வனத்தில் ஒலிக்கும் ஆகாசவாணி … ஆக்காட்டிப்பறவை ! பறவைகள் பலவிதம் – தொடர் 06
“ஏ ஆக்காட்டி ஆக்காட்டி … ஏ ஆக்காட்டி ஆக்காட்டி … ஆவரம்பூ ஆக்காட்டி… எங்கே எங்கே முட்டையிட்டே … கல்லுத் துளைத்துக் கடலோரம் முட்டையிட்டேன் … இட்டது நாலுமுட்டை … பொரித்தது மூணுகுஞ்சு … மூத்த குஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுற்றி வந்தேன் … இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுற்றி வந்தேன் …. பாத்திருந்த குஞ்சுக்குப் பவளமலை சுற்றி வந்தேன்… புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகையிலே … மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான் காலிரண்டும் கண்ணியிலே …. சிறகிரண்டும் மாரடிக்க நானழுத கண்ணீரும் … என்குங்சழுத கண்ணீரும் …. வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கா … கால்கழுவிக் குண்டு நிறைந்து … குதிரைக் குளிப்பாட்டி இஞ்சிக்குப் பாய்ஞ்சு … இலாமிச்சுக்கு வேரூண்டி … மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்துதாம் கண்ணீரே” கேட்கும்போதே மெய்சிலிர்க்க வைக்கும் நாட்டுப்புற பாடலின் வரிகள் இவை. ஆக்காட்டி என்றொரு பறவையின் இயல்பை, அதன் துயரை உணர்ச்சி மேலிட உருகி பாடும் பாடல் இது.
அவ்வளவு சோகமானதா, இந்த ஆட்காட்டி பறவைகளின் வாழ்க்கை? ஆள்காட்டி தன்துயரைக் கூறுவதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தங்கள் பாடுகளை நினைத்துப் பாடுவார்கள் போலுள்ளது. அவ்வளவு உருக்கம்.
ஆக்காட்டி பறவையின் இயல்புதான், என்ன?
ஒரே ஒரு குரலுக்கு ஒட்டுமொத்த காடும் மதிப்பளித்து அமைதியாகும் … குரல் கொடுக்கும் உயிரினத்தின் பெயரையும், உயிரினங்களுக்கிடையே இனங்கடந்த தகவல் தொடர்பிருப்பதை உங்களால் விளக்க இயலுமா?
அதுதான் ஆள்காட்டியின் குரல்? சற்றும் தாமதிக்காமல், உடனே மற்ற பறவைகள் தங்கள் பேச்சுக்கள் மொத்தத்தையும் திறுத்திக்கொள்ளும்… அது மட்டுமா காது கொடுக்கும்.
ஆக்காட்டி பறவையின் குரலுக்கு புலி, சிறுத்தை, மான், மிளா, மந்தி, அனைத்து பறவைகளும் மதிப்பளித்து அந்த நொடியில் அது என்ன சொல்ல வருகிறது என காது கொடுத்து கேட்கும்.

புதிய மனிதர்கள் நடமாட்டம் என்றால் அதற்கொருகுரல்… பழக்கப்பட்ட வனத்துறை ஆட்கள் வருகிறார்கள் என்றால், அதற்கொரு குரல்… வந்திருப்பவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தால் அதற்கு வேரொரு குரல் … வந்தவர்கள் சென்று விட்டார்கள் என்றால் அதற்கும் மற்றொரு குரல்… என்ன ஆக்காட்டிப்பறவையை ஆகாசவாணியோடு ஒப்பிடுவது சரி தானே?
சந்தன கட்டை வீரப்பனை பிடிக்கச் செல்லும் காவல்துறை வருவதை வீரப்பன் முன் கூட்டியே அறிந்து கொள்ள உதவியது எல்லாம் இந்த ஆக்காட்டியின் சத்தம்தான்.
அதன் குரலை கவனியுங்கள்… டிட்டிடூ டிட்டிடூ டிட்டிடூ என்று மிக அழகாய்…
“காட்டிக் கொடுத்தது…நீயா…இல்லை…நானா.. .”
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கணந்துள் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ஆள்காட்டி என்னும் பறவை ஆங்கிலத்தில் Lapwings என்று அழைக்கப்படுகிறது.
பறவைகளைப் பார்க்கப் போகும்போது நான் பயப்படுவது இப்பறவைக்குத்தான். தொலைவிலேயே நம்மைப் பார்த்து எச்சரிக்கை அடையும் இந்த ஆள்காட்டிகள் குறிப்பிட்ட தொலைவு நெருங்கியவுடன் ‘Did you do it? …Did you do it?’… என்று கத்திக்கொண்டே பறந்து, மற்ற பறவைகளுக்கு நமது வரவை அறிவித்துவிடும். பிறகென்ன பறவைகளை நாம பார்க்கிறோமோ இல்லையோ பறவைகளெல்லாம் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும். இந்தப் பறவையை வேட்டையாளர்கள் வெறுப்பர், ஏன் தெரியுமா?
தொடர்ந்து பேசுவோம் …
ஆற்றல் பிரவீன்குமார்.