திருமா : எடப்பாடிக்கு கிரீன் சிக்னல் – திமுகவுக்கு ரெட் சிக்னல் (?) அரசியல் ஆடுபுலி ஆட்டம்

0

திருமா : எடப்பாடிக்கு கிரீன் சிக்னல் – திமுகவுக்கு ரெட் சிக்னல் (?)
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணிகள் மாறுகின்றன? பரபரப்பு தகவல்கள்

தமிழக அரசியல் அரசியல் அரங்கில் எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. “அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது” என்று அரசியல் உலகின் ஒரு பொன்மொழி உள்ளது. அந்தப் பொன்மொழி பலநேரங்களில் உண்மையாகிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் வியப்பைத் தருகிறது.

2 dhanalakshmi joseph

கடந்த மாதத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது,‘அதிமுக வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மெகா கூட்டணியை அமைக்கும். இழந்த செல்வாக்கை அதிமுக மீட்டெடுக்கும். என் தலைமையில் 4 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுகவின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைப்பேன். புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் மக்கள் நலன் அரசை ஏற்படுத்துவேன்’ என்று அதிரடியாக அறிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி
- Advertisement -

- Advertisement -

தொலைக்காட்சி ஊடகங்களில் அதிமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பொங்கலூர் மணிகண்டன், புதுக்கோட்டை சீனிவாசன், இபிஎஸ் ஆதரவாளர் மணிகண்டன் ஆகியோர் பேசும்போது,‘வரும் தேர்தல்களில் அதிமுக அமைக்கும் மெகா கூட்டணியில் எந்தக் கட்சிகள் அதிமுகவோடு கூட்டணி சேரும்’ என்று செய்தியாளர்கள்/நெறியாளர் கேள்வி எழுப்பியபோது அனைவரும் வழக்கம்போல் ‘பொறுத்திருங்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 1 ½ வருடம் உள்ளது. சட்டமன்றத்திற்கு 3 ½ ஆண்டுகள் உள்ளது. நிச்சயம் மெகா கூட்டணியை அதிமுக உறுதியாக அமைக்கும். அண்ணன் திருமாவளவன் எங்கள் மெகா கூட்டணியில் இணையும் வாய்ப்பு உள்ளது’ என்று ஒட்டுமொத்தக் குரலில் கூறியது அரசியல் அரங்கை அதிரச் செய்தது என்னவோ உண்மைதான்.

சில நாள்களுக்கு முன்பு மதுரை விமானநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையைப் பார்வையிட்ட பின்னர்ச் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,“பாஜக – பாமக இல்லாத கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறும். பாஜக – பாமக கூட்டணியில் சேர்க்கப்பட்டால் கூட்டணியிலிருந்து விசிக விலகும்” என்று உறுதியாகக் கூறினார்.

அடிப்படியனால் திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுமா? என்ற கேள்வி இயல்பாக எழும்.

பாமகவை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைக்கத் திமுகவின் பொதுச்செயலாளர் துரை முருகன் எல்லாத் தேர்தல்களிலும் முயற்சி எடுத்து வந்தார். இப்போதும் முயற்சி எடுத்து வருகிறார் என்பதே உண்மை. அதற்கு அடிப்படைக் காரணம் சொந்தச் சாதி பாசத்தைத் தவிர வேறெதுவுமில்லை.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி எம்பி ஆன டாக்டர் விஷ்ணு பிரசாத்தின் மகள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. அந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரையும் சந்திக்க வைக்க பெரும் முயற்சி எடுத்து சந்திக்க வைத்து நலம் விசாரித்தனர். 

இந்த சந்திப்புக்குப் பிறகு தான் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களிடம் கூட்டணி குறித்து பேசினார்…

(04.12.22) செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசும்போது,‘ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அதிமுக வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிடும்’ என்று அறிவித்துள்ளார். பாஜக பன்னீர்செல்வத்தைக் கையில் வைத்துக்கொண்டு, எடப்பாடியைத் தொடர்ந்து ‘அதிமுகவில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்திருங்கள்’ என்று பாஜக அன்பாக மிரட்டி வருகின்றது.

எடப்பாடி,‘அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எப்போதும் இடமில்லை. அவர்களை இணைத்துக்கொள்ளமுடியாது’ என்று வெளிப்படையாகவே பாஜகவுக்குப் பதில் அளித்துள்ளார்.

அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள்,‘பாஜகவைக் கூட்டணியிலிருந்து வெளியேற்ற மாட்டோம். வெளியேறினால் மகிழ்ச்சியடைவோம். அதிமுக அமைக்கும் மெகா கூட்டணியில் பல கட்சிகள் இணையும் வாய்ப்பு ஏற்படும். அதிமுக வெற்றியை நோக்கிப் பயணம் செய்யும்’ என்று ஈயம் பூசுன மாதிரியும் ஈயம் பூசாதது மாதிரியும் பேசி வருகின்றனர்.

மொத்தத்தில் எடப்பாடி பாஜகவைக் கழற்றிவிடுவது என்பதில் குறியாக இருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடிகின்றது.

அதிமுகவின் மெகா கூட்டணியில் பாமக இணையும் வாய்ப்பில்லை. காரணம் வன்னியர்களுக்கு என்று வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு 10.5% உச்சநீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவித்துவிட்டது. எடப்பாடி சட்டம் செல்லுபடியாகும் வகையில் சரத்துகளை இணைக்கவில்லை என்று பாமக இன்று வரை குற்றம் சாட்டி வருகின்றது.

