அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் ஆளுங்கட்சி எம்எல்ஏ! தொகுதி மக்களை தலை சொறிய வைத்த ஆம்பூர் எம்எல்ஏ!
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.ஆ.செ.விஸ்வநாதன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.
சர்ச்சை-1:
கடந்த 2020 இல், ஆம்பூர் பொன்னப்பள்ளி தடுப்பனை பார்வையிட சென்ற எம்எல்ஏ வில்வநாதனின் செருப்பை, வெங்கடசமுத்திரம் தி.மு.க ஒன்றிய செயலாளர் சங்கர் என்பவர் கையில் தூக்கிக்கொண்டு சென்றது சர்ச்சையானது. 6500 மதிப்புள்ள செருப்பு அது எனவும்; செருப்பை தூக்கிய ஒ.செ. பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதும் அப்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
சர்ச்சை-2 :
கடந்த 2021-இல் நாட்றம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு கலந்துக்கொண்ட அரசு விழாவில் , எம்.எல்.ஏ. தூங்கி வழிந்தார் என்பது சர்ச்சைக்குள்ளானது.
சர்ச்சை-3 – கடந்த 2022 – இல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான மொத்த மதிப்பீட்டில் உனக்கு 40% எனக்கு 60% என கறார் காட்டி ஊராட்சி மன்றத்தலைவர்களிடம் பேசிய காணொளியும்; அப்போது, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி எங்களுக்கு 50% தருகிறார் என ஊராட்சிமன்றத்தலைவர் ஒருவர் சொல்ல, அதற்கு “திருப்பத்தூர், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏக்கள் பிரிச்சி தர்றாங்கன்னா அதன் பின்னாடி வேறு விவகாரம் இருக்கு” என பொடி வைத்து எம்.எல்.ஏ. ஆ.செ.விஸ்வநாதன் பேசியதும் சர்ச்சையானது.
சர்ச்சை – 4 : கடந்த 2022 – இல், நந்தன் என்ற முதியவருக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தை எம்.எல்.ஏ. அபகரிக்க முயற்சிப்பதாகவும்; இது தொடர்பாக காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்கூறி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, “என் சாவுக்கு எம்.எல்.ஏ.தான் காரணம்” என மண்ணெண்ணெய் கேனோடு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்ச்சை -5 : கடந்த டிசம்பர் – 2023 இல், ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ் என்வர் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கிரயம் பேசி முன்பணமும் வாங்கிவிட்டார். இதற்கிடையில், மகேஷை தொடர்புகொண்ட எம்.எல்.ஏ. சுபாஷிடம் கிரயம் பேசியதைவிட நான் அதிகம் தொகை தருகிறேன். இடம் எனக்குத்தான் வேண்டும் என அடம்பிடித்ததாகவும்; அதன்படி, முன்பணம் கொடுத்த சுபாஷுக்கு தெரிவிக்காமலேயே, மேற்படி நிலத்தை எம்.எல்.ஏ.வின் மனைவி பெயரில் பத்திரமும் பதிவு செய்திருக்கின்றனர்.
இதில், முன்பணம் கொடுத்த சுபாஷ் இடத்தை பதிவு செய்வதற்காக சம்பந்தப்பட்ட இடத்தை அளக்க முயற்சித்தபோதுதான் இந்த சம்பவமே தெரியவந்திருக்கிறது. அப்போதும்கூட, எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும் அடியாட்களுமாக சேர்ந்துகொண்டு சுபாஷிடம் சண்டை போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
“முன்பணமாக கொடுத்த எனது பணத்தை மீட்டுத்தரவேண்டும்; கிரையம் பேசி முடித்த இடத்தை எம்.எல்.ஏ. தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்திருப்பதை குறிப்பிட்டு உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.” என்கிறார், சுபாஷ்.
அடுத்தடுத்து தொடர் சர்ச்சைகள் எம்.எல்.ஏ.வை சுற்றி வட்டமடிப்பது குறித்து கருத்துக் கேட்பதற்காக, ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதனின் தொலைபேசி எண்ணிற்கு அங்குசம் சார்பில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஒரு வழியாக மற்றொரு எண்ணில் லைனில் வந்தவர், “நான் நிாயமான முறையில் வாங்கி உள்ளேன் சார் பொய்யான வீடியோ பரப்புகிறார்கள் சார் என முடித்துக்கொண்டு போனில் பேசினால் நல்லா இருக்காது சார்” என ரத்தினம் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
கழக உடன்பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ”கட்சி நலன், தொகுதி மக்கள் நலன் என்பதைவிட, சொந்த குடும்பத்தின் நலன்தான் முக்கியம்னு” இருக்காரு எம்.எல்.ஏ. என சலித்துக்கொண்டனர் சீனியர் நிர்வாகிகள் சிலர். “அடுத்தடுத்து இரண்டு முறை ஜெயிச்சாலும், தொகுதி மக்கள் மற்றும் சொந்த கட்சிக்காரன்கிட்டயே கூட அதிருப்தியைத்தான் சம்பாதித்திருக்கிறார்.
தலைமைக்கும் பல புகார்கள் சென்றிருக்கிறது. ஆனாலும், அமைச்சர் துரைமுருகன் அவரது மகன் எம்.பி. கதிர் ஆனந்த ஆகியோரின் ஆசி இருப்பதால் தப்பித்து வருகிறார்.” என்கிறார்கள், இன்னும் சிலர்.
”சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா, தலைமை?” என தொகுதி மக்களையும், கழக உடன்பிறப்புக்களையும் தலையைச் சொரிய வைத்துவிட்டது, இந்த விவகாரம்!
– மணிகண்டன்.