பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 கேள்விகள்

0

நான் பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் பிரதமர் அல்ல என்று கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார், இது நரேந்திர மோடிக்கான உள்ளார்ந்த தாக்குதலாகும், ஏனெனில் அவர் பதவி ஏற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூட பேசியதில்லை.

மாறுகின்ற இந்தியா என்ற தலைப்பில் மன்மோகன் சிங்கின் எழுத்துகளும் உரைகளும் 5 நூல் தொகுப்புகளாக வெளியிடப்படுவதைத் தொடங்கிவைத்துப் பேசிய சிங், தன்னை மௌன சிங் அல்லது அமைதிப் பிரதமர் அல்லது அவர் பிரதமரானது ஒரு விபத்து என்றும் சொல்லி மகிழ்ச்சி அடைந்த விமர்சகர்களைத் தாக்கினார்.

ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது நான் பத்திரிகையாளர்களை முறையாகச் சந்திப்பதுண்டு என்று அவர் கூறினார். நான் விமானத்திலோ அல்லது விமானம் தரை இறங்கியவுடனோ நான் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவேன் என்றார். இதற்கு மாறாக, ஊடகத்தின் மீதான மோடியின் வெறுப்பானது கீழ்ப்படியும் ஊடகத்தினருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பேட்டி அளிப்பதையும் உண்மையான விமர்சன முறையில் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களைத் தவிர்ப்பதிலும் வெளிப்படுகிறது

பிரதமருக்கு, அவர் திறந்த மனதுடன் எதிர்கொண்டால், தி வயர் இணைய தள இதழானது 15 கேள்விகளை முன்வைத்துள்ளது

- Advertisement -

- Advertisement -

வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சி

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வேலை என்பது இந்தியாவின் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக இருந்தது, ஒரு கோடி வேலைகளை அளிக்கத் தவறிய காங்கிரசை நீங்கள் கேலி செய்தீர்கள். தற்போது, நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பல சுதந்திரமான மதீப்பீடுகள் கூறுவது என்னவெனில், வேலை உருவாக்குவதில் உங்களது பணி என்பது அதே அளவுக்கு மோசமாக உள்ளது. உதாரணத்திற்கு 2017இல் மொத்தமாக 1.4 மில்லியன் வேலைகள்தான் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன.
உங்களது அரசானது வருங்கால வைப்பு நிதியின் புள்ளி விவரங்களை முன்வைத்து ஆரோக்கியமான முறையில் வேலைகள் அதிகரித்துள்ளதற்கு ஆதாரமாகக் காட்டுகிறது. அதே சமயத்தில் ஏராளமான பொருளதார நிபுணர்கள் (உங்களது புதிய தலைமை புள்ளிவிவர நிபுணர் பிரவீண் ஸ்ரீவத்சவாவும் இதில் அடக்கம்) கூறுகையில் இது பொருளதாரத்தை முறைசார்ந்ததாக ஆக்குவதே தவிர, வேலையை உருவாக்குவது அல்ல என்று கூறியுள்ளனர்.

முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கி வருவதாக உங்களது அமைச்சர்கள் பெருமையாகக் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையான புள்ளிவிவரங்கள் பெரும்பாலான கடன்கள் மிகவும் குறைவானவை, அவற்றினால் எந்த வேலையையும் உருவாக்க முடியாது, ஒரு பக்கோடா கடையைக்கூட அமைக்க முடியாது என்று தெளிவுபடுத்துகின்றன.

எனவே திரு.மோடி அவர்களே, 2014இல் உங்களது வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி வேலைகள் எங்கே?

கிராமங்களின் துன்பம்

2. விவசாயிகளின் வருமானத்தை 2022ற்குள் இரு மடங்காக்குவேன் என்று வாக்குறுதி அளித்தீர்கள். இறுதிக் கணக்கெடுப்பில், விவசாய வருமானமானது கடந்த நான்கு ஆண்டுகளில் 5 விழுக்காடுதான் அதிகரித்துள்ளது. இதே விகிதத்தில் போனால் விவசாய வருமானம் இரு மடங்காகப் பெருக 14 ஆண்டுகளுக்கு மேலாகும்.

