பற்றி நன்கறிந்த நண்பர் ஒருவர். ”வயதானவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு நர்சுகளை வீட்டிற்கே அனுப்பி சேவை செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஆட்களை அனுப்பி வைப்பார். அந்த நோயாளியின் மகனோ, மருமகனோ சபல புத்தியுடன் இருப்பாரேயானால் அவ்வளவுதான். அனுப்பிய பெண்களை அவர்களோடு நெருக்கமாக பழக வைத்து போட்டோ – வீடியோ எடுத்து வைத்துக்கொள்வார். பின்னர் அதைக் காட்டியே அவரை மிரட்டி பணத்தையும் பறித்துவிடுவார். இதே பாணியில், பைனான்சியர் ஒருவரை மிரட்டி 13 இலட்சம் வரையில் கறந்திருக்கிறார். சபலத்திற்கு இடமில்லாத இடங்களில் தங்க நகைகளை திருட வைப்பார். நவல்பட்டு போலீஸ் ஸ்டேசனில் நகை திருடியதாக வழக்கே பதிவாகியிருக்கிறது. சமீபத்தில்கூட, உறையூரில் ஒரு வீட்டில் திருடி வகையாய் மாட்டிக்கொண்ட பிரபாகரன் திருடிய நகையை திருப்பிக்கொடுத்து போலீசு கேசு ஆகாமல் கமுக்கமாக அமுக்கிவிட்டதாக” சொல்கிறார் நண்பர் ஒருவர்.

ஆம்புலன்ஸ் பிரபாகரன்
ஆம்புலன்ஸ் பிரபாகரன்

தில்லைநகர் காவல் நிலையத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்துவதில் அடாவடி செய்து கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவாகி  வழக்கிலிருந்து விடுதலையாகியிருக்கிறார்.

திருச்சி ஜி.எச். காவல் நிலையத்தில் தள்ளுவண்டிக்காரர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கில் நீதிமன்ற காவலுக்கு சென்று  பிணையில் வெளிவந்திருக்கிறார். இதே காவல் நிலையத்தில் 2013 – இல் ஒரு வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

உறையூர் காவல் நிலையத்தில், ஸ்ரீ அம்பிகா காம்ப்ளக்ஸ் கடையின் பூட்டை உடைத்து தகராறு செய்ததாக பதிவான  வழக்கில், நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையின் உத்தரவின் அடிப்படையில் பிணையில் வெளிவந்திருக்கிறார். இதே காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கில் ஏ-2 ஆக நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பதிவான இரு வழக்குகளிலிருந்து விடுதலையாகியிருக்கிறார். திருவெறும்பூர் PROHIBITION ENFORCEMENT WING – இல் ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறது.

பொன்மலை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவாகி விடுதலையாகியிருக்கிறார். கே.கே.நகர் காவல் நிலையத்தில், ஒரு வழக்கு ; பாலக்கரை காவல் நிலையத்தில் ஒருவழக்கு என ஆம்புலன்ஸ் பிரபாகரனுக்கு எதிராக திருச்சி மாநகர் – மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

இறுதியாக, திருச்சி ஜி.எச். போலீஸ் ஸ்டேஷனில், மெக்கானிக் ராமகிருஷ்ணனை கத்தியை காட்டி பணம் பறித்த புகார் தொடர்பான வழக்கில் நிபந்தனை பிணையில் வெளியே வந்தவர் காலை மாலை என இருவேளையும் கையெழுத்திட்டு வந்த நிலையில்தான் தற்போது கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Trichy GH Police Station
Trichy GH Police Station

இத்தகைய குற்றப்பின்னணி கொண்ட ஆம்புலன்ஸ் பிரபாகரன், பா.ம.க.வின்  பாட்டாளி தொழிற்சங்க திருச்சி மத்திய மாவட்ட செயலாளராக வெள்ளையும் சொள்ளையுமாக பந்தாவாக வலம் வந்திருக்கிறார். மிக சமீபத்தில்தான், இவரை பா.மக.வின் அடிப்படை பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.

தென்தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் சிலரின் நட்பு வட்டத்தில் இருப்பதன் காரணமாகவே, இதுபோன்ற இல்லீகல் வேலைகளில் இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடியிருக்கிறார் பிரபாகரன் என்கிறார்கள். குறிப்பாக திருட்டு வண்டிகளுக்காகவே பிரபாகரனைத்தான் நாடுவார்கள் என்கிறார்கள். பிரபல ரவுடிகளுக்காக ஆஜராகும் வக்கீல் ஒருவர்தான் ஆம்புலன்ஸ் பிரபாகரன் தொடர்பான வழக்குகளையும் கவனித்துவருவதாகவும், இறுதியாக மெக்கானிக் ராமகிருஷ்ணனை மிரட்டி வாங்கிய பணத்தைக்கூட ஒரு பிரபல வக்கீல்தான் இடைத்தரகராக இருந்து வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

லோக்கல் போலீசாரைவிட, சிபிசிஐடி போலீசார் பிரபாகரனை பற்றிய அனைத்து புள்ளி விவரங்களையும் விரல் நுணியில் வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். மிக முக்கியமாக, ராமஜெயம் கொலை வழக்கின் பிரதான முடிச்சு பிரபாகரன் வசம் இருப்பதாக அவர்கள் கருதியதாலேயே, கடைசிவரை அவர்களின் விசாரணை வளையத்திற்குள் வைத்திருந்தார்கள் என்கிறார்கள்.

