தோக்குறமோ ஜெயிக்கிறோமோ கடைசி வரை சண்டை செய்யணும் … தல தோணியின் ஸ்டைல் !
"கவலைப்படாதே, அமைதியாக இரு, பார்த்துக் கொள்ளலாம்" என்ற அந்த உடல் மொழியினால் எழுச்சியூட்டப்பட்ட அந்த இளம் வீரர் அடுத்த சில பந்துகளில் இருந்து ஒரு அற்புதமான ரன் அவுட்டை அணிக்குப் பரிசளித்தான்.
“தல”யப் பாரு ! அவரு “தலை”யைப் பாரு ! எங்கள் தலை(வன்) தோணிய பாரு !
மகேந்திர சிங் தோனி தனது ஹேர்ஸ்டைலை அடிக்கடி மாற்றுபவர். ஒவ்வொரு ஐபிஎல் மேட்சிலும் ஒவ்வொரு ஹேர் ஸ்டைலில் வருவது தோனியின் வழக்கம். தோனியின் ஹேர்டைலுக்கு என்றே தனியாக ரசிகர் பட்டாளம் இருக்கும். தோனியின் ஆரம்ப கால அடையாளமே அவரது ஹேர்ஸ்டைல்தான். தோனியைப் போன்றே ஹேர் ஸ்டைலில் வரும் ரசிகர்களும் உண்டு. ஆண் ரசிகர்களை விட தோனியின் ஹேர்ஸ்டைலுக்கு பெண் ரசிகள்கள் தான் அதிகம். குறிப்பாக, தோனிக்கு சென்னையில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம்.
2024 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோனி பேட்டிங்கில் வெறும் நான்கு பந்துகள் மட்டுமே ஆடி இருந்தாலும் அதில் மூன்று சிக்ஸர் அடித்து போட்டியை மாற்றினார். இந்த நிலையில் தோனி இந்த ஐபிஎல் தொடரில் காயத்துடன் தான் விளையாடி வருகிறார். அவர் எந்த அளவுக்கு வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடுகிறார் என யாருக்கும் தெரியாது என சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் கூறி இருக்கிறார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான IPL – 2023 போட்டிக்குப் பிறகு ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக “தல” தோணியும், அணியினரும் சேப்பாக்கம் திடலைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு டென்னிஸ் மட்டையால் மென்பந்துகளை அரங்கில் அமர்ந்து “தோணி, தோணி” என்று ஆரவாரமிடும் ரசிகர்களுக்கு நடுவில் அடித்தபடி நடக்கும் கூர்மையான அவரது கண்களை பார்த்துக் கொண்டிருந்தோம்.
மஞ்சள் சீருடை அணிக்கு நடுவில் திடீரென்று ஒரு வயதான மனிதர் ஓடி வருகிறார். முன்னாள் நடக்கும் மகேந்திர சிங் தோணிக்கு எதிரில் நின்று தனது நெஞ்சை நிமிர்த்தி தனது சட்டையில் கையெழுத்திடுமாறு வேண்டுகிறார். அந்த வயதான மனிதரை ஏறத்தாழ 40 ஆண்டுகளாக நாம் பார்த்திருக்கிறோம் .
இந்தியாவைப் பொறுத்தவரை அவர் கிரிக்கெட் உலகின் வசிஷ்டர். யாரிடத்திலும் அப்படி ஓடிப்போய் அவர் கையெழுத்து வாங்குவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த வயதான மனிதர் “சுனில் கவாஸ்கர்”. இந்தியாவின் கிரிக்கெட் லெஜென்டுகளில் முதன்மையானவர்.
தானாகவே இருத்தல் :
ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். வழக்கமான நம்பிக்கைகளோடு, மிகக்கடுமையான அரசியல் கொண்ட கிரிக்கெட் விளையாட்டுக்குள் இந்திய பெருநகரத்தின் இயல்பான கனவுகள் கொண்ட இளைஞனாகத்தான் அவரது நுழைவு இருந்தது.
பெரிய ஆர்ப்பாட்டங்கள், பின்புலங்கள் என்று ஏதுமில்லாமல் “Pure Merit” தகுதியோடு தான் BCCI இன் இந்திய அணிக்குள் நுழைந்தார். இந்திய அணி என்பது மிக வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் உயர் சாதி பிராமணர்களின் கோட்டை. அந்தக் கோட்டைக்குள் பிற சமூகத்தினர் நுழைவது, வெற்றிகரமாக இயங்குவது என்பது மிகுந்த மன அழுத்தம் நிரம்பியது.
