செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காவி அரசியலும் – இந்துத்துவா நடைமுறையும் – தகஇபெ மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் !
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை 28.04.2024 அன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மூ. வீரபாண்டியன் தொடக்கவுரை நிகழ்த்தினார். பெருமன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மருத்துவர் த. அறம், பொருளாளர் ப.பா. ரமணி, துணைத் தலைவர் எம். செல்வராஜ் ஆகியோரும் பேசினர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் கவிஞர் கோ. கலியமூர்த்தி, மாநகர் மாவட்டச் செயலர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருக்கின்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வர் இருந்து வரும் நிலையில் அவரது தலைமையில் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்டாமலும், துணைத் தலைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்களைப் புறக்கணித்தும் ஆளுநர் ரவியுடன் இணைந்து செயல்படும் இயக்குநர் சந்திரசேகரன் ஆய்வுப்பணியில் இந்துத்துவ நடைமுறைகளையும் காவி அரசியலையும் புகுத்த முயல்கிறார். நிறுவனத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. நிர்வாகச் சிக்கல்களும் ஏற்படுகின்றன. எனவே, உடனடியாக தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்ட வேண்டும். பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காவி அரசியலைப் புகுத்துவதையும் ஆளுநரின் தலையீட்டையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்துகிறது.
2. தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தி தண்டனை வழங்குவதை (Corporal punishment) தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.