பிரபாகரன் வழியாக கைமாறிய, வெளிமாநிலம் அல்லது மாவட்டத்திலிருந்து கடத்தி அல்லது திருடி கொண்டு வரப்பட்ட வெர்ஷா மாடல் வாகனங்களுள் ஒன்றைத்தான் கொலையாளிகள் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று திடமாக நம்புகிறார்கள். வெளிமாநில பதிவெண் கொண்ட வெர்ஷா மாடல் வாகனம் ஒன்று, ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னதாகவே, ஒரு குறிப்பிட்ட பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தகவலும் சிபிசிஐடி போலீசாரை எட்டியிருக்கிறது.

தென்னூர் மெக்கானிக் கடையில் வெர்ஷா கார்

குறிப்பாக, ஸ்கிராப் ரமேஷ் என்பவரிடமிருந்து தென்னூரைச் சேர்ந்த இப்ராஹிம் ஷா என்பவருக்கு கைமாறிய வெர்ஷா Py02 என்று தொடங்கும் பதிவெண் கொண்ட காரை ஆம்புலன்ஸ் பிரபாகரன் வாங்கியிருக்கிறார். அந்த வெர்ஷா காரைத்தான் அவர் பயன்படுத்தியும் வந்திருக்கிறார். ராமஜெயம் கொலை நடந்த போது அந்த கார் பிரபுவிடம் இருந்திருக்கிறது.  அந்த வெர்ஷா காரை யாரிடம் விற்றார்? அல்லது, அவர் பயன்படுத்திவந்த சமயத்தில் யாருக்கெல்லாம் இரவலாக கொடுத்தார்? என்ற குறிப்பான கேள்விக்கான முடிச்சு ஆம்புலன்ஸ் பிரபாகரன் வசம் இருந்ததால் தான் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக சொல்கிறார்கள். ஆம்புலன்ஸ் பிரபாகரன் அவிழ்க்கும் அந்த முடிச்சில்தான், ராமஜெயம் கொலை வழக்கிற்கான விடையும் அடங்கியிருக்கிறது என்பதால்தான் ஆம்புலன்ஸ் பிரபாகரனை நெருக்கியிருக்கிறார்கள், சிபிசிஐடி போலீசார்.

வண்டியை கொடுத்ததாக இப்ராஹிம்ஷாவே நேரில் சொன்ன போதும், ”அவன் சொன்னால் நான் ஒத்துக்கனுமா”னு முரண்டு பிடிச்ச பிரபாகரனை, போலீசு பாணியில் விசாரிக்க வண்டியை வாங்கியதை மட்டும் ஒப்புக்கொண்டிருக்கிறான். அப்போதும் முழு உண்மையை சொல்ல முன்வராமல், முடிந்தவரை மழுப்பியே வந்திருக்கிறான்.

நண்பனை சிக்க வைக்க திட்டம் போட்ட பிரபு 

ஆம்புலன்ஸ் பிரபாகரன்
ஆம்புலன்ஸ் பிரபாகரன்

இதற்கிடையில், ஒருகாலத்தில் ஸ்கிராப் ரமேஷ் உடன் ஒன்றாக தொழில் செய்து பின்னர் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து தனியே தொழில் செய்துவரும் குருமூர்த்தி என்கிற குருவின் உதவியை நாடி சென்றிருக்கிறான். ”இப்ராஹிம்ஷா-விடம் வாங்கிய வாகனத்தை உன்னிடம் கொடுத்துவிட்டதாக நான் சொல்லிவிடுகிறேன். நீயும் அதை வாங்கி அப்போதே ஸ்கிராப் செய்துவிட்டேன் என்று சொல்லிவிடு. அப்போதான் இந்த ஒரு வண்டியோட முடிஞ்சிரும். இல்லைன்னா, நாம வாங்கி வித்த எல்லா வண்டிய பத்திய ஜாதகம் எல்லாத்தையும் போலீசுகிட்ட சொல்ல வேண்டி வரும். அது நமக்கு எல்லோருக்குமே ஆபத்துனு…” தனது பழைய தொழில் கூட்டாளியிடம் ‘அன்பாக’ மிரட்டியிருக்கிறான், ஆம்புலன்ஸ் பிரபாகரன்.

இந்த உண்மையையும் சிபிசிஐடி போலீசாரிடம் குரு போட்டு உடைக்க, வேறு வழியின்றி சரண்டர் ஆகியிருக்கிறான் ஆம்புலன்ஸ் பிரபாகரன். ”வயசாகி போச்சு நிறைய வண்டியை கைமாற்றி விட்டிருக்கிறேன். எந்த வண்டி? எப்போது? யாரிடம் கைமாற்றினேன், அல்லது பயன்படுத்த கொடுத்தேன் என்பதை நினைவுபடுத்தி சொல்ல முடியவில்லை” என்றே பதிலளித்திருக்கிறான், பிரபாகரன்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அங்குசம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போதும் இதையே தான் சொன்னார்.