விடுதலை பெற்ற இந்தியாவின் பல்வேறு துறைகளைப் போலவே கிரிக்கெட்டில் வெகு இயல்பாக இது இருந்தது. இப்படியான சூழலில் தான் தோணி அணிக்குள் நுழைகிறார். ஆனால், தனது எளிமையான பின்புலத்தை தனது திறன்களோடு ஒருபோதும் அவர் குழப்பிக் கொள்வதில்லை.
தான் சொல்ல நினைத்தவற்றை செயல்களின் மூலம் செய்து காட்டும் ஒரு புதிய யுத்தியோடு அவர் அணிக்குள் ஊடுருவினார். எந்த ஒரு சூழலிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் அவர் தயங்கியதே இல்லை. போட்டிகளும், அரசியலும் நிரம்பிய ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போன்றது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
சாதனைகளையும், திறன்களையும் தாண்டி உங்கள் பிறப்பு, வளர்ப்பு, முந்தைய நடவடிக்கைகள், உங்களுக்காக யார் “லாபி” செய்கிறார்கள் என்று பல்வேறு காரணிகளை மையமாக வைத்து நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்.
தனது துவக்க நாட்களில் ஒரு நேர்மறையான “ஈகோ”வை மதிப்பீடுகளில் கையாண்டார் மகேந்திர சிங் தோணி. ராஜ்புத் இளவரசனின் ஆழமான அமைதி பழைய பஞ்சாங்கப் பலகைகளை லேசாக அசைத்துப் பார்த்தது.
நட்சத்திரங்களை நிர்வகித்தல்:
2007 ஆம் ஆண்டின் ஒரு கோடை நாளில் ஒளியூட்டப்பட்ட நட்சத்திரங்கள், நிஜ நட்சத்திரங்கள், முன்னாள் கேப்டன்கள் என்று பல தலைவர்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்கான அணிக்கு தோணி தலைவராக நியமிக்கப்பட்டார். அமைதியாக அவர் தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டார்.
யாரையும் தொந்தரவு செய்யவில்லை, பிறரது நிரூபிக்கப்பட்ட நடைமுறைகளில் அவர் தலையிட விரும்பவில்லை. சிறந்தவற்றை எடுத்துக் கொண்டார். தனது உறுதித் தன்மையை அதில் கலந்து இன்முகத்தோடு இளம் வீரர்களைத் தட்டிக் கொடுக்கத் துவங்கினார்.
எப்போதுமிருந்த அச்சம் விலகி இளம் தலைமுறை வீரர்கள் தங்கள் திறன்கள் மதிப்பிடப்படுகின்றன என்பதை நம்ப வைத்தார். அணிக்கென்று இருந்த எதிர்மறையான பழைய பண்பாட்டு விஷயங்களை தோணி மாற்றி அமைப்பதற்கு முன்பாக தனது நம்பகத்தன்மையை நிறுவினார்.
தனது திறன்களை தொடர்ந்து பயிற்சியின் மூலமாக வளர்த்துக் கொண்டார். எந்த மாற்றத்தையும் அவர் அவசரத்தோடு செய்ய விரும்பவில்லை. வீரர்களிடையே இயற்கையாக நிகழும் திறன் குறைபாடு போன்ற விஷயங்களை செயல்திறன் மேலாண்மை என்ற புதிய திசையில் வழிநடத்தினார்.
உளவியல் மேலாண்மை குறித்த ஒரு புதிய குழுவை புதிய தொழில்நுட்ப வசதிகளோடு இந்திய கிரிக்கெட் அணிக்குள் கொண்டு வந்தவர் மகேந்திர சிங் தோணி.
வெற்றி மற்றும் ஊடக வெளிச்சத்தை நிர்வகிக்கும் கலையில் தோணி மிகுந்த முதிர்ச்சியானவர். மிகப்பெரிய வெற்றிகளின் போது அவர் தனது கால்களை தரையில் ஊன்றிக் கொள்வார். அணியினரை முன்னே நிறுத்தி பின்னணியில் ஒரு அசைக்க முடியாத தூணைப் போல நின்று மென்மையாக சிரிப்பார்.
2011 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகான கொண்டாட்டங்களை ஒரு முறை திரும்பிப் பார்த்தால் தோணி வெற்றிகளின் போது ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நிகழ்கால சாட்சியாக இருப்பார்.