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, அதாவது உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு அளிக்கப்படும் என நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆனால் நாடு முழுவதும் விவசாயிகள் தங்களது பயிர்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவாகவே விற்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பயிர்க் காப்பீடு திட்டம் என நீங்கள் அறிவித்தது பெரிய மோசடி என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பிரீமியம் செலுத்துகிறார்கள் ஆனால் பயன்களைப் பெறுவதில்லை.

விவசாயத் துறையிடம் உங்களது அரசு காட்டும் அணுகுமுறை சமீப ஆண்டுகளில் பெரிய அளவிலான விவசாயப் போராட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளது, இதற்கு உங்களது பதில்?

நிதி விஷயங்கள்

3. அரசு நிதி விஷயங்களில் காங்கிரஸ் அரசு ஊதாரித்தனமாகவும் பற்றாக்குறை பட்ஜெட் நிதியுடன் பொறுப்பற்ற தன்மையுடன் இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.

உங்களது அரசோ மான்யங்களுக்கான தொகை செலுத்துவதைப் புறந்தள்ளுவது, பட்ஜெட்டிற்கும் மிகையாக உள்ள நிதி ஆதாரங்களைச் சார்ந்திருப்பது, பட்ஜெட்டிலிலுள்ள பற்றாக்குறையைச் சிறிய சேமிப்புத் திட்டங்களில் உள்ள நிதியின் மூலமாகக் கையாள்வது, பொதுத்துறைகளைப் பயன்படுத்தித் தனியார்மயமாக்குவது உள்ளிட்ட “ஆக்கபூர்வமான” கணக்கு நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இது எப்படி நீங்கள் கூறிய நிதி ஆதாரங்களைச் சிக்கனமாகவும் குறைந்தபட்சமாகக் கையாள்வது என்ற அரசுக் கொள்கையாக அமையும்?

வங்கியின் வாராக் கடனாளிகளும் மோசடியாளர்களும்

4. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கடந்த பிப்ரவரியில் வங்கிகளில் கடன் வாங்கி ‘திருப்பித் தராமல் மோசடி செய்த கோடீஸ்வரர்களின் பட்டியல் ஒன்றை உங்களுக்கு அனுப்பினார், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அவர்களை புலனாய்வு செய்யவும் வழக்கு தொடரவும் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நீங்களும் உங்களது அரசும் அந்தப் பட்டியலை மக்கள் முன்பாக வைக்கவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? இது தொடர்பாக ஒரு நாடாளுமன்றக் கமிட்டி பிரதமர் அலுவலகத்தில் தகவல் கேட்டது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படியும் எண்ணற்ற மனுக்களை தாக்கல் செய்தும் தகவல் கேட்கப்பட்டது. ஆனால் நீங்கள் எதையும் தர மறுத்துவிட்டீர்கள். ஏன்?

இரண்டாவது, உங்களது அமைச்சர்கள் முந்தைய ஐமுகூ அரசு காலத்தில் தொடங்கிய வாராக் கடன் நெருக்கடிக்கு எதிர்வினையாகவே திவால் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது என்று கூறினர். ஆனால் மத்திய வங்கியின் பிப்ரவரி 12ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின் மீது ரிசர்வ் வங்கி எழுப்பிய சர்ச்சை அல்லது பொதுத்துறை வங்கிகளை சரியான தவறு திருத்தல் நடவடிக்கை வரம்பை விட்டு வெளியேறக் கூறியதும் வங்கி அமைப்பைச் சரி செய்யும் நிகழ்வை சீர்குலைப்பதாகும். இந்த இரண்டு நடவடிக்கைகளை எப்படி நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்?

பண மதிப்பழிப்பு என்ற பேரிடர்

5. 2016 நவம்பரில் உங்களது பண மதிப்பிழப்பு தவறாகிப் போனால் எந்த தண்டனையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக நீங்கள் அறிவித்தீர்கள்.

