சேலம் நோக்கி படையெடுக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் – அதிமுகவில் பரபரப்பு !
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா நேற்று சசிகலாவை சந்தித்தார். இப்படி அடுக்கடுக்கான அதிரடி நிகழ்வுகள் அதிமுகவில் நடந்து வருகிறது. அதே நேரம் எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர் சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு ஆரம்பம் முதலே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் சிறிதும் சமரசம் செய்து கொள்ள முன்வராத எடப்பாடி தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சசிகலாவை சந்தித்த ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா மற்றும் அவருடன் சென்ற அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதற்கான சுற்றறிக்கையில் ஓ. பன்னீர்செல்வத்தின் கையெழுத்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிமுகவின் முக்கிய அதிகார மையம் தான் என்பதை எடப்பாடி மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அதேநேரம் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி தரப்பினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு நேற்று முதல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி, கருப்பண்ணன், உதயகுமார் போன்றோர் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக எடப்பாடியை வந்து சந்தித்து செய்கின்றனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்மொழிதேவன், பாண்டியன் உள்ளிட்டோரும் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தனர். இப்படி நேற்று முதலே எடப்பாடி இல்லம் பரபரப்போடு காட்சியளிக்கிறது. மேலும் அதிமுகவினரின் கூட்டமும் நேரம் ஆக ஆக எடப்பாடியின் வீடு முன் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.