நாய்களை ஏவி பூனையைக் கொன்ற கொடூரன்! இன்ஸ்டா மோகமும் இன்ஸ்டன்ட் கைதும்!
வீட்டில் குடும்ப உறுப்பினர்களுள் ஒரு ஜீவனாக, செல்லப்பிள்ளைகளாக பூனை, நாய், கிளிகள் ஆகியவற்றை பராமரிப்பதை பார்த்திருக்கிறோம். அதன் மழலைத்தனம் மாறாத சுட்டித்தனங்களை கண்டு மொத்தக் குடும்பமும் குதூகலிப்பதை கண்டிருக்கிறோம். பாசமாய் வளர்த்த வீட்டுப் பூனையை, நாலைந்து நாய்கள் சேர்ந்து துள்ளத்துடிக்க கடித்துக் குதறுவதை கண்டால் என்ன செய்வீர்கள்? ஐந்தறிவு ஜீவனாக இருந்தாலும், அதுவும் ஓர் உயிர்தானே என்ற பதைபதைப்பு இல்லாமலா, போயிருக்கும்?
கல்நெஞ்சம் கொண்டோரையும் ஒரு கணம் பதைபதைப்பில் ஆழ்த்தும் அந்த குரூரக் காட்சி எதிர்காலத்தில் இனி எவருக்கும் வாய்க்கக்கூடாது. தனது வீட்டு நாயோடு பக்கத்துவீட்டுக்காரன் வளர்க்கும் நாயையும் நடுகாட்டிற்கு இழுத்துச் சென்று, தான் ஆசையாய் வளர்த்த பூனையை அந்த நாய்களுக்கு இரையாக்கியக் கொடூரம் நடந்தேறியிருக்கிறது. அதுவும், அந்த பூனை துள்ளத்துடிக்க நாய்களுக்கு இரையாக்கப்பட்ட கொடூரத்தை வீடியோவாக பதிவும் செய்ததோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றமும் செய்திருக்கிறான், திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த மேலத்தொட்டியப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (எ) விஜயகுமார்.
கொடூரமான மனநிலையுடனும் சமூக வலைத்தள மோகத்துடனும் அந்த இளைஞர் ஆடிய விளையாட்டு அவருக்கே வினையாகியிருக்கிறது. ஓர் உயிரினத்தை இப்படித் திட்டமிட்டு வதைப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என்பதாலும், இத்தகையக் காட்சிகளைப் பதிவேற்றம் செய்வது தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி தடை செய்யப்பட வேண்டியது என்பதாலும் வளவந்தி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் சபாபதி அளித்த புகாரின் பேரில் ஜம்புநாதபுரம் போலீசார் பெருமாள் (எ) விஜயக்குமாரை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.
மெய்நிகர் உலகமாக தனித்து இயங்கும் ”சமூக வலைத்தள மோகம்” இளைஞர்களை ஒரு வித போதையில் ஆழ்த்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. லைக்-குகளை அள்ளுவதற்காக எதையும் செய்யத் துணிந்தவர்களாக ஆக்கியிருக்கிறது. மிகமுக்கியமாக, ஏ.ஐ. தொழில்நுட்பமும், மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் சமூகத்தின்மீது இவை செலுத்தும் தாக்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
குழந்தையை கடத்திவிட்டார்கள் என்பது போன்று ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி சமூகத்தை பதற்றத்தில் ஆளாக்குவது ஒருபுறமிருக்க; சென்னைப் போன்ற பெருநகரங்களில் மின்சார ரயில்களில் தீப்பொறி தெரிக்க பட்டாக் கத்திகளுடன் ரீல்ஸ் போடுவது பேஷனாகியிருக்கிறது. கத்தியையும் அறுவாளையும் தூக்கிக்கொண்டு சாதிப்பெருமை பேசும் வீடியோக்களும் மலிந்து கிடக்கின்றன. ஏரியாவில் பிரபலமான ரவுடிகளுக்கு ஆதரவாக அவரது அடிப்பொடிகளாக காட்டிக்கொள்ளும் இளசுகளின் ரவுசுகளுக்கும் பஞ்சமில்லை.
இதுபோன்று, “மெய்நிகர் உலகில்” தனது கெத்தை காட்டும் பேர்வழிகளையும் வதந்திகளைப் பரப்பி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் பேர்வழிகளையும் அடையாளம் கண்டு கட்டுப்படுத்துவதும் இன்றைய அவசிய அவசரத் தேவையாகியிருக்கிறது. கோயில்களை இடித்துவிட்டார்கள் என்று வாட்சப்பில் வதந்தியை பரப்பியதான குற்றச்சாட்டில் முன்னாள் டி.ஜி.பி. மீது வழக்கு; சீருடையில் பள்ளி மாணவிகள் சாராயம் குடிப்பதாக சர்ச்சை வீடியோ வெளியிட்ட பாஜக சௌதாமணி கைது நடவடிக்கை; பிரபல ரவுடியின் அடிப்பொடியாக காட்டிக்கொண்டு நானும் ரவுடிதான்னு ரவுசுவிட்ட கல்லூரி மாணவன் கைது ; குழந்தையை கடத்தியதாக வாட்சப்பில் வதந்தி பரப்பிய நபருக்கு எதிரான நடவடிக்கை; குழந்தை கடத்தல் தொடர்பான வதந்தி பரப்பினால் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழும் கைது செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கை என ”சைபர்கிரைம்” சார்ந்த திருச்சி மாவட்ட எஸ்.பி.யின் அதிரடி நடவடிக்கைகள் கவனத்தை பெற்றிருக்கின்றன.
ஆதிரன்.