ரிசர்வ் வங்கியே சமீபத்தில் கூறுகையில், கறுப்புப் பணத்தை ஒழிப்பது, போலிப் பண நோட்டுகளைத் தடுப்பது, பணப் புழக்கத்தைக் குறைப்பது, உயர் மதிப்பு பணத்தின் அளவைக் குறைப்பது போன்றவற்றின் மீது பண மதிப்பழிப்பு மிகவும் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தது (உங்களால் மதிப்பழிக்கப்பட்ட பணத்தின் 99 விழுக்காடு வங்கி அமைப்புக்குள் வந்துவிட்டது). நேரடி வரி வசூl அதிகரித்தது. ஆனால் இது கடந்த காலத்திலும் நடந்துள்ளது. வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ள பணம் வரித்துறை அதிகாரிகளால் தற்போது புலனாய்வு செய்யப்படும் என உங்களது அமைச்சர்களின் கூறிவருகின்றனர். ஆனால் வருமான வரித் துறைக்கு இதைச் செய்து முடிக்கப் பல ஆண்டுகள் ஆகும்.

எனவே, பண மதிப்பழிப்பு என்ன சாதித்தது? அதனால் என்ன லாபம்? சமீபத்தில், ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுகையில், உங்களது அரசானது பண மதிப்பழிப்பினால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார பாதிப்பை மதிப்பிடக்கூட இல்லை என ‘தெரிவித்தார். சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின்போது பண மதிப்பழிப்பு நெருக்கடியால் நடந்த உயிரிழப்புகளைப் பற்றி நீங்கேளே குறிப்பிட்டீர்கள். தற்போது, சர்வதேச நிதியத்தின் புதிய தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், பண மதிப்பழிப்பினால் தேசிய சராசரி உற்பத்தி இரண்டு விழுக்காடாவது குறைந்திருந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

ஒரு பிரதமர் என்ற முறையில் இதன் பாதிப்பு குறித்து ஒரு ஆய்வுக்கு உத்தரவிட்டிருக்கலாம் என்று யோசித்திருக்கக் கூடாதா? இந்த முடிவை எடுக்கும் முன்பாக நீங்கள் யாரிடம் கலந்தாலோசித்தீர்கள்? இதன் விளைவாகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

கூண்டிலிடைக்கப்பட்ட கிளி

6. சிபிஐயின் நம்பகத்தன்மை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது அதை கூண்டிலிடைக்கப்பட்ட கிளி என்று அழைத்தீர்கள். ஆனால் அது அப்படியேதான் இருக்கிறது. உங்களது அரசியல் எதிரிகளான லாலு பிரசாத் அல்லது ப.சிதம்பரம் ஆகியோர் மீதான பழைய வழக்குகளை ஆராய்வதில் தீவிரமாகச் செயல்படுகிறது, ஆனால் உங்களது கூட்டாளியான அமித் ஷா மீதான கொலை வழக்கு ஒன்றின் விசாரணை தொடங்கும் முன்னரே கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்தது. அதை எதிர்த்து முறையீடு செய்ய மறுத்துவிட்டது. அதே போன்று உங்களது கூட்டாளிகளாக உள்ள அல்லது பாஜகவின் புதிய உறுப்பினர்களான முகுல் ராய் அல்லது நாரயண் ரனே போன்றோர் மீதான ஊழல் வழக்குகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே. சிபிஐயானது உங்களது அரசியல் லாபங்களுக்காகத் தெரிவு செய்து வழக்குகளை எடுக்கிறதா?

4 bismi svs

வெறுப்புப் பேச்சு

7. உங்களின் முதல் சுதந்திர நாள் உரையில் வகுப்புவாதத்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால் வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் உங்கள் ஆட்சியின்போது நடந்த தாக்குதல்களால் குறைந்தபட்சம் 314 பேராவது பலியாகியிருப்பார்கள் என்றும் பல்வேறு மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன. 39 பேர் கும்பல் படுகொலையால் கொல்லப்பட்டிருப்பார்கள். தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் மீது தாக்குதல்கள் ஏறக்குறைய 25 விழுக்காடு அதிகரித்துள்ளது.

