அங்குசம் பார்வையில் ‘ஏ.ஆர்.எம்.’ திரைப்படம் திரை விமர்சனம் !
தயாரிப்பு : ’மேஜிக் ஃப்ரேம்ஸ்’ & ’யூஜிஎம் மோஷன் பிக்சர்ஸ்’ லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர்.ஜக்காரியா. டைரக்ஷன் : ஜிதின் லால். நடிகர்—நடிகைகள் ; டொவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, சுரபி லக்ஷ்மி, பாசில் ஜோசப், ஹரிஷ் உத்தமன், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்க்கீஸ், சுதீஸ். திரைக்கதை : சுஜித் நம்பியார், ஒளிப்பதிவு: ஜோமன் டி.ஜான், இசை: திபு நைனன் தாமஸ், எடிட்டிங் : ஷமீர் முகமத், ஸ்டண்ட் : பீனிக்ஸ் பிரபு, நடனம் : லலிதா சோபி. இணைத் தயாரிப்பு : ஜஸ்டின் ஸ்டீபன். தமிழ்நாடு ரிலீஸ் : ‘ஃபைவ் ஸ்டார்’ செந்தில். பி.ஆர்.ஓ. ‘எஸ்2 மீடியா’ சதிஷ்குமார்.
மலையாளத்தில் செம ஹிட்டடித்த ‘மின்னல் முரளி’ ஹீரோ டொவினோ தாமஸின் 50—ஆவது படம் தான் இந்த ‘அஜயண்ட ரண்டே மோஷனம்’. சுருக்கமாக ‘ஏ.ஆர்.எம்.’
வடக்கு கேரளத்தில் 1990-மன்னர் ஆட்சிக்காலம், சுதந்திர இந்தியாவில் 1950, அதன் பின் 1990 ஆகிய மூன்று காலகட்டங்களில் நடந்ததாக சொல்லப்பட்ட கற்பனைக் கதை தான் இந்த ‘ஏ.ஆர்.எம்.’ மன்னர் ஆட்சியின் போது, வானிலிருந்து வேகமாக வரும் விண்கல் ஒன்று பூமியில் வெடித்துச் சிதறி பிரளயத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் பீதியில் நடுங்குகிறார்கள். சம்பவ இடத்திற்கு வரும் மன்னன், அந்த விண்கல் மூலம் சியோதி என்ற அற்புத விளக்கு ஒன்றை உருவாக்குகிறான். அந்த விளக்கின் அற்புதத்தால் நாடு செழிப்படைகிறது. இதனால் அந்த விளக்கை ஒரு பாதள அறைக்குள் கடும் பாதுகாப்புடன் வைக்கிறான்.
ஒரு சமயம் கொள்ளையர்கள் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறான் மன்னன். அப்போது எடக்கல் பகுதியின் வீரனான குஞ்சிக்கெழு குதிரையில் வந்து மன்னனைக் காப்பாற்றுகிறான். தனது பகுதியும் மக்களும் செழிக்க அந்த விளக்கை பரிசாகக் கேட்கிறான் குஞ்சிக்கெழு. அதை வாங்கி தனது பகுதிக்கு வந்த பிறகு அம்மை நோயால் மக்கள் கொத்துக் கொத்தாக சாகிறார்கள். அதன் பின் தான் குஞ்சிக்கெழுவுக்குத் தெரிகிறது மன்னன் கொடுத்தது போலி விளக்கு என்று.
குஞ்சிக்கெழு இறந்த பின் அவனது மகன் மணியன் திருடனாகிறான். அரண்மனையில் இருக்கும் அந்த உண்மையான சியோதி விளக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கி, அதை எடுத்த பின்பு, ஊராரால் கொல்லப்படுகிறான். இப்போது 1990-ல் அந்த விளக்கை கைப்பற்றி லண்டனில் பெரும் தொகைக்கு விற்க ஹரிஷ் உத்தமன் கும்பல் வருகிறது. இதற்காக அஜயனை களம் இறக்குகிறது அந்தக் கும்பல். உண்மையான சியோதி விளக்கு கிடைச்சுதா? ஊர் விளங்கிச்சா? என்பது தான் இந்த ‘ஏ.ஆர்.எம்.’
35-40 ஆண்டுகளுக்கு முன்னால் ரஜினி—கமல் காம்பினேஷனில் வந்த ‘அலாவுதீனும் அற்புதவிளக்கும்’ படத்திற்கு மூணுவிதமாக கோட் அடித்து இந்த ஓணத்திற்கு ‘ஏ.ஆர்.எம்.’மை களம் இறக்கியிருக்கிறார்கள். குஞ்சிக்கெழு, மணியன், அஜயன் என முப்பரிமாணங்களில் வரிசைகட்டி அடிக்கிறார் டொவினோ தாமஸ். இதில் திருடன் மணியன், தற்போதைய அஜயன் கேரக்டர்களுக்காக நன்றாகவே உழைத்திருக்கிறார் டொவினோ தாமஸ். களரி சண்டைக்காக கடும் பயிற்சி எடுத்திருப்பார் போல.
குஞ்சிக்கெழுவின் காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மூன்று நிமிடங்கள் தான் சீன். திருடன் மணியனின் மனைவியாக வரும் சுரபி லட்சுமியும் அஜயனின் காதலியாக வரும் பணக்கார கீர்த்தி ஷெட்டியும் கவனம் ஈர்க்கிறார்கள். அதிலும் கீர்த்தி ஷெட்டி அழகோ அழகு..அப்படியொரு அழகு. அஜயனின் அம்மாவாக ரோகிணி, வழக்கம் போல் விதவைத் தாய்.
கேமராமேன் ஜோமன் டி.ஜானும் மியூஸிக் டைரக்டர் திபு நைனன் தாமஸும் திறம்பட உழைத்து தங்களது பங்களிப்பை சரியாக வழங்கியுள்ளார்கள்.
”எப்பா ராசா… சீக்கிரம் அந்த விளக்கை கண்டு பிடிப்பா” என டொவினோ தாமஸைப் பார்த்துச் சொல்லும் அளவுக்கு கடைசி இருபது நிமிடங்கள் ஜவ்வு தான்.
-மதுரை மாறன்