தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியைத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என 60, 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஐயா அண்ணல்தங்கோ, ஐயா சி. பா. ஆதித்தனார் உள்ளிட்டோரால் வலியுறுத்தப்பட்டு வந்தது. அவர்களேகூட ஒவ்வொரு கொடியை அறிமுகப்படுத்தி அடையாளப்படுத்தி இருந்தனர்.

கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது 1976-77-இல் ஒரு கொடியை அடையாளப்படுத்தி இந்திய அரசின் இசைவுக்கு அனுப்பி இசைவு கேட்டிருந்தார். கர்நாடகாவில் கருநாடக அரசு, கொடியை அறிவித்ததற்கு, அப்படி இந்திய அரசிடம் இசைவு கேட்டதாகத் தெரியவில்லை.
1990 களிலிருந்தே தமிழறிஞர்கள் பலரும் தமிழ்நாட்டிற்கெனக் கொடி வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 2019 இல் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் வழியாக மிகப்பெரும் அளவில் அழுத்தமாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. கூட்டமைப்பின் சார்பில் ஒரு கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட இயக்கங்களும் அறிஞர் பெருமக்களும் கொடியை வலியுறுத்தி நிகழ்ச்சிகள் நடத்தினர்.
2020 ஆம் ஆண்டு எடப்பாடி முதலமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக் கொடியைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அறிமுகப்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்றுவதாக அறிவித்ததற்காகத் தமிழ்நாடெங்கும் தோழர்கள் பொழிலன், தம்பி மண்டேலா, உலக முதல்வன், சேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறைப்படுத்தப்பட்டுப் பத்து நாள்கள் கழித்துப் பிணையலில் வெளிவந்தோம்.
அதன் பிறகு, இஸ்டாலின் முதலமைச்சரானதன் பின், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பத்து பேர் கொண்ட குழு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து முழு விளக்கம் கொண்ட விண்ணப்பத்தை அளித்தோம்.. முதலமைச்சர் அவர்களும் எல்லாவற்றையும் அக்கறையோடு கேட்டபின் ‘செய்கிறோம்’ – என விடை கூறினார். நாங்களும் நம்பிக்கையோடு வந்தோம்.
ஆனால், இரண்டு நாளில் நிலைகள் மாறின. நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக அறிவிப்பது மாறி, சூன் 18 ஐத் தமிழ்நாடு நாள் என்பதாக அறிவிப்பதாகவும், அந்த நாளையே அரசு விழாவாகக் கொண்டாடும் என்பதாகவும் அரசு சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. அரசுக்கு அணுக்கமானவர்களின் கருத்தால்தான் சூன் 18 என்று மாற்றப்பட்டது என்பதை அறிந்தோம். இருந்தும் அதைப் பற்றி நாம் பெரிதாக கருத்து கொள்ளவில்லை. நாள் எது வேண்டுமானாலும் இருக்கட்டும், வேண்டுமானால் சூன் 18யும், நவம்பர் 1 ஐயும் ஆக இரண்டு நாள்களையும்கூட விழாவாகக் கொண்டாடலாம். ஆனால், தமிழ்நாடு நாள் விழாவைத் தமிழ்நாட்டு மக்கள் விழாவாகக் கொண்டாடுகிறபடியும், தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்தி அதைத் தமிழ்நாடு எங்கும் ஏற்றிக் கொண்டாடுகிறபடியும் அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினோம். அமைச்சர்கள் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என அனைவரையும் சந்தித்து நிலையைக்கூறி வலியுறுத்தினோம். ஆனால் எந்த விளைவும் நடைபெறவில்லை. இன்று வரை தமிழ்நாடு காத்துக்கிடக்கிறது.

தேர்தல் அரசியல் நிலைகளுக்காக ஒவ்வோர் ஆட்சியிலும் ஒவ்வொரு நிலை இழுத்துக் கொண்டு போக, இன்று வரை தமிழ்நாட்டிற்கென கொடி ஒன்று விடிவுக்கு வராமலேயே உள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குப் போகிற வழியாக அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்திற்குப் போவதற்கு ஆர்.எஸ்.எஸ். இன் பின்னணியில் இயங்குகின்ற விவேகானந்தா கேந்திரா, திருவள்ளுவர் சிலையை பார்க்க வருகிற ஒவ்வொரு சுற்றுலா ஆர்வலர்களிடமும் தனியாக ஒவ்வொருவருக்கும் முப்பது உருபா என வழிப்பறிக் கொள்ளை செய்வதையும், திருவள்ளுவர் சிலை உப்புக் காற்றால் அரிக்கப்படுவதிலிருந்து முறையாகப் பேணப்படாமல் இருக்கிறதே என்பதை வலியுறுத்தியும் இப்போதுள்ள அமைச்சர்கள் மூன்று பேரைப் பார்த்து வலியுறுத்திய போதும், கிணற்றில் போட்ட கல்லாய் அது பற்றி எதுவும் வாய் திறக்காமல், ஒன்றும் செய்யாமல் கிடைக்கிற இன்றைய தமிழ்நாட்டு அரசிடம், நாம் தமிழ்நாட்டுக் கொடியைப் பற்றிப் பேசியும் வலியுறுத்தியும் என்ன பயன் விளைய போகிறது?
தமிழ்நாட்டு மக்கள் இயக்கங்கள் இணைந்து வலியுறுத்திப் போராடாமல் எந்த விடிவும் கிடைக்கப் போவதில்லை.
– பொழிலன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.