உங்களது கட்சியின் தலைவர்கள், எம்பிகள், அமைச்சர்கள், சங்க பரிவார கூட்டாளிகள் ஆகியோர் நாள்தோறும் வகுப்புவாத அடிப்படையில் பேசிவருகின்றனர். ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரிகள் 80 பேர் நீங்கள் தேர்தெடுத்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அவருடைய முரட்டுப் பிடிவாதம் மற்றும் பெரும்பான்மைவாத மேட்டிமைப்ப்போக்கிறகாகப் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நீங்கள் ஏன் இந்தியக் குடிமக்களுக்கு எதிராக மதவாதப் பிரச்சாரத்தையும் வன்முறைத் தாக்குதல்களையும் மேற்கொள்ளும் உங்களது கட்சியினர் குறித்து மௌனம் சாதிக்கிறீர்கள்? உனாவில் தலித்கள் தாக்கப்பட்டபோதுதான் நீங்கள் பேசினீர்கள். ஏனெனில் பாஜக தலித்களை சக்தி வாய்ந்த வாக்கு வங்கியாகப் பார்க்கிறது. ஆனால் முஸ்லிம்கள் குறி வைக்கப்பட்டபோது நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சப்கா சாத் (அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி) என்பது அவர்களையும் உள்ளடக்கியது இல்லையா?

ரபேஃல் மர்மம்

8. நீங்கள் 2015, ஏப்ரல் 10ஆம் தேதியன்று பாரீஸ் சென்றபோது 36 ரபேஃல் விமானங்கள் வாங்கியதாக அறிவித்தீர்கள். ஆயுதங்கள் கொள்முதலுக்கான வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் அறிவிக்கும் முன்பாக இந்திய விமானப்படையும் பாதுகாப்பு அமைச்சகமும் இது விஷயத்தில் முறையான செயல்முறைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், உங்களது அரசானது இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. நீங்கள் திரும்பிய பின்னர் என்ன நடந்தது என்பது பற்றியே கவனம் செலுத்தப்பட்டது. அதனால் தயவுசெய்து கூறுங்கள், நீங்கள் அறிவிப்படற்கு முன்னதாக அரசுக்குள் என்ன முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? மேக் இன் இந்தியா திட்டத்தையும் மூல ஒப்பந்தத்தின் பகுதியான தொழில்நுட்பத்தை மாற்றுவதையும் ஏன் ரத்து செய்தீர்கள்? ஏன் ஒரு விமானத்திற்கு மூன்று மடங்கு அதிகமாக ஏன் பணம் செலுத்த வேண்டும்?

பாபர் மசூதியும் அயோத்தியும்

9. நீங்களும் உங்களது கட்சியும் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்னதாக இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக அர்ப்பணித்துக்கொண்டீர்கள். பாபர் மசூதியை இடித்தது என்பது ஒரு கடுமையான குற்றம் என்பதும் அதில் ஈடுபட்ட குண்டர்களும் அந்த சதியில் ஈடுபட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் நம்புகிறீர்களா? (1) உங்கள் அரசு வழக்கு விசாரணையின் போக்கை முடக்க ஒரு சட்டத்தையோ அல்லது ஒரு அவசர சட்டத்தையோ இயற்றப்போவதில்லை என்றும் (2) அந்த இடத்திற்கான உரிமை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அதன் விளைவைப் பற்றிப் கவலைப்படாமல் அதை ஏற்றுக்கொள்வீர்களா? அந்த சர்ச்சைக்குரிய இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்று நீதிமன்றம் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்றும் நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா?