கடைசியாக, தப்பிக்க வேறு வழியின்றி அப்ரூவராக மாறும் மனநிலைக்கே ஆம்புலன்ஸ் பிரபாகரன் வந்துவிட்டதாகவும், குறிப்பாக டிச-12 அன்று சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் இரவில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருப்பதில் உள்ள மர்மத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். வெளியாட்களுக்கு வாய்ப்பில்லை, ஆம்புலன்ஸ் பிரபாகரன்கூடவே பயணித்தவர்களும்.. ஆம்புலன்ஸ் பிரபாகரன் வாய் திறந்தால் பல முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால்  அவர்களில்  யாரோ ஒருவர் தான் இதனை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகமும் தற்போது வலுவடைந்து வருகிறது.

அதே நேரத்தில்  திருட்டு வாகனங்களை வாங்கி விற்கும்  வழக்குகளில்   ஆம்புலன்ஸ் பிரபாகரனோடு ஆரம்ப காலத்தில் ஒன்றாக பயணித்த ராஜாமணி என்பவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அதே அலுவலகத்தில் சரக்கு அடித்து கொண்டாடியதாகவும், அந்த அலுவலகத்திலிருந்து ராஜாமணி கிளம்பிப் போன சில நிமிடங்களில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேலும், ஆம்புலன்ஸ் பிரபாகரனின் நிழலாக அவருடனே பயணித்துவந்த மேனேஜர் ராஜாவுடன் ஆம்புலன்ஸ் வாடகை கணக்கு வழக்குகளில் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும்; மனஸ்தாபம் வாக்குவாதமாக மாறி ராஜாவின் மனைவியை அவமானப்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் பிரபாகரன் பேசிவிட்டதாகவும் பின்னர் மீண்டும் ராஜாவிடம் சமாதானம் பேசி பழையபடி கூடவே இருக்க நேரடியாக சென்று அழைத்ததாகவும் சொல்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் பிரபுவை கொலை செய்த குரூப்
ஆம்புலன்ஸ் பிரபுவை கொலை செய்த குரூப்

தொடக்கத்தில், மண்ணச்சநல்லூர் குணா, அரியமங்கலத்தை சேர்ந்த அப்பு (எ) அரிகிருஷ்ணன் ஆகியோருடன் ஆம்புலன்ஸ் பிரபாகரன் நெருக்கமாக இருந்து வந்ததாகவும். தற்போது சில முக்கிய ரவுடிகளுடன் தொடர்பில் இருப்பதாவும் விசாரணையில் தெரிகிறது. இந்த அப்பு (எ) அரிகிருஷ்ணன் வேறு யாருமல்ல; ஆம்புலன்ஸ் பிரபாகரன் கூடவே இருக்கும் மேனேஜர் ராஜாவினுடைய மனைவியின் சொந்த சகோதரி மகன் தான் என்கிறார்கள். தற்போது, போலீசாரின் விசாரணைக்குள்ளாகியிருக்கும் கொலையாளிகளுள் மூவர் அரியமங்கலத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

திருட்டு வாகனத்தை வாங்கி விற்ற தொழில்;

தமிழகம் முழுவதும் பிரபலமான ரவுடிகளுடனான தொடர்பு; அவர்களுக்கு திருட்டு வாகனங்களை சப்ளை செய்தார் என்ற குற்றச்சாட்டு; போலீசின் பிடியிலிருந்து ரவுடிகள் தப்புவதற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு; எங்கே அப்ரூவர் ஆகி நம்மைப்பற்றிய ரகசியங்களையெல்லாம் உடைத்துவிட போகிறார் என்ற அவரது பழைய கூட்டாளிகளின் அச்சம் – என பல திருகுகளை கொண்ட சிக்கல் நிறைந்த வழக்காக போலீசாருக்கு சவால் விட்டிருக்கிறது, இந்த ஆம்புலன்ஸ் பிரபாகரன் கொலை வழக்கு!

லோக்கல் போலீசார் மற்றும் சிபிசிஐடி போலீசாரின் கடந்த பத்தாண்டு கால கடும் உழைப்பின் பலனாய் வெர்ஷா வாகனத்தில் வந்து நின்றது, ராமஜெயம் கொலை வழக்கு. வழக்கின் ஒற்றைப் புள்ளிக்காக – முற்றுப்புள்ளிக்காக காத்திருந்த வேளையில் … கொம்பன் ஜெகன் என்கவுண்டர், ஆம்புலன்ஸ் பிரபாகரன் படுகொலை என அடுத்தடுத்து இரு புள்ளிகள் சேர மூன்று புள்ளிகளோடு தொடர்கிறது ’மர்மம்’ !

 

 

அங்குசம் புலனாய்வு குழு

வீடியோ லிங்:

https://youtu.be/bs8DOOo1-XY?si=6XuTv6Hoy6zl5aF6

Leave A Reply

Your email address will not be published.