அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஏக்கர் கணக்கில் பொய் பேச வேண்டாமே !

திறந்த மடல் - 21

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்களுக்கு,
வாழ்த்துகள். உங்களின் திட்டமிடலில் கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில், தவெக தனித்துப் போட்டியிட்டு, அறுதிப்பெரும்பான்மையைத் தவறவிட்டு, தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ளது. மீண்டும் வாழ்த்துகள்.
சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் திமுக மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி, இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தனிப்பெரும் கட்சியாகப் பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்த பின்னரும் தொடர்ந்து உண்மைக்கு மாறான பல தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருவது நீங்கள் ஏற்றிருக்கும் அமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே திமுகவும் அதிமுகவும் இரகசியமாகக் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் ஊடகங்களின் வழியாகப் பொய்யான செய்தியைப் பரப்பினீர்கள். திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாக நம்பிய நிலையில் ஏன் அதிமுகவோடு கூட்டணி பேசவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது என்பதற்கு உங்களிடம் போதுமான விளக்கம் இல்லை. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்த மாலை வேளையில் “தொங்கு சட்டமன்றம்” அமைகிறது என்ற நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அதிமுகவில் இணைந்து திருச்சி இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற உங்களின் மாமியார் லீமாரோஸ் அவர்கள் இருமுறை செய்தியாளர்களைச் சந்தித்து, “அதிமுக – தவெக” கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது என்ற வெளிப்படையாகவே அறிவித்தார். அதைத் தவெக தரப்பிலும் அதிமுக தரப்பிலும் மறுத்து அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. மாறாக அன்று இரவு, திமுக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முயல்கிறது என்று கண்டனம் தெரிவித்தீர்கள். இதைத் திமுக தரப்பும், அதிமுக தரப்பும் மறுத்து அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
திமுக தரப்பில், “மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம். தவெக ஆட்சி அமைத்தால் நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம்” என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த சிபிஎம், சிபிஐ, விசிக, இயூமுலீக் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு ஆட்சியும் அமைக்கப்பட்டு விட்டது. சட்டமன்றத்தில் ஆட்சிக்கான பெரும்பான்மையும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் கூறிய பொய்கள் மட்டும் சமூக வலைதளங்களில் இன்றும் உலாவிக் கொண்டிருக்கின்றது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற இரமேஷ் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சார்ந்தவர். வெற்றி பெற்ற பிறகு அவருக்கு இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்துத் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகள், சமூகநீதி ஆர்வலர்கள் கடுமையான கண்டங்களைப் பதிவு செய்தனர். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய நீங்கள், “இந்து அறநிலைத் துறை அமைச்சர் இரமேஷ் என்ன சாதி என்று தேர்தலில் போட்டியிடும்போது தெரியாது. அமைச்சராகப் பொறுப்பேற்றபோதும் தெரியாது. சமூக ஊடகங்களின் வாயிலாக இப்போதுதான் தெரிந்துகொண்டேன் என்று மீண்டும் ஒரு பச்சை பொய்யைக் கூறியிருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் பிராமணச் சமூகம் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெறும் தொகுதிகள் 1. சென்னை மயிலாப்பூர் மற்றொன்று 2. திருச்சி ஸ்ரீரங்கம். மறைமலை நகரில் வாழும் பிரமாணச் சமூகம் சார்ந்தவர் இரமேஷ் ஸ்ரீரங்கம் தொகுதிக்குச் சாதி பார்க்காமல் தேர்வு செய்யப்பட்டார் என்பதும், சாதி பார்க்காமல் அவருக்கு இந்து அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டதும் நம்பும்படியாக இல்லையே? யாரைத் தேர்தலில் நிறுத்துவது, யாரை அமைச்சராக்குவது என்பது கட்சியின், முதல் அமைச்சரின் தனிப்பட்ட முடிவுகள். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. நீங்கள் அதற்கு ஏன் பொய்யான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும் என்பதே எங்களின் கேள்வி. அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படிப் பொய் செய்திகளைப் பரப்புவதை நிறுத்திக் கொண்டு, மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்துக் கவனம் செலுத்தவேண்டும்.
தவெக அரசு அமைந்து முழுமையாக 2 வாரங்கள் கடந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் பகல், இரவு என்று 10 மணி நேர மின்வெட்டு என்பது தொடர்கதையாக உள்ளது. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலையும் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி நெஞ்சை அடைக்கின்றது. பல இடங்களில் பாலியல் புகார்களில் தவெகவினர் கைது செய்யப்படுவதும், போதை பொருள் வைத்திருந்து தவெகவினர் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. திமுக – அதிமுக என்ற இரு கட்சிகளுக்கு மாற்றாகவே தவெக அரசை மக்கள் ஆட்சியில் அமர்த்தினர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொதுமக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வாருங்கள். அதை விடுத்து நீங்கள், ஏக்கர் கணக்கில் பொய் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

—  தமிழன்புடன், ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.