மிக இளம்வயதில் அளவற்ற பணத்தையும், புகழையும் நிர்வகிப்பது என்பது மிக எளிதான வேலையில்லை, அதற்கு மிகச்சிறந்த நிலைத் தன்மையும், பணிவும் தேவைப்படும்.
பல திறன் வாய்ந்த இளம் வீரர்கள் இந்த இடங்களில் தங்களைத் தாங்களே நிர்வகிக்க முடியாத தடுமாற்றத்தை சந்தித்து வெளியேறிக் கரைந்து போன எடுத்துக்காட்டுகள் நிறைய உண்டு. ஆனால், தோணி சமநிலையை இழக்காமல் நேர்த்தியாக வெற்றிகளையும், புகழையும் கலையையும் கற்றுக் கொண்டார்.
ஒரு தலைவனின் மிகப்பெரிய தகுதி அமைதியாகவும், குழப்பமற்ற மனநிலையுடனும் இருப்பது, மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் மகேந்திர சிங் தோணி “Perfect Example”. ஒட்டுமொத்த அணியினரின் செயல்திறனையும் அவரது அமைதி ஆறுதல் செய்கிறது, மேம்படுத்துகிறது.
அவர்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்துவதை மட்டுமில்லாமல் தங்களைத் தாங்களே நம்புவதில் அந்த அமைதி பெரும்பங்காற்றுகிறது. குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான Qualifier போட்டியில் ஒரு இளம் வீரர் பந்தைக் கோட்டைவிட்டு ஒரு கூடுதல் ரன் கொடுத்தபோது தோனியின் உடல் மொழியை நீங்கள் கவனித்திருந்தால் இது குறித்து ஒரு அற்புதமான முடிவுக்கு உங்களால் வந்துவிட முடியும்.
“கவலைப்படாதே, அமைதியாக இரு, பார்த்துக் கொள்ளலாம்” என்ற அந்த உடல் மொழியினால் எழுச்சியூட்டப்பட்ட அந்த இளம் வீரர் அடுத்த சில பந்துகளில் இருந்து ஒரு அற்புதமான ரன் அவுட்டை அணிக்குப் பரிசளித்தான்.
பல்வேறு விஷயங்களைத் தாண்டி எப்போதும் தன்னைச் சுற்றி இருக்கும் பரபரப்பான சூழலில் இருந்து உளவியல் ரீதியாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், எடுத்துக் கொண்ட வேலையை செய்து முடிப்பதற்கான அபாரமான திறமை கொண்டவர் தோணி.
பல்வேறு சர்ச்சைக்குரிய காலங்களில் அவர் ஒரு ஞானியைப் போன்ற தத்துவார்த்த பதில்களை வழங்கி ஊடகங்களையும் அதிர்ச்சியடைய வைத்தார். எந்த ஒரு தனிமனிதர் குறித்தும் எதிர்மறையாக அவர் பேசிய வரலாறு இல்லை.
கவனச் சிதறல் இல்லாமல் எடுத்துக்கொண்ட வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது ஒரு தலைவனுக்குரிய மிகப்பெரிய பண்பு என்பதை தனது தலைமைத்துவக் காலத்தில் இயல்பாக மாற்றிய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு.
இதயபூர்வமாகவும், நிறைவாகவும் வாழ்தல் என்ற பதத்தின் விளையாட்டுப் பரிணாமம் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டல், மகேந்திர சிங் தோணி தனது உள்ளுணர்வு சொல்வதைக் கேட்பவர்.
பல்வேறு சிக்கலான நேரங்களில் பந்து வீச யாரை அழைப்பது போன்ற முடிவுகளை அவர் தீர்க்கமாக எடுக்கும்போது திகைத்தவர்கள் கூட அந்த முடிவு துல்லியமாக பலனளித்த போது வியந்து அவரைப் பார்த்தார்கள்.
வெற்றியை கையாள்வதைப் போலவே தோல்வியைக் கையாள்வதும் மிக நுட்பமான மனித உணர்வு, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தோல்வி முகத்தில் இருந்தது, 2012 ஆம் ஆண்டில் நம்பிக்கைகள் மங்கிய ஒரு பொழுதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 தொடர் தோல்விகளை சந்தித்த அணியின் கூட்டு மனசாட்சி துவண்டு கிடந்தது.
