கலைமகள் சபா விவகாரத்தை பொறுத்தவரையில், கலைமகள் சபா உறுப்பினர்களை அடையாளம் காணும் பணியே பெரும் சவாலான பணியாக தற்போது வரையில் நீடித்து வருகிறது. 5 இலட்சத்துக்கும் மேலான உறுப்பினர்களை கொண்டிருக்கும் கலைமகள் சபாவில், இதுவரையில் அதிகாரப்பூர்வமாக 5000-க்கும் குறைவானவர்களே இணையத்தில் பதிவு செய்திருக்கின்றனர் என்ற தகவலே அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றுதான்.
இதற்கு முன்னர், கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். முன்னெடுப்பில் கலைமகள் சபாவின் உறுப்பினர்கள் தங்களை கலைமகள் சபாவின் இணையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த முயற்சிக்கு கலைமகள் சபா உறுப்பினர்களுள் ஒரு பிரிவினர் கடும் ஆட்சேபனையை தெரிவித்தனர். நீதிமன்றத்திலும் முறையிட்டனர். சிறப்பு அலுவலரின் இந்த முன்னெடுப்பு, கட்டிய பணத்தை உறுப்பினர்களின் தலையில் கட்டிவிட்டு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சி என்பதாக சந்தேகத்தை கிளப்பியது. உறுப்பினர்கள் யாரும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். இதன் காரணமாகவே, இந்த பணி தற்போது எதிர்பார்த்த பலனை தராமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் தற்போதைய கலைமகள் சபா நிர்வாகத்தின் தரப்பில், ”இது உறுப்பினர்களை அடையாளம் காணுவதற்கான முதற்கட்ட முயற்சிதானே தவிர. அவர்கள் அச்சம் கொள்வதைப் போல, கட்டிய பணத்தோடு கணக்கை முடிக்கும் முயற்சி அல்ல. வழக்கு நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இருந்து வரும் நிலையில் அப்படி ஒரு முடிவை சிறப்பு அலுவலர் தன்னிச்சையாக செய்துவிட முடியாது” என்பதாக தெரிவிக்கிறார்கள்.
கலைமகள் சபா வழக்கில் சிக்கிய சமயத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அந்த தரவுகளை கொண்டு இதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் உறுப்பினர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். கலைமகள் சபாவின் உறுப்பினர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்கள் இணையத்தில் கோரும் ஆவணங்களை சமர்ப்பித்து, விண்ணப்பிப்பதன் வழியாகத்தான் உறுப்பினர்களை அடையாளம் காணவே முடியும் என்பதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு, கலைமகள் சபா உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் நிலையை உறுதிபடுத்திக் கொள்வது அவசியமாகிறது. இதனை கொண்டுதான், பணமாகவோ, நிலமாகவோ தீர்வு காணும் நிலையை அடைய முடியும் என்பதாக, கலைமகள் சபா நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
இங்கே, கலைமகள் சபா நிர்வாகத்தின் தற்போதைய முன்னெடுப்புகள், அது என்னதான் நல்ல நோக்கத்திலான முன்னெடுப்பாக இருந்தாலும்கூட, உறுப்பினர்களின் ஆட்சேபனைக்கும் அதிருப்திக்கும் ஆளாவதற்கான அடிப்படையே, கலைமகள் சபா உறுப்பினர்களுக்கும் தற்போதைய கலைமகள் சபா நிர்வாகத்தினருக்கும் இடையிலான இடைவெளிதான்.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்ன? தற்போதைய கலைமகள் சபா நிர்வாகம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது? கலைமகள் சபா உறுப்பினர்களிடையே நிலவும் சந்தேகங்கள் என்ன? என்பதை அறிந்து, அதற்கேற்ப குறிப்பட்ட கால இடைவெளியில் தொடர்ந்து வழக்கின் முன்னேற்றம் போக்கு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள்.
கலைமகள் சபா உறுப்பினர்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறித்து அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
கலைமகள் சபாவின் தற்போதைய நிலை குறித்தும் உறுப்பினர் பதிவு நிலை குறித்த தகவல்களுக்கும் நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ள உதவி எண்களையும் அறிவித்திருக்கிறார்கள்.
தொடர்பு எண்: +91-9944098582 / +91-9944098572
மின்னஞ்சல் முகவரி : kmsmembers1684@gmail.com
இணையதளம் : https://kalaimagalsabha.in/
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.