நள்ளிரவில் பச்சமலை காட்டுக்குள் அதிரடியாக களம் இறங்கிய எஸ்.பி வருண்குமார் !

0

பச்சமலை காட்டுக்குள் கள்ளச்சாராயம் : நேரடியாக களமிறங்கி அதிரடி காட்டிய எஸ்.பி.வருண்குமார் !

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால், மக்கள் கள்ளச்சாராயத்தை நாடி சென்றுவிடுவார்கள் என்ற காரணத்தை வைத்துத்தான் அரசு மதுபானக் கடைகளின் இருப்பு நியாயப்படுத்தப்படுகின்றன. என்னதான் கெடுபிடிகள் காட்டினாலும், கள்ளச்சாராயம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படாத நிலைதான் பொதுவில் நிலவுகிறது. போலீசாரின் மறைமுக ஆதரவு இல்லாமல், போதைப்பொருட்களின் புழக்கம் சாத்தியமில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் குட்கா விவகாரத்தில் மாநில அமைச்சர் உள்ளிட்டு உயர் போலீசு அதிகாரிகள் வரையில் உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் அவை தொடர்பான விசாரணைகள் தொடர்வதும் குறிப்பிடத்தக்க விசயம்.

நள்ளிரவில் பச்சைமலை
நள்ளிரவில் பச்சைமலை

மிக முக்கியமாக, சமீபத்தில் போலீசு உயர் அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீசு அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், கள்ளச்சாராயம், கஞ்சா, போதை பாக்குகளின் புழக்கம் இல்லாத அளவிற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அறிவுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போதை ஒழிப்பு நடவடிக்கைகளும், மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சார இயக்கங்களையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரையில், மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அவ்வப்பொழுது, அதிரடி ரெய்டுகளை நடத்தி கள்ளச்சாராய பேரல்களை அழிப்பதை வழக்கமாக்கியிருக்கிறார்.

துறையூர் பச்சமலை பகுதியில் ஏற்கெனவே ரெய்டு நடத்திய நிலையில், அதே பகுதியில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக, எஸ்.பி.க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் கார்த்தி (Gr1pc 2963 ) மற்றும் விக்னேஷ் (Gr1895) ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார் களமிறக்கப்பட்டனர்.

துறையூர், சிலையூர் வன்னாடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (எ) இளையராஜா கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகவும், இதனை அருகாமையில் உள்ள கிணத்தூர், நொச்சிக்குளம், புதூர், தண்ணீர் பள்ளம், சின்ன வல்லம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விற்பணை செய்து வருவதையும் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, எஸ்.பி.வருண்குமார் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட அதிரடி ரெய்டில், காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த 1200 லிட்டர் அளவுள்ள 8 சாராய ஊறல் அடங்கிய பேரல்கள் மற்றும் 8 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றியுள்ளனர். துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் ( cr no: 739/23 ) வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

பச்சைமலையில் எஸ்.பி
பச்சைமலையில் எஸ்.பி

மிகக்குறுகிய காலத்திற்குள்ளாக துறையூர் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ரெய்டுகளை நடத்திவிட்டார் எஸ்.பி.வருண்குமார். இதன் பின்னணி சுவாரஸ்யமானது. பச்சைமலை என்ற பெயருக்கேற்றாற் போலவே, கோம்பை, வண்ணாடு, ஆத்திநாடு, தென்புறநாடு உள்ளிட்ட மலை கிராமங்களை கொண்ட பகுதி இது. பழங்குடியினர் வாழும் பகுதியாகவும் உள்ளது. தொடர்மழை காலங்களில் காடு அச்சு திருத்துதல் என்ற பணியை மேற்கொள்வது வழக்கம். சமவெளிப் பகுதிகளில் டிராக்டரை கொண்டு உழுதல் போல எளிதானதல்ல இந்த அச்சு திருத்தும் பணி. பலரும் பெரும்கூட்டமாக இணைந்து இப்பணியை மேற்கொள்வார்கள். அப்போது, அவர்களது உடல் சோர்வை போக்கும் வகையில், அவர்களின் தேவைக்காக ”பலசரக்கு” என்ற பெயர் கொண்ட பானத்தை தயாரித்து பருகி வந்திருக்கின்றனர்.

காலப்போக்கில், இதில் பல சேர்மானங்கள் சேர்ந்து கள்ளச்சாராயமாக உருமாறியிருக்கிறது. சொந்த தேவைக்கானது என்பது நாளடைவில் வியாபார நோக்கில் காய்ச்சுவதாக மாறியிருக்கிறது.

அவ்வாறு, சமூகவிரோதமாகவும் வணிக நோக்கிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது கண்டறியப்பட்டால், அக்குற்றம் நிகழ்ந்த மொத்த மலைக்கிராமத்தையுமே ஒதுக்கிவைக்ககூடிய ஊர்க்கட்டுப்பாடுகளும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் இந்தக் கட்டுப்பாடுகளும் காணாமல் போயிற்று.

