சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை !

0

சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!

லஞ்சம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்துக்காக, ஈவிரக்கமற்ற, லஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகளால் பழிவாங்கப்பட்டு தனக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பயன்கள் இன்னமும் கிடைக்கப்பெறாமல் கடந்த ஆறாண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் தற்போது 61 வயதுடைய சாந்தலட்சுமி.

2 dhanalakshmi joseph

எதிர்பாராமல் நடைபெற்ற தீ விபத்து தொடர்பான வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, உற்றார் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டு, தொடர் சட்டப் போராட்டத்துக்கு பின்னர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது தனக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பயன்கள் வழங்கப்படாததால் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் சாந்தலட்சுமி.

- Advertisement -

- Advertisement -

வெறுமனே சாந்தலட்சுமி எனச் சொன்னால் ‘இவர் யார்?’ என நம் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வராது.

இவர் வேறு யாருமல்ல, கும்பகோணம் காசிராமன் தெருவில் கடந்த 2004-ம் ஆண்டுவரை செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை.

இப்பள்ளியில் மாடியில் சத்துணவு சமையலுக்காக போடப்பட்டிருந்த கூரைக் கொட்டகையில் கடந்த 2004-ம் ஆண்டு ஜுலை 16-ம் தேதியன்று ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தேசிய அளவில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தான் கைது செய்யப்படும் அளவுக்கு சாந்தலட்சுமி செய்த ஒரே குற்றம் இத் துயரச் சம்பவத்தின்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்ததுதான்.

இச் சம்பவம் தொடர்பாக, அப்போதைய முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், கும்பகோணம் வட்டாட்சியர், ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப் பள்ளியின் நிறுவனர் முத்து பழனிச்சாமி, பள்ளி நிர்வாகி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி உள்பட மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஒருவர் ‘அப்ரூவராக’ மாறிவிட, வழக்கு நடைபெற்றுவந்த காலத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மீதமிருந்த 21 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ் வழக்கில், 2014-ஆம் ஆண்டு ஜுலை 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, பள்ளி நிர்வாகி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.51 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பள்ளித் தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பளார் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர்கள் துரைராஜ், சிவப்பிரகாசம் ஆகியோருக்கு தலா ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், கட்டடப் பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தண்டனை பெற்றவர்கள் முறையீடு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணா, வி.எம்.வேலுமணி ஆகியோர் தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி உள்ளிட்டோரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து கடந்த 10.08.2017 அன்று உத்தரவிட்டனர்.

4 bismi svs

இதற்கிடையே, ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியைகள் அனைவருக்கும் தமிழக அரசு வெவ்வேறு அரசு பள்ளிகளில் மாற்றுப் பணி வழங்கியது.

வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட நிலையில், ஏதாவதொரு அரசு அல்லது உதவிபெறும் பள்ளியில் தன்னை தலைமை ஆசிரியையாக நியமிக்குமாறும், தனக்கு இதுவரை வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரி தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி தமிழக தொடக்கப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து மனுக்கள் அனுப்பினார்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர்கள் எதிர்பார்த்த முறையில் ‘கவனிக்காததால்’ அவரது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தனர் கல்வித்துறை அதிகாரிகள்.

இதனால் வெறுத்துப்போன சாந்தலட்சுமி அப்போதைய மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி அலுவலருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2019ஆம் ஆண்டு ஒரு ரிட் தாக்கல் செய்தார்.

அவரது ரிட் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், மனுதாரருக்கு மாற்றுப் பணியிடம் வழங்குவதோடு உரிய சம்பள நிலுவைத் தொகை உள்ளிட்ட பணப்பயன்களை வழங்க இரண்டு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கப் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு கடந்த 19.06.2019 அன்று உத்தரவிட்டார்.

அதோடு, இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என அப்போதைய தஞ்சை மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இத்தனைக்குப் பிறகும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அசைந்து கொடுக்கவில்லை. இதற்கிடையே, மாற்றுப் பணி வழங்கப்படாமலேயே 30.06.2019அன்று பணி ஓய்வுக்கான வயதை பூர்த்தி செய்தார் சாந்தலட்சுமி.

கடந்த 2004-ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாள் முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான சாந்தலட்சுமிக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத் தொகை சுமார் ரூ.75 லட்சம் ஆகும்.

அதில் ஒரு குறிப்பிட்டத் தொகையை லஞ்சமாக தருமாறு அப்போதைய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தஞ்சை மாவட்ட தொடக்கப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஆகியோர் சாந்தலட்சுமியிடம் நேரடியாகக் கேட்டுள்ளனர். மேற்படி லஞ்சத் தொகையை கொடுக்க மறுத்ததால் இவருக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதியம் இதுவரை கிடைக்கவில்லை.

லஞ்சம் தர மறுத்ததால் கடுப்பான அந்த மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறை பெண் அதிகாரி, ‘No work, No Pay’  என்ற அடிப்படையில் இவருக்கு சம்பள நிலுவைத் தொகை வழங்கப்படக் கூடாது என அறிக்கை அனுப்பி தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

மாநில அளவிலான இயக்குநரோ, ‘எனக்கு நீ லஞ்சம் கொடுக்காமல் இந்த பணத்தை எப்படி வாங்குற என்பதை நான் பார்க்கிறேன்’ என சவால் விட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் ‘சடுகுடு’ விளையாட்டுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தற்போது வாழ்க்கையின் விரக்திக்கே சென்றுவிட்டார் சாந்தலட்சுமி.

“கைது செய்யப்பட்டதால் வெளியே தலைக்காட்ட முடியவில்லை. பொதுவெளியிலும், உறவினர்கள் மத்தியிலும் நான் பட்ட அவமானங்கள் கொஞ்சநஞ்மல்ல,” என்கிறார் கடந்த சில ஆண்டுகளாக தஞ்சையில் வசித்துவரும் சாந்தலட்சுமி.

எனது கணவர் சாதாரண விவசாயி. இத்தனை ஆண்டுகளாக எனக்கு சம்பளம் வழங்கப்படாததால், தெரிந்த நண்பர்களிடம் வட்டிக்கு பணம் பெற்று மிகவும் சிரமத்துக்கிடையே குடும்பம் நடத்தி வருகிறோம்.

இதற்கிடையே வங்கியில் கல்விக் கடன் பெற்று எனது இரண்டு மகன்களையும் படிக்க வைத்துள்ளோம். என்னோடு இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஏனைய அனைவருக்கும் அவர்களுக்குரிய சம்பள நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மட்டுமே இன்னும் வழங்கப்படவில்லை என்கிறார் சாந்தலட்சுமி.

“எங்களுக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. குடும்பம் நடத்தவே ரொம்ப சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில், எனக்கு சட்டப்படி வரவேண்டிய சம்பள நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதியம் கிடைக்காமல் தொடர் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறேன்.

இந்நிலையில், ஏற்கெனவே எனக்கு கடன் கொடுத்தவர்கள் அனைவரும் இப்போது கொடுத்த கடனை திரும்பக் கேட்டு கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனக்கு சட்டப்படி வரவேண்டிய பணமும் வரவில்லை. தற்போதைய நிலையில் எனக்கு சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை,” என்கிறார் சாந்தலட்சுமி, கண்ணீர் மல்க.

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளால் பழிவாங்கப்பட்டு சட்டப் போராட்டம் நடத்திவரும் சாந்தலட்சுமிக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பாரா நேர்மைக்கு பெயர்போன தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.