பள்ளிக்கல்வித்துறையின் விளம்பரத் தூதரா … அந்த ஆசிரியர் ?
பள்ளிக்கல்வித்துறையின் விளம்பரத் தூதரா … அந்த ஆசிரியர் ? கேள்வி எழுப்பும் ஐபெட்டோ அண்ணாமலை ! ஆசையில் ஓர் கடிதம் … எனத் தொடங்கும் காதல் கடிதங்கள் பல பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் ”கல்வித்துறை கடிதங்கள்” என்றே தனித் தலைப்பே வைத்துவிடலாம் போல. ஆசிரியர் பணியிலிருந்து 17 ஆண்டுகளுக்கு முன்னரே பணிநிறைவு செய்திருந்தாலும்; இன்னமும் ஆசிரியர் சங்கத்தின் மூத்த தலைவர் என்று சொல்லிக்கொண்டு ’வேலை வெட்டி எதுவும் இல்லாமல்’ கல்வித்துறை அமைச்சருக்கு தொடர்ந்து கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார், ஐபெட்டோ அண்ணாமலை.
இலக்கணத்தில் ”வஞ்சப்புகழ்ச்சி அணி” பற்றியும், சமகால மேடைகளில் ”நேரடி புகழ்ச்சி – அணி” பற்றியும் அறிந்தவர்கள் ஆசிரியர்கள் என்பதால், கூடுதல் விளக்கங்கள் ஏதுமின்றி அவர் எழுதிய கடிதத்தை வாசித்து விடலாம் …. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம் தங்களுக்கு எங்களைப் போன்றவர்கள் எழுதுகின்ற மனம் திறந்த மடல்கள் தொடர்ந்து தங்களின் பார்வைக்கு வந்து கொண்டுதான் இருக்கும் என நம்புகிறோம். இருப்பினும் மீண்டும் உரிமை உறவுடன் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் தங்களின் இதய பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகத்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி பயன்பட வேண்டுமே தவிர, பிரச்சனைகளை உருவாக்குவதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி ஒருபோதும் அமையக்கூடாது. அரசாணை எண் 243 வெளிவந்த நாள் முதல் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் இணைந்து தொடர்ந்து போர்க்களத்தில் இருந்து போராட்டங்களின் வாயிலாக தங்களுக்கு எதிர்ப்பு உணர்வினை தெரியப்படுத்தி வருகிறார்கள்.
இந்த அரசாணை 90 சதவீதம் பெண்ணாசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அரசாணை ஆகும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எதிர்ப்புணர்வினை பல்வேறு வடிவங்களில் தெரியப்படுத்தி வருகிறார்கள். இந்த அரசாணை வெளியிட்டதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக ஒரு தனிப்பட்ட சங்கம் ஒரு மாநாட்டினைக் கூட்டி உள்ளார்கள் என்ற தகவலினை புலனப்பதிவு மூலமாக அறிந்து கொண்டோம்.
தனிப்பட்ட முறையில் நடக்கின்ற ஒரு சங்க மாநாட்டில் கலந்து கொள்ளலாம். ஆனால் 12 சங்கங்கள் இணைந்து தங்களது எதிர்ப்பினைத் தெரியப்படுத்தியதற்குப் பிறகும் நன்றி பாராட்டும் மாநாட்டில் கலந்து கொண்டால் சரியாக இருக்குமா? என ஒரு நிமிடம் சிந்தனைக்கு எடுத்து கொள்ளுங்கள்.
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஆனால், தாங்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு அன்றாடம் போர்க்கள செயல்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். காரணம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முன்வரவில்லை.
விளம்பரத் தூதுவர்களை நியமனம் செய்து கொண்டு பெரும் விளம்பரத்தால் மட்டும் பள்ளிக் கல்வித் துறையை நடத்த முடியும் என்று நம்பிக்கை வைத்துள்ளீர்கள். ஒருபோதும் அது நடைபெறாது. மதுரையில் பெற்றோர்களைக் கொண்டாடும் முதல் மாநாட்டினை 29.1.2024 அன்று நடத்தினீர்கள். அந்த மாநாட்டில் 25000 – க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று இருந்தார்கள். அதனை முழுவதுமாக நேரலையில் நான் பார்த்தேன்.பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களை ஒன்றியம் வாரியாக, மாவட்டம் வாரியாக, சிறப்பித்த நிகழ்வு வரவேற்பிற்குரியது. அரசுப் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சி மெய்சிலிர்க்க வைத்த நிகழ்ச்சியாகும்.
