அனல் பறக்கும் 2024 தேர்தல் களம் – கூட்டணி கட்சிக்குள் நடக்கும் உள்குத்து அரசியல் !

0

அனல் பறக்கும் தமிழ்நாடு தேர்தல் களம் கூட்டணி அமைப்பதில் கட்சிகள் தீவிரம் இந்தியா நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் – மே திங்களில் தேர்தல் நடக்கும் என்றும் அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் அல்லது மார்ச்சு மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கின்றது. திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. எந்தக் கூட்டணியில் எந்தக் கட்சிகள் இணையப் போகின்றன என்பது இதுவரை இறுதியாக்கப்படாத சூழ்நிலையே தொடர்ந்து வருகின்றது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டால் கூட்டணிகள் அமைந்துவிடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

https://businesstrichy.com/the-royal-mahal/

திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து கூட்டணியில் இருந்து வருகின்றன. திமுகவைப் பொறுத்தவரையில் 30 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகின்றது. காங்கிரஸ் பலமுறை போட்டியிட்டு வரும் விருதுநகர், கரூர், ஆரணி, திருவள்ளூர், திருச்சி, சிவகங்கை – ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடவேண்டும் என்று திமுக மண்டல ஆய்வுக் கூட்டங்களில் திமுக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், திமுக தொண்டர்கள் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

திமுக இதுவரை போட்டியிடாத தொகுதிகளில் போட்டியிட ஏற்பாடு

கருத்துகளைக் கேட்ட திமுகவின் முதன்மைச் செயலர் கே.என்.நேரு மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோர்.“தொண்டர்களின் கருத்தை ஏற்றுத் திமுக இதுவரை போட்டியிடாத தொகுதிகளில் போட்டியிட ஏற்பாடுகள் செய்யப்படும். தொண்டர் 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர். திமுக கூட்டணியில் புதிய கட்சியாக நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைய இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. மக்கள் நீதி மய்யம் நேரடியாகத் திமுக கூட்டணியில் இணையவுள்ளதா? அல்லது காங்கிரஸ் கட்சியோடு இணைந்து இடம் பெறப்போகிறதா என்பது இன்னும் தெளிவாகப்படவில்லை.

திருமா
திருமா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

திருச்சியில் கடந்த மாதம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் ஜனநாயகம் வெல்லும் மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. மாநாட்டில் கலந்துகொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின்,“திமுகவையும் விசிகவையும் பிரிக்கமுடியாது. இரட்டைக்குழல் துப்பாக்கி”என்று வருணித்தார். இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் தாங்கள் போட்டியிடுவதற்கான 8 தொகுதிகளின் பட்டியலைத் திமுகவிடம் அளித்துள்ளனர். அதில் சிதம்பரம், விழுப்புரம் தனித்தொகுதியோடு கள்ளக்குறிச்சி பொதுத்தொகுதியும் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். விசிகவுக்கு 2 நிச்சயம் என்ற நிலையில் 3ஆவது பொதுத்தொகுதி கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது என்ற கருத்தே அரசியல் களத்தில் நிலவி வருகின்றது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தியத் தேசியக் காங்கிரஸ்

இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 15 இடங்களில் போட்டியிடத் திமுகவிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. திமுக தரப்பில் பாண்டிச்சேரி தொகுதியையும் சேர்த்து 7 தொகுதிகள் வழங்கப்படலாம் என்ற செய்திகள் களத்தில் வலம் வருகின்றன. காங்கிரஸ் போட்டியிடக் கூடிய தொகுதிகளின் விவரம் 1. கன்னியாகுமரி, 2. விருதுநகர், 3. திருவள்ளூர் 4. கிருஷ்ணகிரி 5. மயிலாடுதுறை 6. தஞ்சாவூர் 7. பாண்டிச்சேரி. இதில் ஒன்றிரண்டில் மாற்றங்கள் இருக்கலாம். மொத்த எண்ணிக்கை 7 என்பதில் மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவே என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வைகோ - துரை வைகோ
வைகோ – துரை வைகோ

மறுமலர்ச்சி திமுக (மதிமுக )

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு ஒரு தொகுதியும், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை இடமும் வழங்கப்பட்டது. ஈரோட்டில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றார். மாநிலங்களவை உறுப்பினராக வைகோ பதவியேற்றுக் கொண்டார். தற்போது மதிமுக திமுகவிடம் போட்டியிடுவதற்கான 6 தொகுதிக்கான பட்டியலை அளித்துள்ளது. அதில் திருச்சி, காஞ்சிபுரம் (தனி), ஈரோடு ஆகிய 3 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் கேட்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் திருச்சி, காஞ்சிபுரம் தொகுதிகளோடு ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் தரப்படும் என்று தெரிகிறது. திருச்சியில் துரைவைகோ, காஞ்சிபுரத்தில் மல்லைச் சத்யா ஆகியோர் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஈரோடு கணேசமூர்த்திற்கு அல்லது மதிமுக பொருளாளர் நெய்வேலி செந்திலதிபனுக்கு வழங்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. உதயசூரியன் சின்னத்தில் நிற்க துரைவைகோ தயக்கம் காட்டிவருகிறார். இது கடைசிநேர பஞ்சாயத்தில் முடிய வாய்ப்பு உள்ளது.

தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள்
தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள்

கம்யூனிஸ்ட்டு ( சி.பி.எம், சி.பி.ஐ. )

பொதுவுடமை கட்சிகளான மார்க்சிஸ்ட், வலது கம்யூனிஸ்ட்டு கடந்த தேர்தலில் தலா 2 இடங்கள் எனக் கோவை, திருப்பூர், மதுரை, நாகை 4 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்த முறை இரு பொதுவுடமை கட்சிகளுக்குத் தலா 2 இடங்கள் கிடைக்கும். போட்டியிடும் தொகுதிகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற நாகப்பட்டினத்தில் தற்போதைய தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற செய்தியும் உள்ளது. மதுரையிலும் திமுக போட்டியிடலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. நாகபட்டினமும், மதுரையும் கட்டாயம் வேண்டும் என்கிற நெருக்கடியை கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடுத்து வருகிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இராமநாதபுரத்தில் போட்டியிட்டு நவாஸ்கான் வெற்றிபெற்றார். நவாஸ்கானுக்கும் இராமநாதபுரம் மாவட்டக் கழகத்திற்கும் தற்போது ஏழாம் பொருத்தமாக உள்ளது. இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு இஸ்லாமியக் கட்சியான மனித நேய மக்கள் கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. விருப்பத்தை நிறைவேற்றும் நிலையில் திமுக இருக்காது என்றே தெரிகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

எடப்பாடி பழனிச்சாமி - சீமான்
எடப்பாடி பழனிச்சாமி – சீமான்

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைக்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதுவரை SDPI என்னும் இஸ்லாமியக் கட்சியும், புரட்சிப் பாரதம் என்னும் தலித் கட்சியும்தான் அதிமுகவோடு கூட்டணி என்று அறிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் SDPI கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும், புரட்சிப் பாரதம் கட்சிக்கு திருவள்ளூவர் அல்லது விழுப்புரம் தொகுதிகளில் ஒன்று வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக தரப்பில் பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளைக் கூட்டணியில் இணைக்கப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. பாமக தரப்பில் 8 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் கேட்கப்பட்டதாகப் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பிரேமலதா
தேமுதிக பிரேமலதா

தேமுதிக

தேமுதிக தரப்பில் 14 நாடாளுமன்றத் தொகுதி + ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தரும் கட்சியோடு கூட்டணி என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இவரின் அறிவிப்பைக் கேட்டு அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. நாம் தமிழர் வழக்கம்போல் தனித்துத்தான் போட்டி என்று அறிவித்துள்ளது. அதிமுக வேண்டுமானால் நாம் தமிழர் கூட்டணியில் இணைந்துகொள்ளலாம் என்று நாதக இளைஞர் அணி இடும்பாவனம் கார்த்திக் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பும் அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதிர்ச்சியை அதிமுக தாங்கிக் கொண்டு, தமிழ் மாநிலக் காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளைக் கூட்டணியில் இணைக்கப் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. முயற்சி தோற்றால் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்தே போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அண்ணாமலை - பிஜேபி-
அண்ணாமலை – பிஜேபி-

பாஜக கூட்டணி

தமிழ்நாட்டில் 3 அணியாகப் பாஜகவும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது பாஜக கூட்டணியில் இணைந்திருப்பதாகப் பாரிவேந்தர் தலைமையில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சி மட்டும் அறிவித்துள்ளது. இக் கட்சிக்குப் பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிகின்றது. பாமகவோடு கூட்டணி பேசிய பாஜகவிடம் பாமக 12 தொகுதிகள் + 1 மாநிலங்களவை உறுப்பினர் கேட்டுள்ளது. பாஜக தரப்பிலிருந்து இதுவரை பாமகவோடு கூட்டணி என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. தேமுதிகவின் கோரிக்கையான 14 தொகுதிகள் + 1 மாநிலங்களவை உறுப்பினர் என்பதை பாஜக ஏற்க மறுத்து, “அத்தனைத் தொகுதிகளைத் தருவோரிடம் தேமுதிக கூட்டணி வைத்துக்கொள்ளலாம்” என்று பாஜக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சரத்குமார் தலைமையில் இயங்கி வரும் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவோடு கூட்டணி பேசத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் சமக இணைந்தால் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற கருத்தும் உள்ளது. அதில் சரத்குமார் போட்டியிடலாம் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்த புதிய நீதிக் கட்சி, தமிழ்மாநிலக் காங்கிரஸ் கட்சிகள் இரு கட்சிகளின் கூட்டணியில் எந்தக் கட்சியின் கூட்டணியோடு இருக்கப்போவதாக இன்னும் அறிவிக்கவில்லை.

