பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் குளறுபடி – புகார் தெரிவித்த பயனாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர் !

சனிக்கிழமை ஜூன் 8 அன்று நவீனிடம் நாம் பேசியபோது ஜூன் 10 திங்கள்கிழமை அந்த பிரச்சனையை தீர்ப்பதாக நம்மிடம் கூறிவிட்டு  திட்ட பயனாளியை தாக்கியதுமில்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0

வீடுகட்டும் திட்டத்தில் குளறுபடி – புகார் தெரிவித்த பயனாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர் !

பழுதான ஓலை மீது தார்ப்பாய் போர்த்தப்பட்டு மழைக்கும்  புயலுக்கும் , நிச்சயம் தாங்காது என்பதை அந்தச் சிதிலமடைந்த ஓலை குடிசையின் நிலை நமக்கு உணர்த்தியது. கண்ணெதிரே பாதியில் கட்டிய வீட்டை பார்த்து எப்ப புகுவது என ஏக்கத்துடன் நின்ற பெண் பிள்ளைகள் . வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் ஒன்றிய  அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்னும் இலவச வீடுகட்டும் திட்டம்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

பாதிக்கப்பட்ட ரபீக் அஹமது குடும்பம்.

கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் சாராம்சமாகும் , இத்திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 77 ஆயிரத்து 290 ரொக்கமும்,  தேவையான கட்டுமானப் பொருட்களும்  வழங்கப்படுகிறது.

- Advertisement -

மேலும்,  கட்டித்தரப்படும் வீடுகளில் பாத்ரூம் வசதி, கரண்ட் வசதி, குடிநீர் வசதி, எல்பிஜி சிலிண்டர் இப்படியான வசதிகளும் வழங்கப்பட்டு  வருகின்றன , இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது தவணையாக ரூ.1.5 லட்சமும், கடைசி  மூன்றாவது தவணையாக ரூ.50 ஆயிரமும் பயனாளிகள் பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தை பொறுத்தவரை, நகர்ப்புறம் + கிராமப்புறம் என்று  2, பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதில், 75% எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருடையது என்பது இந்த திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமாகும்.

ரபீக் அஹமது தற்போது தங்கியிருக்கும் குடிசை

அப்படி ஒரு சிறுபான்மையினர்தான் பிரதான் மந்திரி இலவச வீட்டை பெற்று வருடக்கணக்கில் வதைப்பட்டு  வருவதாக நம் காதுக்கு  எட்ட  அவரை தேடி சென்ற இடம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதி  பழுதான ஓலை மீது ஆங்காங்கே தார்ப்பாய் போர்த்தப்பட்டு மழைக்கும் புயலுக்கும் நிச்சயம் தாங்காது என்பதை அந்தச் சிதிலமடைந்த ஓலை குடிசையின் நிலை நமக்கு உணர்த்தியது.

தற்போது  வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் மழை பெய்து வரும்  நிலையில் அவர்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்த மாத்திரத்தில்  ஆங்காங்கே தண்ணீர் தேக்கி கொண்டு இருந்தது. கூடவே  அருகில் செல்லும் கால்வாய் துர்நாற்றம் மூக்கை துளைத்தது  நாம் வந்திருப்பதை அறிந்து  ஓலைக் குடிசைகளிலிருந்து வெளியே வந்த ரபீக் நம்மை ஒருவித தயக்கக் குரலுடன் விசாரித்தார்.

அவரிடம்  நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியபோது , கண்ணெதிரே பாதியில் கட்டிய இலவச வீட்டை பார்த்து எப்ப புகுவது என ஏங்கும் ரபீக் அஹமதுவின் பெண் பிள்ளைகளும் புகார் மனுக்களை ஏந்தியபடி நின்றனர்.

கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்ட வீடு

“ சார் 13 ஆண்டு காலமாக இந்த ஓலை குடிசை வீட்டில் மனைவி மற்றும் இந்த பெண் பிள்ளைகளோடு வசித்து வருகிறேன்  அன்றாட பிழைப்புக்காக சைக்கிளில்  பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன் . கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்  எனக்கு வீடு ஒதுக்கப்பட்டு அதற்கான ஆணையை அதிகாரிகளிடம் பெற்றேன்.”