பச்சைமலைக்கும் கள்ளச்சாராயத்துக்கும் உள்ள தொடர்பு இதுவென்றால்; கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலுக்கும் அதனை தடுக்க வேண்டிய போலீசாருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில்தான் லோக்கல் போலீசுக்கே தெரிவிக்காமல் எஸ்.பி.யே நேரடி ரெய்டு நடத்திய நிலையில் மிகக்குறுகிய காலத்தில் மீண்டும் எஸ்.பி.யே தனிப்படையை வைத்து அடுத்த ரெய்டையும் நடத்த வேண்டிய தேவை எதனால் எழுந்தது என்ற கேள்வியும் இயல்பாய் எழுகிறது.

கைது செய்யப்பட்ட கார்த்திக் (எ) இளையராஜா
4 bismi svs

மிக முக்கியமாக, கடந்த செப்டம்பர்-20 ஆம் தேதி துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தில் இளைஞர் ஒருவர் கட்டையால் அடித்து கொல்லப்பட்ட நிலையில், அவரது சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பச்சைமலை பகுதியில் உள்ள தாளூர் கிராமத்தில் புதைத்துச் சென்றது அம்பலமானது.

மூலக்காடு சோதனைச்சாவடியை கடக்காமல் எவர் ஒருவரும் மேற்படி மலைக்கிராமங்களுக்கு சென்றுவிட முடியாது என்ற நிலையில், இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு போலீசார்தான் விடை சொல்ல வேண்டும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களும் இதே சோதனைச்சாவடி வழியாகத்தான் எடுத்துச்சென்றிருக்க வேண்டும். கட்டையால் அடித்து சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போனதையே கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்ட (வன) போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களையா தடுத்து நிறுத்தியிருக்கப் போகிறார்கள்?

போலீசாரும் வனத்துறையினரும் கூட்டாக இணைந்து, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் வழிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மிகமுக்கியமாக துறையூர் பகுதியில் மூலக்காடு சோதனைச்சாவடி மற்றும் உப்பிலியபுரத்தில் உள்ள சோபனபுரம் சோதனைச்சாவடி ஆகியவற்றில் முறையான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பை உத்திரவாதப்படுத்தினாலே பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுக்கலாம் என்கிறார்கள்.

துறையூரைத் தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையம் சன்னாசி கொட்டாய் காட்டுப் பகுதியில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 6 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களைக் கைப்பற்றி மண்ணச்சநல்லூர் போலீசு நிலையத்தில் வழக்குப்பதிவு (cr no : 328/23 ) செய்து தப்பி ஓடிய திருப்பதியை தேடி வருகின்றனர்.

குட்கா மற்றும் கூல் லிப் விற்பனை தொடர்பாக கடந்த அக்டோபர் 6 முதல் 9 ஆம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், 63 வழக்குகள் பதியப்பட்டு 70 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க விசயமாக, பள்ளி கல்லூரிகளின் அருகில் போதை பொருட்கள் விற்பணையில் ஈடுபட்ட 12 நபர்கள் மீது The Juvenile Justice (Care and Protection of Children) Act இன்படி நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ரெய்டு நடவடிக்கைகள் அனைத்தும், மாவட்ட எஸ்.பி.யின் தனிப்பட்ட எண்ணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சைமலையில் எஸ்.பி
பச்சைமலையில் எஸ்.பி

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக V. வருண் குமார் ஐ.பி.எஸ்., பொறுப்பேற்றபோதே, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார். அறிவித்த நாள் முதலாகவே, நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும், பயனுள்ள பல தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, புகார் கொடுப்பவர்களின் இரகசியம் காக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் போலீசார் வழங்கியிருப்பதால், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுவதாக தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு தொலைபேசி எண் வழியே பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், சமயபுரம் பகுதியில் தனியார் லாட்ஜ்களில் விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு (cr no : 314/23 ) செய்த சமயபுரம் போலீசார் மேலாளர் உள்ளிட்டு இருவரை கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து மீட்ட பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை மட்டுமல்ல; சமூகவிரோத செயல்கள் எதுவாயினும் 9487464651 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், எஸ்.பி. வருண்குமார்.

தமிழகத்தின் எங்கேனும் கள்ளச்சாராயச் சாவுகள் நடைபெறும் நேர்வுகளில், அதற்கடுத்த ஒரு வாரம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய பேரல்கள் – ஊறல்கள் அழிப்பு என்று சம்பிரதாய செய்திகளாக செய்தித்தாள்களில் முக்கிய இடம்பெறும். அடுத்தவாரம் வழக்கமான பணிக்கு திரும்பிவிடுவார்கள்.

திருச்சியை பொருத்தவரையில், எஸ்.பி.வருண்குமார் தொடர்ச்சியாக அதிரடிகளை அரங்கேற்றிவருகிறார் என்பது வரவேற்கத்தக்கது – பாராட்டுக்குரியது. அதேசமயம், சினிமா படக்காட்சிகளைப் போல, எல்லா இடத்துக்கும் எஸ்.பி.யே வந்து ரெய்டு நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்காமல், அந்தந்த ஊர்களில் லோக்கல் போலீசாரே இதுபோன்ற ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!

– அங்குசம் புலனாய்வு குழு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.