DDV_தினகரன்
DDV_தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி

பாஜக கூட்டணியில் இணைவதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி பாஜகவோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. இந்தக் கட்சிக்குத் தஞ்சாவூர் மற்றும் சிவகங்கைத் தொகுதி வழங்கப்படும் என்று தெரிகின்றது. தானும் அதிமுகதான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர் செல்வம் அணி பாஜக கட்சியின் கூட்டணியில் இணைந்து செயல்படுவோம் என்று வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கூட்டணியில் பன்னீர்செல்வம் மகன் இரவீந்திரநாத் போட்டியிட தேனி தொகுதி வழங்கப்படும் என்றும் தெரிகின்றது. சசிகலா பாஜகவுடன் கூட்டணியில் இணைவார்களா? என்பது இதுவரை தெரியவில்லை.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,“பாஜக தேவேந்திரக் குல வேளாளர் மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றி விட்டது. புதிய தமிழகம் பாஜக கூட்டணியில் இல்லை என்றும் வெற்றி பெறும் கூட்டணியில் இணைவேன்” என்று தெரிவித்துள்ளார். இவருக்குத் திமுகவில் இடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதிமுக கூட்டணிக்குச் சென்றால் டாக்டர் வழக்கமாகப் போட்டியிடும் தென்காசி தொகுதி வழங்கப்படலாம். மேலும், பாஜக கூட்டணியில் முத்தரையர் சமூகத்தின் ஆதரவு பெற்ற தமிழர் தேசம் கட்சி போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவர் கே.கே.செல்வக்குமார் கூறியுள்ளார். இக் கட்சி பாஜக கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்பட்டால் திருச்சி தொகுதி வழங்கப்படலாம்.

எடப்பாடி பழனிச்சாமி - சீமான்
எடப்பாடி பழனிச்சாமி – சீமான்

நாம் தமிழர் கட்சி

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுடன் நாம் தமிழர் கட்சிக்குப் பெருந்தொகை வழங்கப்பட்டது தொடர்பாக NIA என்னும் தேசியப் புலனாய்வு முகாமை நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 6 பேருக்கு NIA அனுப்பிய சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் NIA அலுவலகத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,“தேச துரோக வழக்கில் நாம் தமிழர் பிள்ளைகளைச் சிக்க வைக்கப் பாஜக முயற்சி செய்கிறது. இந்த முயற்சியை நாங்கள் தோற்கடிப்போம். நாங்கள் பாஜகவுக்கு அஞ்சமாட்டோம். நாடாளுமன்றத் தேர்தலில் பின்வாங்க மாட்டோம். 40 தொகுதிகளிலும் தனியாகவே போட்டியிடுவோம்” என்று ஆவேசம் பொங்கப் பேசினார்.

நாம் தமிழர் கட்சிக்குப் பாஜக NIA மூலமாகக் கடும் நெருக்கடிகளைக் கொடுத்தால் நாம் தமிழர் கட்சி பாஜகவை எதிர்த்து வரும் அதிமுக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி இணைந்தால் நாம் தமிழர் கட்சி 1.கன்னியாகுமரி, 2. கடலூர் 3. நாகப்பட்டினம் 4. தென்காசி 5. நெல்லை 6. மத்தியச் சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகின்றது. மேலும், இராமநாதபுரத்தில் இந்தியத் தலைமை அமைச்சர் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவார் என்பதை அக்கட்சி தெரிவித்துள்ளது.

அனல் பறக்கும் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கூட்டணி அமைப்பதில் திமுகவே தற்போது முன்னணியில் உள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என்பதில் கறாராக இருந்துவருகிறார்கள். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இணையப் போகின்றன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இந்த இருகட்சிகளும் கூட்டணி அமைப்பதில் பின்தங்கியே உள்ளன. அரசியல் வானில் மேகக்கூட்டங்கள் கலைந்து விரைவில் கூட்டணியில் ஒரு தெளிவு ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன என்பதை மறுக்கமுடியாது.

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.