அரசாங்கமும் அரசியல்வாதியும் செய்யாததை செய்து காட்டிய சின்னத்திரை நடிகர் பாலா !
யாரிடமும் பணம் பெறாமல் தன் சொந்த உழைப்பின் மூலம் வரும் வருவாயை வைத்து உதவி செய்வதை ஒரு பழக்காமாகவே வைத்துள்ளார் நடிகர் பாலா. அண்மையில் ஆலங்காயம் அருகே உள்ள மலை பகுதிக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கி அனைவரின் பாராட்டை பெற்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட நெக்னாமலை கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு 172 குடும்பங்களில் 750 பேர் வசிக்கின்றனர். 478 வாக்காளர்கள் கொண்ட இம்மலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை முறையான சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து மக்கள் அன்றாட தேவைக்கும் மற்றும் மருத்துவ தேவைக்கு 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய அவலநிலையாக உள்ளது.
அதே நேரத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும் சரி, உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சரி டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இம்மலையில் வசித்து வரும் ராஜாகிளி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி என்பவர் நிறைமாத கா்ப்பிணியாக இருந்த நிலையில் நள்ளிரவு பிரசவ வலியால் துடித்துள்ளார்.
செய்வதறியாத, அப்பகுதி மக்கள் வழக்கம் போல டோலி கட்டி கா்ப்பிணியை மலைப்பாதை வழியாக 5 கிமீ தொலைவுக்கு தூக்கி வந்து அடிவாரப்பகுதியில் ஆட்டோ ஒன்றில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள வள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். இது குறித்து அப்போது சமூக வளைதளங்கள் மூலம் செய்திகள் வெளியாகி நெஞ்சை உலுக்கியது. ஊடகங்கள் மூலம் இதனை அறிந்த சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்குவதாக தகவல் தெரிவித்திருந்தார். ஜனவரி 30 நெக்னாமலைக்கு வந்தபோது, மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் பாலாவை வரவேற்றனர். தொடர்ந்து அம்மக்களின் பயன்பாட்டிற்கான புதிய ஆம்புலன்ஸ் ஒன்றையும் வழங்கினார்.
நடிகர் பாலாவிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “நெக்னாமலை கிராமத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்திற்காக டோலி கட்டி தூக்கி தீ பந்தங்களுடன் இறங்கி வருவதை செய்தி வாயிலாக அறிந்தேன். இந்த கிராம மக்களுக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பதற்காக முடிவெடுத்து தற்போது புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை இந்த மலை கிராம மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கி உள்ளேன். இது வரையில் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பாட்டிற்காக 5 இலவச ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளேன்” என்றார், நெகிழ்ச்சியாக.
”முன்னதாக அறந்தாங்கி மற்றும் அருகே உள்ள குன்று , ஈரோடு மாவட்டம் பர்கூர், சோளகனை போன்ற பகுதிகளில் ஆம்புலன்சை வழங்கி தேவையான விவசாய கருவிகளையும் வழங்கி இருந்தார். நெக்னாமலை மக்களுக்கும் ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளார் நடிகர் பாலா. அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை நடிகர் செய்து வருகிறார். உண்மையில் பாலாவை போல இன்றைய இளைஞர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டால் சமூகம் செழிக்கும்” என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த மோகன் மகிழ்ச்சி பொங்க.
– மணிகண்டன்.