4 bismi svs

எடப்பாடியின் அதிமுக பாஜகவைக் கழற்றிவிட்டும், பாமக இல்லாமலும் மெகா கூட்டணி அமைத்தால் அக் கூட்டணியில் திருமா தலைமையில் இயங்கி வரும் விசிக இடம்பெறும் வாய்ப்பு அதிகம் என்று அரசியல் திறனாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். காரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விசிகவுக்குத் திமுக 2 இடங்களை ஒதுக்கியது. அதில் விழுப்புரத்தில் போட்டியிட்ட விசிகவின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். திருமா சிதம்பரத்தில் சுயேட்சை சின்னம் பானை சின்னத்தில் போட்டியிட்டுக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆக, நாடாளுமன்றத்தில் விசிகவின் பலம் ஒன்றுதான் என்ற உண்மையை விளங்கிக் கொள்ளவேண்டும். விசிக ஒரு மாநிலக் கட்சி என்ற தகுதியை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை.

ஒரு கட்சி மாநிலக் கட்சி என்ற தகுதியைப் பெற, நாடாளுமன்ற மக்களவையில் 2 இடங்களைப் பெற்றிருக்கவேண்டும். அல்லது சட்டமன்றத்தில் 12 இடங்களைப் பெற்றிருக்கவேண்டும். அல்லது தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 10% வாக்குகளைப் பெற்றிருக்கவேண்டும். விசிக மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட நாடாளுமன்றத்தில் 2 இடங்களில் வெற்றிப்பெறவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தன் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை அள்ளிக் கொடுத்துவிடாது என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான். கிள்ளியாவது கொடுக்குமா? என்றால் விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் தலா ஒரு இடம், கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலா 2 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தற்போது 5 இடம் மட்டுமே கொடுக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவலும் உள்ளது. விசிக தன்னை மாநிலக் கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ள 2 இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டும். திமுக 2 இடங்கள் தருவது என்பது முயற்கொம்பே.

பாஜக – பாமக இல்லாத எடப்பாடியின் அதிமுக மெகா கூட்டணியில் திருமாவின் விசிக இணைந்தால் 6 இடங்கள் அதில் 4 தனித்தொகுதிகள் + 2 புதுச்சேரி உட்பட பொதுத்தொகுதிகள் வழங்கப்படும் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உலவுகின்றன.

திருமா தற்போது சாதிகளைக் கடந்து, மதங்களைக் கடந்து, எல்லா மக்களாலும் குறிப்பாக இளைஞர்களால் மதிப்பிற்குரிய தலைவராக உயர்ந்து வருகின்றார்.

உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக விசிக சீராய்வு மனுவை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் திருமா பட்டியலினத் தலைவர் என்ற வட்டத்தைத் தாண்டி, ஓபிசி இன மக்களின் தலைவராகவும் உயர்ந்துள்ளார். இந்த உயர்வை திமுகவைவிட எடப்பாடியின் அதிமுகவே திருமாவைப் பயன்டுத்திக் கொள்ள அதிக அக்கறை எடுத்து வருகின்றது என்பது அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ரவிக்குமார் -திருமா – எடப்பாடி

இந்நிலையில், எடப்பாடி அதிமுகவின் பணபலமும், திருமாவின் மக்கள் பலமும் ஒன்றிணைந்தால் வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், கொங்கு மண்டலத்தில் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும். விசிகவும் 6 இடங்களில் 4 இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பும் உள்ளது என்று தேர்தல் திறனாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எடப்பாடி கூட்டணியில் திருமா இடம் பெற்றால், திமுக வடசென்னை, தென்சென்னை, மத்தியச் சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி போன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதற்குப் பெரும் சிரமங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் தேர்தல் திறனாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பாஜக – பாமக இல்லாத கூட்டணியில் விசிக இடம் பெறும் என்று திருமாவின் அறிவிப்பு என்பது தொகுதிகளை அள்ளித்தரும் எடப்பாடிக்குக் ‘கிரீன் சிக்னல்’ கொடுத்துள்ளார் என்றும் தொகுதிகளைக் கிள்ளித்தரும் திமுகவுக்கு ‘ரெட் சிக்னல்’ கொடுத்திருக்கிறார் என்று விடுதலைச் சிறுத்தை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

ஆந்திராவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
ஆந்திராவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

மேலும், ஆந்திரா மாநிலத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ள திருமா, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கொடுக்கும் ஓர் இடத்தைக் கையேந்தி பெற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,‘கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை வெல்ல மாவட்டச் செயலாளர்கள் இப்போதே செயலாற்றவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

திமுக விசிகவுக்கு 3 தொகுதிகளையாவது கொடுத்து, கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளைத் தக்கவைத்துக் கொள்ளுமா? விசிக போனால் போகட்டும் என்று பாமகவைக் கூட்டணியில் இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்விகளுக்கு உடனடிப் பதில் கிடைக்காது என்றாலும் பதில் சொல்லவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் திமுக உள்ளது.

தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணிகள் திருமாவை மையப்படுத்தியே இருக்கும் என்பதே நிகழ்கால செய்தியாகும்.

ஆதவன்

 

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.