காஷ்மீர் சிக்கல்

10. பெரும்பாலான நிபுணர்கள் காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் அந்நியப்பட்டு போனது. ஒரு கூட்டணியின் அங்கமாகவும் தற்போது நேரடியாகவும் நீங்கள் அந்த மாநிலத்தை நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளீர்கள். பலியான அப்பாவிக் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காஷ்மீரின் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேர்வதும் அதிகரித்துள்ளது. மாநிலத்திற்குள் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் எந்த அரசியல் முன்முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, அரசியல் சாசனத்தின் பிரிவு 35ஏ குறித்த பதற்றத்தை அதிகரிக்க அனுமதித்துள்ளீர்கள். அந்த மாநிலத்தில் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க விரும்புகிறீர்கள்?

அறிவியலை புறக்கணிப்பது

11. நீங்கள் உள்பட, எம்பிகள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் போன்ற சட்டத்தை உருவாக்குபவர்களின் பேச்சும் நடவடிக்கைகளும் இந்தியச் சமூகத்திலுள்ள அறிவியல் உணர்வைப் பாதிப்பதாகப் பல அறிவியலாளர்களும் அறிவியல் கல்வியாளர்களும் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

உங்களது அரசாங்கம் “பாரம்பரிய” அறிவியலுக்கு அதிகமாகச் செலவழிக்கிறது, அத்துடன், கோமியம் எனப்படும் பசு மூத்திரத்தின் மீதான ஆராய்ச்சிக்காகவும் அதிகமாகச் செலவழிக்கின்றது. அரசு நிதியுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆய்வுத் திட்டங்களில் தெளிவான ஆதாரங்களோ அல்லது தகவல்களோ இல்லை என்பதுடன் அவர்களின் பரிசோதனைகளில் எந்த நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. இருந்தாலும், உங்களது அரசானது இந்தியா அறிவியல் அளித்த நாடாகவும், அந்த அறிவியலாளர்கள் நோபல் பரிசுகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் உருவகப்படுத்திவருகிறீர்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆர் அன்ட் டி எனப்படும் ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் 0.7 விழுக்காடுதான் செலவழிக்கப்படுவது என்பது மிகக் குறைவானதாகும். அறிவியல் துறைகள் சமீபத்திய பட்ஜெட்டில் அதிகமான பணத்தை பெற்றுள்ளன. ஆனால் ஆயுஷ் அமைச்சகம் 13 விழுக்காடு கூடுதலாக பெற்றுள்ளது. உயர் மருத்துவக் கல்வி படிக்கும் மருத்துவர்கள் இரண்டு மடங்கு கூடுதல் ஊக்கத்தொகை கேட்டுப் போராடி வருகின்றனர். இந்த முரண்பாடுகளை நீங்கள் எப்படி தீர்க்கப் போகிறீர்கள்?

தகவல் பெறும் உரிமை மற்றும் லோக்பாலின் மீது தொடுத்துள்ள போர்

12. உங்களது கட்சி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தப்போவதாகக் கூறிக்கொள்ளும் அதே வேளையில் உங்களது அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஏராளமான திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டத்தை நீர்த்து போகச் செய்துவிடும் என்றும் பல அரசுத் துறைகளின் தகவலளிக்கும் பொறுப்புடைமையை நீக்கிவிடும் என்றும் வெளிப்படைத்தன்மைக்காக வாதாடுபவர்கள் கூறுகின்றனர். மத்திய தகவல் ஆணையத்திலுள்ள காலியிடங்களை நிரப்பாமல் அந்த அமைப்பைப் பலவீனப்படுத்திவிட்டீர்கள். உங்களது போதனைக்கும் நடைமுறைக்கும் இடையே இடைவெளி உள்ளதா?

லோக்பால் சட்டமானது 2014இல் நிறைவேற்றப்பட்டது. அரசு ஏன் இன்னும் லோக்பாலை நியமிக்காமல் இருக்கிறது? தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் இருப்பார் என்று முன்னதாக நீங்கள் கூறினீர்கள். ஆனால் தற்போது யாரும் அங்கில்லை.

