57 ஆண்டு போராட்டம் மக்களின் சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி!

”ஆண்டாண்டு காலம் தொடரும் நடை முறை, ஐதீகம் இதனை மாற்றக்கூடாது” என்ற வாதத்தை முன்வைத்துத்தான் அனைத்துச் சாதி அர்ச்சகர் நியமனத்திலும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறார்கள். பொருளாதார ரீதியில், வாழ்க்கைத்தரத்தில் மேம்பட்டிருந்தாலும் கிராமத்திற் குள் நுழைந்துவிட்டால் ஊரும் சேரியுமாகத்தான் பிரிந்து கிடக்கவேண்டும் என்பதுதான் இவர்களது விருப்பமாகவும் இருக்கிறது.

0

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழக்கல்கண்டார்கோட்டை உள்ள அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா 57 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர்- 03ம் தேதி நடைபெற்றது. 57 ஆண்டு காலம் இந்தத் திருவிழா ஏன் நிறுத்தப்பட்டது? என்பதும், தற்போது எவ்வாறு இத்திருவிழாவை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதும்தான் இதில் கவனிக்கத்தக்க செய்தியாகும். கீழக் கல்கண்டார்கோட்டை கிராமம் என்பது பிராமணர், முத்து ராஜா, தேவேந்திரக் குல வேளாளர் என்னும் மூன்று சமூக மக்கள் வாழும் ஒரு சிற்றூர். கீழக்கல்கண்டார்கோட்டை கிராமத்தில் உள்ள அக்ரஹாரத்தில் வாழ்ந்த வைத்தியநாதன் பெரும் நிலவுடமையாளர். 1952-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் வறட்சியின் காரணமாக மக்கள் பட்டினியால் வாடியபோது வைத்தியநாதன் அவர்கள் தன் வீட்டிலிருந்த நெல்லை அனைத்துச் சமூக மக்களுக்கும் இலவசமாக வழங்கினார். இதன் தொடர்ச்சியாகத்தான் வைத்தியநாதன் அவர்கள் இறந்தபிறகு அக்ரஹாரம் வைத்தியநாதபுரம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

 

அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா
அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா

https://businesstrichy.com/the-royal-mahal/

அவருக்கு இரு மகன்கள். ஒருவர் பெரிய ஐயர் என்ற ஊர் மக்களால் அழைக்கப்பட்ட வை.இராமு. மற்றொருவர் வை.சாமிநாதன். இவர் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக இருமுறை பொறுப்பில் இருந்தவர். 1967 சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் செயல்பட்டவர். பெரிய பண்ணை என்றழைக்கப்பட்ட வை.இராமு அவர்களின் நிலங்களில் முத்துராஜா மற்றும் தேவேந்திரர் சமூக மக்கள் பண்ணையில் விவசாயக் கூலிகளாகவும் குத்தகைதாரர்களாகவும் இருந்துவந்தாலும் அவரின் பாசப்பிணைப்புக்குக் கட்டுப்பட்டவர்களாக அக்கிராம மக்கள் இருந்தனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

கீழக்கல்கண்டார்கோட்டை கிராமதேவதை அழகுநாச்சியார் கோயில் திருவிழாவை வை.இராமு மற்றும் அவரது குடும்பத்தினர்தான் முன்னின்று நடத்தி வந்துள்ளனர். வைத்தியநாதபுரம் தெரு விலும், முத்துராஜா சமூக மக்கள் வாழும் காந்தி தெருவிலும் நாச்சியாரின் வீதியுலா செல்லும்; தேவேந்திரர்கள் வாழும் வடக்கு தெருவிற்கும், நடுத் தெருவிற்கும் நாச்சியாரின் வீதியுலா போகாது. வடக்குத் தெருவின் முன்பு நான்கு கல்லுகால் நிறுத்தப்பட்டு அதன்மேல் நாச்சியாரை நிறுத்தித் தேவேந்திரர்கள் சமூகத்தைச் சேர்ந்த இரு தெரு மக்களும் அங்கே தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றிப் பூசைகள் செய்வார்கள். திருவிழாவை முன்னின்று நடத்தும் பெரிய பண்ணை குடும்பத்தினர் மீதான பிணைப்பில் இருந்து இதனை இயல்பாகத் தேவேந்திரர் சமூக மக்கள் கடந்து சென்றனர்.