ஆனால், தனியொரு மனிதராக “எங்கள் அணி மிகச்சிறந்த அணி, எனது வீரர்களால் எழுந்து மீண்டு வர முடியும்” என்று சக வீரர்களை ஆற்றுப்படுத்தினார்.
தனக்கே உரிய வகையில் மெருகேறிய ஆட்டத்திறனுடனும், எழுச்சியுடனும் அவர் அணியை மீண்டும் வெற்றியின் பாதைக்கு அழைத்து வந்து விமர்சகர்களுக்கு வழக்கம் போல செயலால் பதிலடி கொடுத்தார்.
எதிர்முகாமை ஒரு விதமான குழப்பம் மிகுந்த பதட்டத்தோடு வைத்திருப்பதில் மகேந்திர சிங் தோணியைப் போன்றதொரு விளையாட்டு வீரரை நாம் பார்க்கவில்லை.
தன்னுடைய உறுதி, அமைதி, உடல்மொழி என்று பல்வேறு நிலைகளில் ஒரு பீதியை உருவாக்கும் அவருடைய செயல்பாடுகள் உளவியல் உறுதிப்பாடுகளைக் குலைக்கக்கூடியது.
அச்சம் தரும் அவருடைய அமைதி, மரியாதையையும் சேர்த்துக் கொண்டு வருகிறது, பல தருணங்களில் அவர் எதிரணி வீரர்களையும் அரவணைத்து, ஆலோசனைகள் வழங்கி இன்னும் மேன்மையான இடத்துக்கு நகர்கிறார்.
IPL – 2023 இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான சில ஆலோசனைகளை குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு அவர் வழங்கியதாக உள்ளூர் நாளிதழ்களில் வெளியான கட்டச் செய்திகள் அவரது முதிர்ச்சியை மென்மேலும் மதிப்பு மிக்கதாக மாற்றுகிறது.
பெரும் கூட்டங்களில் நட்சத்திர வீரர்களுக்கு நிகழும் தள்ளு முள்ளு பெரிய அளவில் எங்கும் நிகழாததற்கு என்ன காரணம் என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள், அவரைச் சுற்றி நிற்பவர்கள் தன்னியல்பாக ஒரு பாதுகாப்பு வட்டத்தை உருவாக்குவார்கள். அவர் மீது யாரும் விழுந்து விடாதபடிக்கு அவரைப் பாதுகாப்பார்கள்.
அவர் எளிமையாக அணுகக்கூடியவராக இருப்பதால் தன்னை நெருங்கி வருபவர்களை எப்போதும் அணைத்துக் கொள்ளும் தன்மையுடையவராக, மக்களின் நாயகனாக விளங்குகிறார்.
விளையாட்டையும், அதன் மூலமாக அவருக்குக் கிடைத்திருக்கக்கூடிய நினைத்துப் பார்க்க முடியாத பணம் மற்றும் புகழையும் தாண்டி குடும்பம் எவ்வளவு முக்கியமானது என்பதை மகேந்திர சிங் தோணி மற்றும் சாக்சியின் வாழ்க்கை வெளிப்படையாக நம் அனைவருக்கும் அறியத்தருகிறது.
மிக முக்கியமானவர்களை சந்திக்கிற போது மிக மென்மையாகக் குனிந்து சாக்சியின் காதில் அவர்களை அறிமுகம் செய்கிற தோணி மிக அழகானவர். ஆட்டம் முடிந்து வெற்றி தந்தையிடம் வந்துவிட்டதை உணர்ந்து மகேந்திர சிங் தோணியின் செல்ல மகள் “ஷிவா” ஓடி வந்து தந்தையை அணைத்துக் கொள்கிற காட்சி மிக மென்மையான அற்புதமான தந்தையாக இருப்பது எப்படி என்பது குறித்து இளம் தந்தையருக்குப் பாடம் சொல்லித்தரும்.
ஒருவேளை இது மகேந்திர சிங் தோணியின் இறுதிப் போட்டியாக இருக்கலாம். அல்லது அடுத்த சீசனிலும் அவர் விளையாடலாம். விளையாட்டைத் தாண்டி மக்களின் மனதில் நிலைக்கும் வெகு அரிதான நாயகர்களின் வரிசைக்கு இப்போது தோணி வந்திருக்கிறார். தோக்குறமோ, ஜெயிக்கிறோமோ, கடைசி வரை சண்டை செய்யணும்னு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கும் “தலை”வனாக நிற்கிறார்.
கேஎம்ஜி