வெற்றி பெற்ற மாணவர்களின் வெள்ளை சிரிப்புக்காக தொடர்ந்து உழைப்போம் – சிறப்புப் பயிற்சி வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் உருக்கம்.
வெற்றி பெற்ற மாணவர்களின் வெள்ளை சிரிப்புக்காக தொடர்ந்து உழைப்போம் – சிறப்புப் பயிற்சி வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் உருக்கம்.
ஆசிரியர் பொ. சிங்காரவேலு,
ஆசிரியர் மதிவாணன்
ஆசிரியர் கார்த்திகேயன்
ஆசிரியர் நடராஜன்
ஆசிரியர் சின்னப்பா
ஆசிரியர் செல்வராஜ்
ஆசிரியர் மஞ்சுளா
ஆசிரியர் வனிதா
அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்திட தொடர்ந்து செயலாற்றி வரும் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தின் வெவ்வேறு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்தான் இவர்கள்.
கிடைக்கும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களை சிறப்புப் பயிற்சி வகுப்பு களுக்காக பங்களித்தவர்கள்.தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் “பாடங்களை புரிந்து படிக்க வேண்டும், தொடர்ந்து படிக்க வேண்டும், படித்த பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், நோட்சை படிக்காமல் பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும்” என்று மாணவர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருபவர்கள் இவர்கள்.
இதனால் இவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு – வெற்றிப் பட்டியலில் தங்கள் பள்ளி மாணவர்களின் பெயர்களை இடம் பெறச் செய்தவர்கள்.
இவர்களின் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியப் பணியை அறிந்து கொண்ட சேதுபாவாசத்திரம் வட்டார கல்வி அலுவலர் மீனா சுந்தரி மற்றும் வட்டார கல்வி அலுவலர் சிவசாமி ஆகியோர், ஒன்றிய அளவிலான சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் இதற்கான பயிற்சி வகுப்புகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திட முடிவு செய்து இந்த ஆசிரியர்களின் பங்களிப்போடு வகுப்புகள் நடைபெற்றது. இந்த ஆண்டு தேர்வில் இங்கு பயிற்சி மேற்கொண்ட ஆறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இங்கு பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள்.
ரெட்டவயல் க. மணிகண்டன்,
கட்டையங்காடு உக்கடை காமாட்சி சரவணன்,
மரக்காவலசை கவிதாஞ்சலி,
முடச்சிக்காடு ஸ்ரீஜா,
முடச்சிக்காடு பவித்ரன்,
எட்டிவயல் சாதனா…
இதுகுறித்து இங்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர் சிங்காரவேலு தெரிவித்ததாவது, “எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை பெரிதும் உதவியாக இருக்கும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் கல்லூரி கனவை இந்த உதவித்தொகை நிறைவேற்றி இருக்கிறது. வெற்றி பெற்ற ஏழை மாணவர்களின் வெள்ளை சிரிப்புக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றார்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மொத்தம் 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக கிடைக்கும்.
ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பான பயிற்சியை வழங்க பெரும் முயற்சி மேற்கொண்ட சேதுபாவாசத்திரம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கிய ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இங்கு பயிற்சி வழங்கி வரும் கொடிவயல்-மரக்காவலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பொ.சிங்காரவேலு அவர்கள் திருவள்ளுவர் கல்வி கழகம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் இணைந்து நடத்தும் போட்டித் தேர்வு பயிற்சிக்கும் துணை நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைப்பட்டியல் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீளட்டும். இன்று பொறுப்பு மிக்க, ஊழலற்ற அரசு நிர்வாகத்தை வழங்கும் அரசு அதிகாரிகள் பலர் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்கள் வாழ்வில் உயர் இலக்குகளை எட்டிப் பிடிக்க வாழ்த்துக்கள். தேர்வில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் கூட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். “உங்களின் முயற்சிகளை தொடர்ந்து கைவிடாமல் கடைபிடியுங்கள். இலக்கை அடைவீர்கள்” என்று ஊக்கம் கொடுப்போம்.
முகநூலில்: மெய்ச்சுடர்