இந்தப் பின்னணியில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. 1966ஆம் ஆண்டு அழகுநாச்சியார் கோவில் திருவிழா தொடர்பான கூட்டம் வை.இராமு தலைமையில் நடைபெற்றது. அதில் தேவேந்திரர் தெருவுக்கும் அழகுநாச்சியார் வீதியுலா வரவேண்டும். இல்லை யென்றால் திருவிழாவை நடத்தச் சம்மதம் தெரிவிக்கமாட்டோம் என்று தேவேந்திர இன மக்கள் அறிவித்துவிட்டனர்.

அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா 57
அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா 57

(இந்து அறநிலையத் துறையின் சட்டப்படி அனைத்துச் சமூக மக்களும் ஏற்றுக்கொண்டால்தான் திருவிழா நடக்கும்) இதனைத்தொடர்ந்து, வடக்குத்தெரு முனையிலிருந்த கல்லுக்காலும் தோண்டி எடுத்து வீசி எறியப்பட்டது. காலம்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றமுடியாது என்பதில் பெரிய பண்ணை குடும்பம் உறுதியாக நிற்க, திருவிழா தடைபட்டது. அதுவரை ’இயல்பாக’ இருந்து வந்த ஒரு நடைமுறையில் உடைப்பை ஏற்படுத்தி ‘சலனத்தை’ ஏற்படுத்தியவர் மா.திருமலை என்பவர் மாது அவர்களின் மூத்த மகன். இவர் கீழக் கல்கண்டார்கோட்டை பிறந்து வளர்ந்தவர். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். சேலத்தில் இரயில்வே துறையில் பணியாற்றி வந்த மா.திருமலை, 1950இல் திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனைக்குப் பணிமாறுதல் பெற்றுச் சொந்த ஊரிலிருந்து பணிக்குச் சென்று வந்தார். தந்தை பெரியாரை நேரில் சந்தித்துத் திராவிடக் கொள்கைகளை அறிந்துகொண்டார். திகவிலிருந்து அண்ணா பிரிந்து திமுகவைத் தொடங்கியபோது திமுகவில் இணைந்தார். என்றாலும் பெரியார் கொள்கைகளை மூச்சாகக் கொண்டிருந்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா
அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா

அதுவரை அக்ரஹாரத் தெரு வழியாகத் தேவேந்திரர் சமூக மக்கள் செல்லக்கூடாது; கொல்லைப் பக்கம் உள்ள வழியாகத்தான் சென்று வரவேண்டும் என்று இருந்த நடைமுறையையும் ”அக்ரஹார நுழைவுப் போராட்ட”த்தின் வழியே மாற்றிக் காட்டியவர், மா.திருமலை. அதுமட்டுமல்லாமல் 1955ல் தேவேந்திரர்கள் வாழ்ந்த வடக்குத் தெருவுக்குப் பெரியார் தெரு என்றும் நடுத் தெருவுக்கு அம்பேத்கர் தெரு என்றும் பெயர் சூட்டியவரும் அவரே. மா.திருமலை கலகக்காரர் பெரியாரின் தொண்டர். பேரறிஞர் அண்ணாவின் தம்பி என்ற நிலையில் சுயமரியாதை உணர்வுகளை மக்களிடம் ஊட்டி வளர்த்தவர். பின்னர் இளைஞர்களையும் பொதுமக்களையும் சுயமரியாதை உணர்வுகளால் ஈர்த்தவர். ”எனது தந்தை மா.திருமலை திராவிடர் கழகம், திமுக என்று கட்சி சார்ந்து இருந்தாலும், நம் இனமக்களின் உரிமைக்காக, சுயமரியாதைக்காகப் போராடுகிறார்கள் என்ற உணர்வோடு தேவேந்திர இனமக்களும், ஒன்று திரண்டு அழகுநாச்சியார் திருவிழாவை நிறுத்தினார்கள். தற்போது, எனது தந்தை மா.திருமலை முன்வைத்த கோரிக்கை வென்றுள்ளது என்பதைவிட, தேவேந்திரர் சமூக மக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.” எனப் பூரிக்கிறார் ‘மிசா’ தி.சாக்ரடீஸ்.