வழக்கம் போல் காவல்துறை முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் திரு. கலியமூர்த்தி அவர்களுடைய சொற்பொழிவில் பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர் என்ற தலைப்பில் கருத்துரை பெற்றோர்களின் நெஞ்சத்தில் பதிவானது சிந்திக்க வைத்த நிகழ்வாகும். மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி அவர்கள் உரையாற்றினார்கள். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆகியோர் உரையாற்றினர். கல்வித் துறையைச் சேர்ந்த 4 இயக்குனர்கள் இதில் பங்கேற்று இருந்தார்கள்.
ஆனால் பெற்றோர்கள் மத்தியில் இந்த நான்கு இயக்குநர்கள் கருத்துச் சொல்ல அழைக்கப்படவில்லை. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராக இன்னமும் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவரை ஆசிரியர் மனசுப்பெட்டி ஒருங்கிணைப்பாளர் என நியமித்துப் பிரதானமாக அவரைப் பேச வைத்தீர்கள். ஆனால் அவர் முறையாக பள்ளிக்குச் செல்லவில்லை, பாடம் நடத்தவில்லை, மாதந்தோறும் அறந்தாங்கி ஒன்றியத்தில் வட்டார கல்வி அலுவலகம் மூலமாக ஊதியம் பெற்று வருகிறார். இது எந்த வகையில் விதிப்படி சரியானதாக இருக்கும்? இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா….?
துறை இயக்குனருக்கு இல்லாத முக்கியத்துவம் அவருக்கு மட்டும் தொடர்ந்து விழாவில் அளிக்கப்படுவதன் நோக்கம் என்ன ?அவருக்கென திருச்சி மாவட்டத்தில் ஒரு அலுவலகம் இயங்கி வருகிறது. அவர் வழியாகத் தான் எல்லாமும் வரவேண்டும் என்றால் ஆசிரியர் சங்கங்களை புறக்கணித்துவிட்டு தனி நபர்களை விளம்பர தூதுவராக பயன்படுத்தி பள்ளிக் கல்வித் துறையினை நடத்த முடியும் எனத் தாங்கள் இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.
நீங்கள் நியமித்துள்ள இந்த ஆசிரியர் மனசுப் பெட்டித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏற்கனவே, முன்னாள் கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களிடம் அணுகி உங்களின் கல்வித் துறை செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என கேட்டுள்ளார். அப்பொழுது திரு. செங்கோட்டையன் அவர்கள் எங்களைப் போன்றவர்களுக்கு உங்களுடைய உதவி எல்லாம் தேவையில்லை எனவும், 234 தொகுதிகளிலும் எப்படி செயல்பட வேண்டும் என நிர்ணயிப்பவன் நான், எனக்கு ஒன்றும் உதவியாக இருக்க வேண்டாம், பள்ளிக்குச் சென்று முதலில் பாடம் நடத்து என அனுப்பியுள்ளார்.
ஆனால், நீங்கள் ஒரு கூட்டத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக ஆவேன் என்ற அவர்தான் சொன்னார், அதற்குப் பிறகு பள்ளிகள்வித்துறை அமைச்சராக நீங்கள் தான் வருவீர்கள் என சொன்னார் என நீங்களே பறைச்சாற்றுகிறீர்கள். என்றால் உங்களைப் பற்றி என்ன ? எண்ண வேண்டி இருக்கிறது. முதலில் தனி நபர்களை சம்பந்தமில்லாமல் பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்யுங்கள்.
பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடைபெறுகிறது என்றால், அதில் தாங்கள் கலந்து கொள்வது சரியாக இருக்குமா? என சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நடு நிலைமையுடன் செயல்படுவதே ஒரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மாண்பாகும். பொறுத்திருந்து பார்ப்போம். சுய பரிசோதனை செய்து கொண்டு முடிவுக்கு வாருங்கள்.
தாங்கள் பிறப்பதற்கு முன்னர் இருந்தே ”வாக்களித்து வருபவன்!!!!, ”வாக்களிக்கச் செய்து வருபவன்!!!!!!,- என்ற உணர்வுடன் இந்த மனம் திறந்த மடலினை தொடர்ந்து எழுதி வருகிறேன்!! நம்பிக்கை உணர்வுடன்…… ஐபெட்டோ வா.அண்ணாமலை.” என்பதாக கடிதம் நிறைவடைகிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.