4 bismi svs

இதான் அந்த நகல் எனநீட்ட கூடவே  அப்போதைய  மாவட்ட ஆட்சியருக்கு  , கொடுத்த ஒரு புகார் கடிதமும் இருந்தது. அதில்  வளையம்பட்டு பஞ்சாயத்து கிளார்க் திரு …. என்பவருக்கு ரூ 15 ஆயிரம் கொடுத்தால் தான் வீடு கட்ட தொடங்குவார் என  இப்பகுதியில் தண்ணீர் திறந்துவிடும் ஆப்ரேட்டர் பழனி  கூறுகிறார்  எனவும், மேலும் ருபாய் 50 ஆயிரம் கொடுத்தால்தான் முழுமையாக கட்டி கொடுப்பார் என பஞ்சாயத்து கிளார்க்  லஞ்சம் கேட்டதை  அந்த புகார் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.  அதற்கு பலனாக   நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகள்  வீடு கட்டுவதற்கான பணி ஆனையை வழங்கினர்கள் என ஆணை நகலையும்  காட்டினார்.

இந்தநிலையில் தான் மீண்டும் லஞ்சம் கேட்ட விவகாரம் ஒப்பந்ததாரர் ரூபத்தில் வந்துள்ளதாக கூறியவர், “வீட்டை முழுமையாக கட்டி கொடுக்க ஒப்பந்தம் பெற்ற அதே பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினரான  சோபியா’ வின்  கணவர்  பாஜக பிரமுகரான நவீன் என்பவர் மேலும் பணம்  கொடுக்காததால் வீடு  கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலைக்கழித்து வருவதாகவும் ,  கடந்த ஆண்டு என் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு  நூறு நாள் வேலை திட்ட அடையாள அட்டை  உள்பட பல்வேறு ஆவணங்களை  ஒப்பந்ததாரர் நவீன் வாங்கிக் கொண்டு பணிகளை தொடங்கிய நிலையில்  தற்போது வீட்டின்  70% பணிகள் கட்டி முடிக்கப்பட்டு  கடந்த சில மாதங்களாக மீதமுள்ள பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டார் ஒருவேளை நான் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவன் என்பதால் என்னவோ பாஜக பிரமுகரான நவீன் வீடு கட்டி கொடுக்க மறுக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்றார் .

போலீசில் கொடுத்த புகார்

இது குறித்து  பலமுறை  அதிகாரிகளிடம் தகவல்  தெரிவித்தும் ஒப்பந்ததாரர் நவீன் வீடு கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் ”வீட்டிற்கு தேவையான ஜன்னல் கதவு மற்ற கட்டுமான பொருட்கள் வாங்கி கொடுத்தால் மட்டுமே மீதமுள்ள பணிகளை செய்து கொடுப்பேன்;  இல்லையென்றால் கட்ட முடியாது” என ஒப்பந்ததாரர் நவீன் கைவிரித்து விட்டதாக கூறினார்.

மேலும், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வங்கியில் வரும் தொகையினை எடுத்துக்கொண்டு அதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் அலைக்கழித்து வரும் நவீன்  மீது வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர் ஆகியோரிடம் புகார் அளித்தேன்.  நவீன்  சொல்படி  நடந்துக் கொள் என அதிகாரிகள் கூறிவிட்டனர். எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு எனக்கு வழங்கிய இலவச வீட்டை  உடனடியாக  கட்டி  கொடுத்தால் உதவியாக இருக்கும்” என்றார்   கண்களைக் கசக்கியபடி.

ஒப்பந்ததாரர் நவீன்

இது தொடர்பாக ஒப்பந்ததாரர் நவீனிடம் பேசினோம். “வாசல் கதவு , ஜன்னல்,  தரை பூசு வேலை மட்டுமே உள்ளது சார். ஜூன்- 10  திங்கள்கிழமை அந்த வேலையை கண்டிப்பாக முடித்து விடுவேன் சார்” என்று முடித்துக்கொண்டார்.

சமீபத்தில்  இந்த திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் , கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் காலக்கட்டத்தில் பணியாற்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

புகார் அளித்த ரபீக் அஹமது

இந்நிலையில், “அந்த ஒப்பந்ததாரர் நவீன் எப்பிடி நீங்கள் மீடியா முன் புகார் சொல்லலாம்? என கூறி  என் மனைவியை அடித்து தகாத வார்த்தைகளால் திட்டியதுமில்லாமல் என்னையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வார்டு உறுப்பினர் சோபியா மற்றும் அவரது கணவரும் ஒப்பந்ததாரருமான பாஜக பிரமுகர் நவீன் ஆகியோர் மீது இன்று ஜூன் 10 மாலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன்” என்கிறார் பாதிக்கப்பட்ட ரபீக் அஹமது.

முன்னதாக சனிக்கிழமை ஜூன் 8 அன்று நவீனிடம் நாம் பேசியபோது ஜூன் 10 திங்கள்கிழமை அந்த பிரச்சனையை தீர்ப்பதாக நம்மிடம் கூறிவிட்டு  திட்ட பயனாளியை தாக்கியதுமில்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன்.கா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.