எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விதம், வெறும் அரசியல் பழிவாங்கல் மட்டுமல்ல; அது அரசுக் கட்டமைப்பையும் காவல் துறையையும் பயன்படுத்தி எதிர்கால எதிர்ப்புக் குரல்களை நசுக்குவதற்காக நடத்தப்பட்ட ஒரு ‘அதிகாரப் பயிற்சி’ (Power Exercise) ஆகும்.
காவல் துறை அராஜகமும், திட்டமிட்ட பழிவாங்கலும் !
விசாரணை என்ற பெயரில் நாடகம்: வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டே மணி நேரத்தில் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குக் காவல் துறை வந்து அத்தனை அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
சட்ட நடைமுறை மீறல்: காவல் நிலைய ஜாமீனிலேயே விடுவிக்கப்பட வேண்டிய ஒரு வழக்கிற்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியிருக்கலாமே? அதை விடுத்து, நாள் முழுவதும் அவரை வீதியில் சுற்றித் திரிய வைத்து அவமானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
அரசு இயந்திரத்தின் துஷ்பிரயோகம்: ரிமாண்ட் (Remand) செய்ய சட்டப்பூர்வ வாய்ப்பு இல்லாதபோதும், ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து அழைத்துச் சென்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்தே காவல் துறை நடந்துகொண்ட விதம் அப்பட்டமான அராஜகம்.
மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்தக் காவல் துறை அராஜகத்தையும், சட்டமீறலையும் தமிழ்நாட்டின் ஒரு பகுதி மக்கள் கொண்டாடும் நிலைக்கு அரசியல் சூழல் நச்சுமயமாக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பாடங்களும் அடக்குமுறையின் வடிவங்களும் !
அதிகார வர்க்கம் காவல் துறை அராஜகத்தைக் கையிலெடுப்பது தமிழகத்திற்குப் புதியதல்ல.
* எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அஞ்சான், நாகூரான் என்ற இரு தோழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதும், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் குழுத் தோழர்கள் மீது நரவேட்டை நடத்தப்பட்டதும் வரலாறு.
* ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் காவல் துறை அராஜகம் தலைவிரித்தாடியது; துப்பாக்கிச் சூட்டில் 10 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தென் தமிழகத்தில் நடந்த போலீஸ் அராஜகம். பொய் கஞ்சா வழக்குகள் போடுவது, எதிர்க்கட்சியினரை வழக்கு போட்டு அலைக்கழிப்பது என அடக்குமுறை இயந்திரம் தொடர்ந்து இயங்கியது.
* கலைஞர் ஆட்சியில் மாஞ்சோலை படுகொலை. ஸ்ரீபெரும்புதூர் தொழிற் வாளாகத்தில் சங்கம் அமைக்க முயன்ற தொழிற்சங்க தலைவர்கள் மீது கைது நடவடிக்கை.
* எடப்பாடி ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு.
* ஸ்டாலின் ஆட்சியில் துப்புரவு தொழிலாளர், சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கியது என்று இதற்கெல்லாம் கணக்கு வழக்கே கிடையாது..
* இன்று தவெக அரசு, அதே பழைய அடக்குமுறை அமைப்பை ஒரு ‘நவீன பிம்ப அரசியலின்’ (Image Politics) பின்னால் மறைத்து வைத்து நடைமுறைப்படுத்துகிறது.
பாசிச விசுவாசப் படை : தவெக-வின் ரசிகர் பட்டாளம் மற்றும் ஆதரவாளர்கள், தலைவர் என்ன செய்தாலும் அதைச் பகுத்தறிவின்றி வரவேற்கும் ஒரு விசுவாசப் படையாக உருவெடுத்து வருகின்றனர். இது ஜெர்மனியில் ஹிட்லரின் ‘Stormtroopers’ அமைப்பிற்கு வித்திட்ட அதே ஆபத்தான தொடக்கப்புள்ளியாகும். இது ஒரு அதீத ஒப்பீடு என்று வாசகர் கருதலாம் ஆனால், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் விடுக்கும் மிரட்டல்கள் ஆபத்தானவை.
இடதுசாரிகளுக்கு வரவிருக்கும் பேராபத்து :
இந்த ஜனநாயக விரோதச் செயல்முறையைச் சமூகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியவுடன், அடுத்து அந்த அடக்குமுறைப் பாயப்போவது மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் இடதுசாரிகள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் மீதுதான்!
அரசியல் அமைப்புச் சட்டத்தையும், ஜனநாயக மாண்புகளையும் மிதித்துத் துவைக்கும் தவெக-வின் இந்த போக்கை முளையிலேயே எதிர்த்து நிற்கத் தவறினால், நாளை பாட்டாளி வர்க்கமும், இடதுசாரி இயக்கங்களும் தங்கள் கருத்துச் சுதந்திரத்தையும், போராட்ட உரிமையையும் முழுமையாக இழக்க நேரிடும்!
— சிலம்பரசன்.சே.







Comments are closed, but trackbacks and pingbacks are open.