அங்குசம் இந்த வார பிளாஸ்ட் 27.11.2026
வாட்சப்பே விணைதான் போல !
வாட்சப் மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் எம்.எல்.ஏ.வே வகையாக சிக்கிய நிலையில், அடுத்த எபிசோடாக அதே வாட்சப் மெசேஜால் தூங்கா நகரத்தின் லோக்கல் நிர்வாகிகளுக்கிடையே அடிதடி ரகளை போலீஸ் பஞ்சாயத்து வரையில் விவகாரமாகியிருக்கிறது. ஆளும்கட்சி பெண் நிர்வாகி ஒருவர் பூத் லெவல் ஏஜெண்ட்டாக தான் பணியாற்றியதை பெருமையாக ரீல்ஸ் போடும் ஆர்வத்தில், “பூத் லவ் ஏஜெண்ட்” என தவறுதலாக வாட்சப் குழுவில் பதிவிட அதற்கு ஒரு நிர்வாகி “வாவ்” என கமெண்ட் போட இருதரப்புக்கும் மாறி மாறி கை கலப்பாகியிருக்கிறது. போலீஸில் புகார், லோக்கல் எம்.எல்.ஏ. முன்னிலையில் சமரச பேச்சு என பெரும் பஞ்சாயத்தாகியிருக்கிறது. வாரிய பதவி வந்து சேர்ந்த நேரத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்தா? நிம்மதியா இருக்க விட மாட்டானுங்க போலயேனு எம்.எல்.ஏ. ரொம்பவே நொந்துகிட்டாராம்.
கால் ரெக்கார்டரை கையில் எடுத்த உளவுத்துறை !
பெண் கலெக்டருக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வாட்சப் மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், இந்த பிரச்சினையின் தொடக்கத்தில் சமாதானம் பேசிய அமைச்சர்கள்; இடமாறுதலில் செல்லுமாறு ஆலோசனை சொன்ன கோட்டை அதிகாரிகள்; மிரட்டல் விடுத்த அமைச்சர்கள்; கட்சி அனுதாபிகள்; நடுநிலை ஆபிசர்ஸ்; முதல்வருக்கு நெருக்கமாக வலது – இடதுமாக வலம் வரும் பவர்ஃபுல் ஆளுமைகள் வரையில் அனைவரது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலையும் ஆய்வு செய்யப்போகிறதாம் மத்திய உளவுப்பிரிவு டீம். டீலிங்கில் தொடர்புடைய பலருக்கும் இப்போதே தொடை நடுங்க ஆரம்பித்துவிட்டதாம்.
கலெக்டர் கணவரின் பரிதவிப்பு !
மதிப்புக்குரிய பதவிக்காரரிடமிருந்து இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தேறும் என்பதை கலெக்டர் தம்பதியினர் சற்றும் எதிர்பார்க்கலையாம். இருந்தாலும் தொடக்கத்தில் தலைமையின் சமாதானத்தை ஏற்று அமைதியானார்களாம். மீண்டும், மெசேஜ் தொடரவே கடுப்பானாராம் கலெக்டரான கணவர். அவரே நேரடியாக, பவர்ஃபுல் ஆளுமையின் கவனத்துக்கு கொண்டு சென்றும்கூட, எந்த ரியாக்ஷனும் இல்லை என்பதில் படு அப்செட்டாம். சாரி கேட்க சொல்றோம். மீடியாவில் அப்படிலாம் இல்லைனு மட்டும் சொல்லிடுங்கனு டீலிங் பேசப்பட்டதாம். ”என்ன நெருக்கடி வந்தாலும் நாங்கள் இருக்கிறோம். டூட்டி மாத்திக்கலாம். துணிந்து நில்லுங்கள்”னு மத்தியிலிருந்து வந்த நம்பிக்கை வார்த்தைகள்தான், இவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க காரணமாம்.
ஏழரையான ஏழு !
