கலைமகள் சபாவில் பணம் கட்டி ஏமாந்தவரா நீங்கள்?
கலைமகள் சபா விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் தலைமையில், சிறப்பு அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது என்பதையும்; தற்போதைய நிலையில் கலைமகள் சபாவின் சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை பொது ஏலத்தில் விற்று கலைமகள் சபா உறுப்பினர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுக்க வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் வகையில்தான் தற்போதைய கலைமகள் சபா நிர்வாகத்தின் முன்னெடுப்புகள் இருந்து வருகிறது என்பதை கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.
மிக முக்கியமாக, எப்படி பார்த்தாலும் கலைமகள் சபாவில் 5 இலட்சத்திற்கு குறையாத உறுப்பினர்களை கொண்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், குறைந்தபட்சம் சில பத்தாயிரம் உறுப்பினர்களைக்கூட அடையாளம் காண முடியாத இக்கட்டில்தான் இந்த விவகாரம் இருந்து வருகிறது. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், ஆயிரத்துக்கும் குறைவான உறுப்பினர்களே பங்கேற்றிருக்கிறார்கள். முன்கூட்டியே அறிவிப்பு இல்லை; போதுமான விளம்பரங்கள் இல்லை என்பதெல்லாம் ஒரு காரணமாக இருந்தாலும்கூட, ஒன்றுகூடலின் எண்ணிக்கை மிக சொற்பம் என்பதுதான் யதார்த்தம்.
சென்னை தி.நகரில் இயங்கிவரும் கலைமகள் சபா அலுவலகத்தில் தற்போது கலைமகள் சபா என்ற பெயர் பளிச்சென்று தெரியும் வகையில் அறிவிப்பு பலகையை நிறுவியிருக்கிறார்கள். இந்த அறிவிப்பு பலகையை பார்த்து அந்த வழியே கடந்து சென்ற நபர் ஒருவர் 30 வருஷத்துக்கு முன்னர் நானும் பணம் கட்டியிருக்கிறேன் என்பதாக விசாரித்து செல்லும் அளவுக்குத்தான் கலைமகள் சபா உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு அமைந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பணம் கட்டிய பலர், பணம் கட்டியது அவ்வளவுதான் என்ற மனநிலைக்கு ஆட்பட்டுவிட்டார்கள் என்பதுதான் இங்கே வேதனையானது.
தற்போதைய நிலையில், தனிநபர் ஆணைய நியமனத்திற்கு பிறகு கலைமகள் சபா வழக்கு மீண்டும் உயிர்ப்பெற்றுள்ள நிலையில், அதன் 5 இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதுதான் தற்போதைய முதல் சவால் நிறைந்த பணியாக அமைந்திருக்கிறது.
தற்போதைய கலைமகள் சபா நிர்வாகத்தின் சார்பில் https://kalaimagalsabha.in/ என்ற இணையதளத்தை நிர்வகித்து வருகிறார்கள். இந்த இணையத்தில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளின் விவரங்கள், தனிநபர் ஆணையத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும், கலைமகள் சபா உறுப்பினர்களை அடையாளம் கண்டு உறுதி செய்யும் நோக்கில் உறுப்பினர்களை பதிவு செய்து வருகிறார்கள்.
கலைமகள் சபாவின் தற்போதைய நிலை குறித்தும் உறுப்பினர் பதிவு நிலை குறித்த தகவல்களுக்கும் நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ள உதவி எண்களையும் அறிவித்திருக்கிறார்கள். தொடர்பு எண்: +91-9944098582 / +91-9944098572 மின்னஞ்சல் முகவரி : kmsmembers1684@gmail.com
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.