அங்குசம் பார்வையில் ‘ஏழு கடல் ஏழு மலை’
தயாரிப்பு: ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் ‘ சுரேஷ் காமாட்சி, டைரக்டர்: ராம், ஆர்டிஸ்ட்: நிவின் பாலி, சூரி, அஞ்சலி, ஒளிப்பதிவு: என்.கே.ஏகாம்பரம், இசை: யுவன் சங்கர் ராஜா & சந்தோஷ் தயாநிதி, எடிட்டிங்: வி.எஸ்.மதி, ஆர்ட் டைரக்டர்: உமேஷ் ஜே.குமார், ஸ்டண்ட் மாஸ்டர்: ஸ்டண்ட் சில்வா, காஸ்ட்யூம்: சந்திரகாந்த், பிஆர்ஓ: ஏ.ஜான்
ரயிலில் பயணிக்கும் ஒரு சிறுவனுக்கு ஒரு பெண் கதை சொல்லும் பின்னணிக் குரல் மூலம் படம் ஆரம்பிக்குது. எட்டாயிரம் வருசத்துக்கு முன்னால ஏழு மலைகளுக்கு அப்புறம் இருக்கும் ஒரு மலையில் ஒருவன் இருந்தான். ஏழு கடல்களுக்கு அடுத்து இருக்கும் ஒரு கடலில் ஒருவன் இருந்தான் . அப்புறம் இங்கே ரயிலில் ஒருவன் இருக்கிறான். மூன்று பேருமே அவன் தான். “அதெப்படி எட்டாயிரம் வருசத்துக்கு முன்னால இருந்தவன், இப்ப எப்படி இருக்க முடியும்?” எனக் கேட்கும் அந்த சிறுவனின் கேள்விக்குரல் தான் நமக்குள்ளும் எழுந்தது. இன்னும் சொல்லிப் போனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம் கேட்ட அம்புலி மாமா கதை தான், ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கிளி இருக்கும், அந்த கிளியிடம் தான் அரசனின் உயிர் இருக்கும்னு கதை படிச்சிருப்போம்.
அந்த கதையாத் தான் இந்தக் கதையும் இருக்கப் போகுதுன்னு நினைச்சோம். ஆனால் டைரக்டர் ராம் சொல்ல ஆரம்பிக்கும் கதை மனிதம் பேசும் கதை, சக உயிர்கள் மீது அன்புகாட்டும் கதை, தமிழினத்தின் மாண்பைச் சொல்லும் கதை என்பது தெரிய ஆரம்பித்து மிகத் தெளிவுடன் தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது, ராம் “நம்மவர்” என்ற உணர்வு மேலோங்குகிறது.
அகிரகுரோசவா, சத்யஜித்ரே, ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், நம்ம மகேந்திரன், ருத்ரய்யா போன்றவர்கள் வெகுஜனங்களின் விருப்பத்திற்குறிய ஆக்ஷன் & மசாலா சினிமாக்கள் மீது விருப்பம் இல்லாமல் கலைப்படைப்புக்காகவே வாழ்ந்து வெகுஜனங்களை ரசிக்க வைத்தவர்கள், கொண்டாட வைத்தவர்கள். அந்த வரிசையில் இப்போதைக்கு நம் ராம் இருக்கிறார் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி, அப்புறம் தனுஷ்கோடியில் ஒரு கேரக்டர் என மொத்தமே நான்கு கேரக்டர்கள் தான். ஆனால் படம் மொத்தத்தையும் ஓடும் ரயிலில் ஆயிரமாயிரம் அர்த்தமுள்ள கதைகளைச் சொல்லி நம்மை கலங்க வைத்துவிட்டார் ராம். “எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்துங்கிறது, விலங்குகள், பறவைகளையும் சேர்த்து தான்” என்பதை நிவின் பாலி என்ற சிறந்த கலைஞன் மூலம் பதிவு செய்துள்ளார் ராம்.
எலியிடம் இரக்கம் காட்டும் நிவின் பாலி, மனிதனைக் கடிக்கும் முதலை, முயலைக் கொல்லும் மனிதன், காட்டை அழிக்கும் கார்ப்பரேட் காவாலிகள், இரும்பைக் கண்டு பிடித்தவன் தமிழன் இதையெல்லாம் ரயில் போகிற போக்கில் சொல்லவில்லை, பொட்டில் அடித்தது போல பதிய வைத்திருக்கிறார் ராம்.
ரயிலில் நிவின் பாலியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் சூரி, செம ஜோர். “சார்….அப்படியா சார்…ஆமாங்க சார்…நீங்க சொன்னா கரெக்டாத் தான் இருக்கும் சார்….” என கெஞ்சும் தொனியில் பேசுவது, “டேய்ய்… நீ என்ன பெரிய இவனடா……” என மிஞ்சுவது என சபாஷ் சூரி சகோதரா.
அழுக்கு உடை, அடர்தாடி என கிட்டத்தட்ட சாமியார் ரேஞ்சுக்கு இருந்தாலும் நிவின் பாலி நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். அஞ்சலியைப் பார்த்ததும் எட்டாயிரம் வருசத்துக்கு முன்னால உங்களைப் பார்த்தேன். அப்ப மாதிரியே தான் இப்பவும் இருக்கீங்க, அதனால உங்களைப் பிடிச்சிருக்கு என அஞ்சலியிடம் சிரித்து மகிழ்வது, ரயில்வே போலீசை துவம்சம் பண்ணுவது, மீண்டும் தனுஷ் கோடியில் அஞ்சலியைப் பார்த்ததும் உருகுவது என நிவின் பாலி செம ஸ்ட்ராங்.
சில காட்சிகளே என்றாலும் அஞ்சலியின் அமைதியான, அழகான முகமும் உடல் தோற்றமும் நம்மை ரொம்பவும் வசீகரிக்கிறது. குறிப்பாக தனுஷ்கோடியில் அவரின் எபிசோட் செம அழகு. இந்த அழகுணர்வை நம்ம உள்ளுணர்வுக்குள் கடத்தி மேலும் வசீகரிக்க வைக்கிறது கடற்கரையில் இருக்கும் சிதிலடமைந்த அந்த வீடு, கை ஒடிந்த சிலை . ஆர்ட் டைரக்டர் உமேஷ் ஜே.குமாருக்கு சபாஷ்.
ரயில் காட்சிகளில் மெய்சிலிர்க்க வைக்கிறார் கேமராமேன் ஏகாம்பரம். அங்கங்கே சின்னச் சின்ன பாடல்கள் மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து ரசனையைக் கூட்டுகிறார்கள் மியூசிக் டைரக்டர்கள் யுவன் சங்கர் ராஜாவும் சந்தோஷ் தயாநிதியும்.
‘ஏழு கடல், ஏழு மலை’ பெருமைக்குரிய படைப்பு, சிலிர்ப்பு.
அங்குசம் பார்வையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ 65/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.