தேர்தல் எண் விளையாட்டு காரணமாக கண்டம் விட்டு கண்டம் தாவியதன் காரணமாக காலியான 4 சீட்டு. முதன்மையானவர் போட்டியிட்ட இரண்டில் ஒன்று. முன்னாள் முதன்மையானவரை மண்ணைக்கவ்வ வைத்தவரே மரித்து போனதால் காலியான ஒரு சீட்டு என ஆறு சீட்டு காலியாகி கிடந்த நிலையில், தற்போது அது 7 ஆக உயர வாய்ப்பிருக்கு என்கிறார்கள். இலை தரப்பு வழக்கறிஞர் தொடுத்த வழக்கில், நீதிமன்றம் காட்டிய அதிரடியில் ஆளும்தரப்பு ஆட்டம் கண்டிருக்கிறதாம். காக்கிகள், கையில் விலங்கு மாட்டும்போது அவரிடம் மக்கள் வழங்கிய பதவியும் இருக்கக்கூடாது; கட்சிப்பதவியும் இருக்கக்கூடாது; இரண்டிலிருந்தும் முதலில் தூக்கியபிறகு தூக்கிக்கொள்ளுங்கள் என்பதுதான் செய்தியாம். இப்போதைக்கு, ஏழு கன்பார்ம் என்கிறார்கள்.
எரிமலை எப்படி பொறுக்கும் ?
பேண்ட் பிட் துணியை தோளில் போட்டு முறுக்கிப் பேசுவதில் டிரேட் மார்க் வாங்கிய சீனியர் அரசியல் கட்சித்தலைவரானவர், ஆரம்பம் காலந்தொட்டே தனக்கு வலதுகரமாக ஓடியாடிய மூவேந்தர்களில் ஒருவரின் பெயரை கடைசியாக கொண்ட நிர்வாகியின் இல்லத் திருமணத்திற்கு வாழ்த்த சென்றிருக்கிறார். அங்கே விருந்துக்கு வந்திருந்த எக்ஸ் ஆன, ராஜமானவரை பார்த்ததும் கடுப்பாகி, விருந்துக்கு அழைத்த நிர்வாகியை கூப்பிட்டு வறுத்தெடுத்துவிட்டாராம். கழுத்தறுத்து நம்பிக்கைத் துரோகம் செய்து, நடுத்தெருவில் நிறுத்தியவனுக்கும் அழைப்பானு அங்கேயே பொங்கியவரிடம், அவரு ரத்த உறவுனு சொல்ல அதற்கும் அசராமல் எரிமலையாய் வெடித்து சிதறியிருக்கிறார் சீனியர் தலைவர்.
பொருட்டாகவே மதிக்கல !
திருப்பி அடி கட்சியின் தலைவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாடியிருக்கிறார். எப்போதும் தம்பிகளிடம் மனம் விட்டு பேசும் தலைவர். மனசில் உள்ள பாரத்தையெல்லாம் இறக்கி வைத்திருக்கிறார். ஆட்சியில் பங்கு தராவிட்டாலும், கட்சி சார்பில கொடுக்கிற சிபாரிசுகளுக்கு மதிப்பு கொடுப்பாங்க. முடிஞ்சத செஞ்சு கொடுப்பாங்க. முடியாததை கூப்பிட்டு சொல்லுவாங்க. ஆனால், பேருக்குத்தான் ஆளும் தரப்புக்கு ஆதரவு கட்சி. ஆனால், கட்சி லெட்டர் பேடுல தலைவர் கையெழுத்தோட அனுப்பி வைக்கிற பரிந்துரைக்கு மரியாதையே இல்லை. அரசு வழக்கறிஞர் நியமனத்துல நாம சொன்ன ஒரு ஆளைக்கூட போடல! நம்மள ஒரு பொருட்டாவே மதிக்கலைனு ரொம்பவே நொந்துகிட்டாராம் தியாகத் தலைவர்.
நடுரோட்டில் நிறுத்தப்பட்ட சி.எம்.கள் !