மேலும், ”இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியவர் வைத்திய நாதபுரத்தில் பிறந்து, வளர்ந்து தற்போது சென்னையில் தொழில் அதிபராய்த் திகழ்ந்து கொண்டிருக்கும் திரு.சந்தானம் அவர்களையே சாரும். வே றுபாடுகளைக் கடந்து எப்படியும் திருவிழாவை நடத்திக் காட்ட வேண்டும் என்று 2006 ஆண்டு முதலாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் சந்தானம் அவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு அழகுநாச்சியார் கோயில் குடமுழுக்கை நடத்தி னார். தற்போது, சிக்கலாய் இருந்த தேவேந்திரர் தெரு நாச்சியார் வீதியுலாவையும் நடைமுறைப்படுத்திச் சமூக நல்லிணக்கத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்றே சொல்லவேண்டும்” என்று சந்தானத்தை கை காட்டுகிறார், மிசா தி.சாக்ரடீஸ்.

மிசா தி.சாக்ரடீஸ்
மிசா தி.சாக்ரடீஸ்

கீழ்கல்கண்டார்கோட்டை வைத்தியநாத புரத்தை சேர்ந்த சந்தானம் கட்டுமானம் தொழில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி சார்ந்த தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நிர்வகித்துவரும் பரபரப்பான தொழிலதிபர். தொழில் நிமித்தமாக சென்னையில் செட்டிலாகி இருந்தாலும், வெளிநாடுகளுக்கு அவ்வப்போது பறந்து சென்றாலும் பூர்வீகத்தின் மீது மாளப்பற்றுக் கொண்டவர். அழகுநாச்சியார் கிராமத் தேவதையின் ஆசீர்வாதமே தனது வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணமாக கருதுபவர். இந்த கோவிலுக்கு மிக அருகாமையில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து இப்பகுதி மக்கள் போராடியபொழுது, அம்மக்களுக்கு ஆதரவாக இறுதிவரை நின்றவர் சந்தானம். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் இயங்கி வந்தாலும், அவரது சொந்த செலவில் இக்கோயில் புணரமைப்பு பணிகள் பலவற்றை செய்து கொடுத்திருக்கிறார். கும்பாபிஷேகம் நடத்தி முடித்த கையோடு, திருவிழாவை எப்படியேனும் நடத்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு மூன்று சமுதாய மக்களிடமும் பேசி சாதித்துக்காட்டியவர் சந்தானம்.

திருமலை
திருமலை

”ஆண்டாண்டு காலம் தொடரும் நடை முறை, ஐதீகம் இதனை மாற்றக்கூடாது” என்ற வாதத்தை முன்வைத்துத்தான் அனைத்துச் சாதி அர்ச்சகர் நியமனத்திலும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறார்கள். பொருளாதார ரீதியில், வாழ்க்கைத்தரத்தில் மேம்பட்டிருந்தாலும் கிராமத்திற் குள் நுழைந்துவிட்டால் ஊரும் சேரியுமாகத்தான் பிரிந்து கிடக்கவேண்டும் என்பதுதான் இவர்களது விருப்பமாகவும் இருக்கிறது. இதனை எதிர்க்கும்போது, இரு சமூகங்களுக்கிடையிலான மோதலாக மாற்றப்படுகிறது. விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் விவகாரம் தொடங்கி, வேங்கைவயல் குடிநீர் தேக்கத் தொட்டி வரை இந்த அவலம் விரவிக்கிடக்கிறது. அவ்வளவு ஏன் பிஞ்சுகளிடமும் இந்த நஞ்சு பரவியிருக்கிறது என்பதற்கு நாங்குநேரியே இரத்தசாட்சியாய் அமைந்துவிட்டது.

இந்தப் பின்புலங்கள் இருந்தும்; சனாதனம் குறித்த கூச்சல்களுக்கு மத்தியிலும்; சத்தமே இல்லாமல், “சமூக நல்லிணக்கம்” என்ற சொல்லின் நடைமுறை செயல் விளக்கமாக அழகு நாச்சியார் கோயில் திருவிழாவைச் சாதித்துக் காட்டியிருக்கின்றனர் கீழக் கல்கண்டார்கோட்டை பகுதிவாழ் உழைக்கும் மக்கள். ஆணையம் அமைத்து நீதிபதி சந்துரு போன்றவர்களை, ஊர் ஊராக அலைய வைக்க வேண்டிய அவலங்களுக்கு மாற்றாகவும் முன்னுதாரணமாகவும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடவும் தகுதி படைத்த சமூகநீதிக்கான வெற்றி இது என்றால் அது மிகையல்ல!

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.