அமெரிக்காவும் ஆசியாவும்

13. ட்ரம்ப் அதிபர் பதவி ஏற்ற ஆரம்ப நாட்களில், நீங்கள் அவரிடமும் அமெரிக்காவிடமும் நெருக்கமான உறவு கொள்ளப்போவதாக அதிகமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தீர்கள். ஆனால், சமீப மாதங்களில், இந்தியா சீனத்துடன் சமரசத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ரஷ்யாவுடன் கொண்டிருக்கும் உறவுகளை ஆழப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதாகத் தோன்றுகிறது. ஆசிய மண்டலத்தில் குறிப்பாக ஈரான், சவுதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின்பால் ட்ரம்ப் கடைபிடிக்கும் கொள்கைகள் பெரிய அளவிலான உறுதியற்ற தன்மையையும் வன்முறையையும் உருவாக்குவதற்குக் காரணமாக அமையும் என்று கருதுகிறீர்களா? அது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பையும் மேற்கு ஆசியாவிலுள்ள லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களையும் பாதிக்கும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?

மொத்தக் கல்வி

14. முதல்வராவதற்கு முன்னதாக வெளியிலிருந்து தேர்வு எழுதி டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் முதுகலைப்பட்டமும் பெற்றதாக 2000இல் ஒரு பேட்டியில் கூறியுள்ளீர்கள்.

நீங்களோ அல்லது உங்களது அரசோ உங்களது உண்மையான பட்டங்களை டெல்லி பல்கலைக்கழகத்திடமிருந்து வெளியிட ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள்? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, மத்தியத் தகவல் உரிமை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது, டெல்லி பல்கலைக்கழகம் இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று கூறி இப்பிரச்சினையை நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்றுள்ளது. அதன் பிறகு, அமித் ஷாவும் அருண் ஜேட்லியும் குஜராத் பல்கலைக்கழகத்திடமிருந்து உங்களது டிகிரியின் நகலைப் பெற்று வெளியிட்டனர். ஆனால் அதில் “மொத்த அரசியல் இயலில் எம்ஏ” என்றிருந்தது. டெல்லி பல்கலைக்கழகத்திடமும் குஜராத் பல்கலைக்கழகத்திடமும் உங்களது உண்மையான பட்டப் படிப்பு சம்பந்தமான ஆவணங்களைப் பொதுமக்களின் முன்பாக வைக்க வேண்டும் என்று நீங்கள் வேண்டுகோள் விட்டு இந்த சர்ச்சையை உடனடியாக முடித்து வைக்கலாம். ஏன் நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது?

கண்ணியமற்ற மொழி

15. நீங்கள் சோனியா காந்தியை ஒருமுறை “காங்கிரசின் விதவை” என்று குறிப்பிட்டீர்கள். நீங்கள் சோனியாவையும் ராகுல் காந்தியையும் மட்டுமல்ல ராஜீவ் மற்றும் இந்திரா காந்தியையும் ஜவஹர்லால் நேருவையும் தாக்கியுள்ளீர்கள். அவர்களின் ஆட்சியின் கீழ் நீங்கள் இருந்துள்ளீர்கள். பாஜகவின் தேசியத் தலைவர்களில் ஒருவர் நேருவை இந்துஸ்தானின் ரவுடி என்று அழைத்துள்ளார். சசி தாருரின் எதிர்கால மனைவியை “50 கோடிக்கான பெண் நண்பர்” என்று அழைத்துள்ளீர்கள். நீங்களும் உங்களது கட்சியும் ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? இது பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைக் காக்குமா? ட்விட்ரில் உங்கள் அதிகாரபூர்வமான தகவல் பலகையில் ஆபாசமாகவும் வகுப்புவாதமாகவும் பெண்களுக்கு எதிரான மொழியையும் பயன்படுத்துபவர்களாகவும் உள்ள சில தனி நபர்களை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். ஏன் இவர்களைப் பின்பற்றுகிறீர்கள்?

 

நன்றி: சவுக்கு சங்கர்

https://www.savukkuonline.com/

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.