இரவில் பெண்ணை அலைக்கழித்து புகாரை வாபஸ் பெற மிரட்டிய திருச்சி போலிஸ்

ஜோஸ்

0

 

இரவில் பெண்ணை அலைக்கழித்து புகாரை வாபஸ் பெற மிரட்டிய துறையூர் போலீஸார் .

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புது வீடு கட்டி வருகிறார். அதில் பாதி வேலைகள் முடிந்த நிலையில், காண்ட்ராக்டர் ஒப்பந்தத்தை மீறி அதிக தொகை கேட்டு பிரச்னை செய்ததுடன் வீட்டின் கட்டுமான வேலைகளைத் தொடராமல் நிறுத்தி விட்டாராம்.

இப் பிரச்னை குறித்து வீட்டின் உரிமையாளரான அப்பெண்மணி கடந்த 2021-ம் வருடம் ஜனவரி மாதம் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து போலீஸார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி , திருச்சி ஐஜி பாலகிருஷ்ணன், எஸ்பி சுஜித்குமார் ஆகியோரிடத்தில் நேரில் சென்று புகார் செய்தார்.

பெண்ணின் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த ஐஜி பாலகிருஷ்ணன் , முசிறி டிஎஸ்பி அருள்மணியிடம் அந்தப் பெண்ணிற்கு உரிய நிவாரணம் கிடைக்க, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இது குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் ஐஜி பாலகிருஷ்ணன் இடமாறுதலாகி சென்று விட்டார். , இந்நிலையில் பெண்ணின் புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துறையூர் காவல் நிலையத்தில் இருந்து , சரவணன் என்ற காவலர் இரவு 8 – 10க்கு அந்தப் பெண்ணின் செல்போன் நம்பரைத் தொடர்பு கொண்டு , “உங்கள் புகார் மனு மீது டிஎஸ்பி விசாரணை செய்வதற்காக , துறையூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார் , நீங்க உடனே புறப்பட்டு ஸ்டேஷனுக்கு வாங்க “எனக் கூறினாராம்.

டிஎஸ்பியைத் தொடர்பு கொண்டு அப்பெண் பேசியபோது , இன்று துறையூருக்கு நான் வரவில்லை. என டிஎஸ்பி கூறியுள்ளார். இந்த நிலையில் குழப்பத்துடன் தனது மகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றார்.

அப்போது அங்கிருந்த சரவணன் , யோகேஸ்வரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் ஆகியோர் அப்பெண்ணிடம் உனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஒழுங்கு மரியாதையாக புகாரை வாபஸ் பெற்றுக் கொள் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும் வெள்ளைத்தாளில் கையெழுத்துப் போட்டுத் தரும்படி தொடர்ந்து ஒருமையில் பேசி மிரட்டியுள்ளனர். இதில் அதிருப்தியடைந்த அப்பெண் செய்வதறியாது அங்கிருந்து வெளியேறினார். சிவில் பிரச்னைக்காக இரவு நேரத்தில் வெளியூரில் உள்ள பெண்ணை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து , புகாரை வாபஸ் வாங்க மிரட்டிய சம்பவம் குறித்து உயரதிகாரிகள் காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறையூர் போலீஸார் இது போல் புகார்தாரர்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவம் தொடர்வதை உயரதிகாரிகள் தலையிட்டு தடுக்க வேண்டும் எனபொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.