சூரிய தரப்பு சேனலில் வீட்டு விஷேசத்தில் பங்கேற்க வந்திருந்த அண்டை மாநில சி.எம். இருவர் நடுரோட்டில் நிறுத்தப்பட்டார்களாம். முதலானவரின் வருகை, துணையான பதியின் வருகை காரணமாக சொல்லப்பட்டதாம். அரை மணிநேரத்துக்கும் மேலாக, ரோட்டை பிளாக் செய்ததால், முரசு கட்சி எம்.பி.யின் வீட்டு விசேசத்தில் பங்கேற்காமலேயே பிளைட்டில் பறந்துவிட்டாராம் ஒரு சி.எம். வரவேற்பில் சாப்பிடலாம் என்றிருந்தவருக்கு வரவேற்பு நிகழ்வுக்கே போகமுடியாத நிலையில், விமான நிலையத்திலும் சாப்பிட எதுவுமின்றி, கொலைவெறி பசியோடு பறந்து போனாராம். முதல்வருக்கான மரியாதையும் இல்லை. புரோட்டோகால் பற்றிய புரிதலும் இல்லைனு புலம்பிட்டு போனாங்களாம் வந்த சி.எம்.கள் இருவரும்.
கல்யாண வீட்டில் அரசியல் காரசாரம் !
சேனல் வீட்டு திருமண விழாவில் கட்சி பேதமின்றி சகல கட்சியிலிருந்தும் பலரும் விருந்தினராக வந்து சென்றிருக்கிறார்கள். அப்படித்தான், துணை பதியும் வந்திருக்கிறார். எதிரும் புதிருமானவர்கள்கூட ஒரு புன்னகையோடு கடந்து போவார்கள். ஆனால், துணையான பதியும் மூன்றெழுத்து முன்னாள் முதல்வரும் வழக்கமான சம்பிரதாய சந்திப்பாக இல்லாமல், காரசார அரசியல் சந்திப்பாகவே மாற்றிவிட்டார்களாம். கூட வந்திருந்த கட்சித் தலைவரை காத்திருக்க சொல்லிவிட்டு நீண்டதாம் டிஸ்கசன். மாநில அரசியல், சட்டம் ஒழுங்கு, மறுவரையறை மசோதானு பல்வேறு விவகாரங்கள் அலசப்பட்டதாம். இதுல ஏதோ சம்திங் இருக்கேனு மண்டைய குடைந்து கொண்டிருக்கிறதாம் தாமரை தரப்பும் ஆளும் சவுண்டு தரப்பும் !
வெளிப்படையாக பேசக்கூட முடியவில்லை!
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய விவகாரத்தில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு எதிரான நடவடிக்கையை நீதிமன்றம் முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், கலெக்டர் தம்பதிகளுக்கு ஆதரவாக வெளிப்படையான கருத்தை பதிவு செய்திருந்தார் முன்னாள் ஆட்சியரும் தற்போதைய தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.
பதிவிட்ட வேகத்தில் பதிவை நீக்கியிருக்கிறார். தற்போது நீக்கிய அந்த பதிவில், நவம்பர் 11-ஆம் தேதியே இந்த விவகாரம் குறித்து அவரிடம் பேசியதாகவும்; உயர்நிலை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்; அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பணியிட மாறுதலில் செல்லுமாறு தலைமை செயலர் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொண்டபோதும்கூட, தான் அதை மறுத்துவிட்டதாக தெரிவித்ததாக சொன்னதை பதிவிட்டு அவரது துணிச்சலை பாராட்டியிருக்கிறார்.
சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட அதிகாரியின் விருப்பமும் சம்மதமும் இன்றிச் செயல்படுவது சரியாக இருக்காது என்பதாலும்; அவரது கண்ணியத்திற்கும் விருப்பத்திற்குமே நாங்கள் முதலிடம் அளித்தோம் என்பதாலுமே இதுநாள்வரை பேசாதிருந்தோம் என்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
நிறைவாக, இத்தகைய சூழலில் ஒரு பெண் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தைக் கடந்து வந்து, அவர் மன அமைதியையும் வலிமையையும் மீண்டும் பெறுவார் என்று நான் மனதார நம்புகிறேன். என்பதாக அந்த பதிவை முடித்திருந்தார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.