ஏன் இப்படி வித்தியாசமானக் கதை கருக்கள் தமிழ் இயக்குநர்கள் கருத்தில் வருவதில்லை?
அடர் வனத்துக்குள் ஒரு வீடு, மூன்று கதை மாந்தர்கள், ஒரு அழைப்பு மணி இவற்றோடு சத்தமில்லாமல் உரத்துப் பேசுகிறது, ‘சப்த காண்டம்’ திரைப்படம். மலையாளத்தில் படமாக்கப்பட்டுத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
“அயிக்கமாய் விழுகாதே காமத் தீயில்
அனுதினமும் வேதாந்த முடிவைப் பாரு” என்று சொன்ன போகர் 7000த்தின் பெயர் சப்த காண்டம். ஏழு காண்டங்களைக் கொண்டது. இது இந்த திரைப்படத்துக்கு சொல் பொருத்தம் மட்டுமே. ஆனால் வாத்சாயனார் வடமொழியில் எழுதிய காம சூத்திரம் தமிழ் உலகம் அறிந்தது. தொடர்ந்து அதிவீரராமன் எழுதிய கொக்கோகம் எனச் சில நூல்கள் காமம் என்னும் இல்லற இன்பம் பற்றிப் பேசின.
மலையாளத்தில் சின்மோகன் என்பவர் எழுதிய நூலாக இருக்கலாம் சப்த காண்டம் அல்லது காம சாத்திரம். அந்த நூல் பற்றி மலையாளம் அறிந்தவர்கள்தான் கருத்து சொல்ல வேண்டும். அந்த நூலினை அடிப்படையாக வைத்து சப்த காண்டம் படமாக்கப் படுள்ளது. இது படத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்
80 லட்சம் ரூபாய் கடன் வசூல் செய்வதற்காக வந்த வில்லன் கதாநாயகன் 50 வயது மதிக்கத் தக்கவர், கடனுக்குப் பதிலாக கடன் வாங்கிய இளஞனின் மனைவியைக் கேட்கிறார். ஒரு வாரத்திற்குள் அவளை அவள் விருப்பத்தோடு அடைவேன். இல்லா விட்டால் கடனைத் திருப்பித் தர வேண்டாம் என்று வாக்குறுதி கொடுக்கிறான். அவள் அப்படி ஒன்றும் நடந்து விடாது என்ற தைரியத்தில் ஒத்துக் கொள்கிறாள். அக்ரீமெண்ட் போடப்படுகிறது. பெட்டி படுக்கையோடு அந்த வீட்டில் ஏழு நாட்கள் தங்குவதற்காக வருகிறான். அந்த ஏழு நாட்களில் அந்தப் பெண்ணை எப்படி தன் வசமாக்குகிறான் என்பதுதான் கதை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதிகப்படியான வசனங்கள் இல்லை; அதிகப்படியான அருவருக்கத்தக்க காட்சிகள் இல்லை. பின்னணி இசை அச்சுறுத்தவில்லை. வன்முறை துளியளவும் இல்லை. மொத்தமாகச் சொல்லப்போனால் இயக்குனர் பிரசாந்த் சசி மிகையும் குறைவும் இல்லாமல் கனகச்சிதமாகப் படமாக்கி இருக்கிறார். கொஞ்சம் கவனம் குறைந்தால் அதல பாதாளத்தில் விழும் அபாயம் உள்ள இந்தக் கதைக் கருவை, கம்பி மேல் நடப்பது போல அல்லது கத்தி மேல் நடப்பது போல சர்வ ஜாக்கிரதையோடு இயக்கியிருக்கிறார்.
காசு பணமோ, பதவியோ, பேரழகோ, இளமையோ எதுவுமே ஓர் ஆணை விரும்பத் தேவையான தகுதிகளாகப் பெண்ணுக்கு இருப்பதில்லை என்ற உளவியலை மீண்டும் சொல்லி இருக்கக் கூடிய திரைப்படம் இது.
திரைப்படத்தில் ஒரு வசனம், “இந்த சப்த காண்டங்களைத் தெரிந்து கொண்டால் இன்றைய விவாகரத்துக்கள் குறைந்து விடும்”
ஆம், இயந்திரக்கதியில் படித்து, இயந்திரக்கதியில் தொலை தொடர்பு யுகத்தில் நுழைந்து, இயந்திரகதியில் இல்லறத்தை ஏற்று அதே இயந்திர கதியில் விவாகரத்து செய்யும் இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். ஏன் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் பிறகும் விவாகரத்து செய்ய நினைக்கும் 40, 50 வயதை கடந்தவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் ‘சப்த காண்டம்’கருத்துகள் வேறுபடலாம்.
ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய இபபடத்தின் தலைப்பு யூட்யூபில் மின்னியது. பார்த்தேன்; பிடித்தது; பதிவு செய்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்களுக்காக முதல் கருத்து பெட்டியில் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.ஏன் இப்படியான வித்தியாசமானக் கதைக் கருக்கள் தமிழ் இயக்குனர்கள் கருத்தில் வருவதில்லை (சுந்தர காண்டம் தந்த பாக்யராஜைத் தவிர ஹி ஹி ஹி.. ) என்ற வினாவோடு…?
— ஆதிராமுரளி – டிஜிட்டல் படைப்பாளி.