கலகலப்பானவர் – கலகக்காரர் – மூத்த வழக்குரைஞர் போஜக்குமார் இறுதி விடைபெற்றார் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

கலகலப்பானவர் – கலகக்காரர் – மூத்த வழக்குரைஞர் போஜக்குமார் இறுதி விடைபெற்றார் !

திருச்சியை சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கோ.போஜக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (08.12.2023) காலை இயற்கை எய்தினார். இறுதி அஞ்சலி இரங்கல் கூட்டம் நாளை காலை 10.00 மணியளவில் திருச்சி காவிரிகரையில் அமைந்திருக்கும் ஓயாமெரி இடுகாட்டில் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி, ஜாபார்ஷா தெருவில் வைரவியாபாரிக்கு மகனாகப் பிறந்து சட்டம் பயின்று வழக்குரைஞராக ஆனவர், தரைக்கடை வியாபாரிகள் உள்ளிட்டு உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த வழக்குரைஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் போஜக்குமார்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

மூத்த வழக்குரைஞர் போஜக்குமார்
மூத்த வழக்குரைஞர் போஜக்குமார்
3

பார்ப்பதற்கு முரட்டு உருவம் கொண்டவராயிருந்தாலும் பழகுவதில் குழந்தையைப் போல் அவர். சிறு குழந்தையைக்கூட மரியாதையோடு அவர்களது பெயரோடு வாங்க – போங்க என்ற விகுதி இல்லாமல் என்றும் அழைத்ததில்லை அவர். வாஞ்சையான வாய்நிறைந்த புன்னகைதான் முதலில் நம்மை வரவேற்கும்.

சுற்றத்தை எப்போதும் கலகலப்பாக்கும் கலையை கற்றறிந்தவர்.  ஆகச்சிக்கலான ஒரு பிரச்சினையை அவர் முன் வைத்தாலும் தனக்கேயுரிய பாணியில் அவர் உதிர்க்கும் ”பார்த்துக்கலாம் விடுங்க” என்ற ஒற்றை சொல்லிலேயே பாதி சிக்கல் தீர்ந்து போயிருக்கும்.

4

அதேசமயம், அவர் ஓர் கலகக்காரர். ”நக்சல்பாரி” வழிவந்த வாரிசுகள் என்று பகிரங்கமாக அறிவித்து இயங்கிய மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புத் தோழர்களின் சட்டப்பூர்வமான அரணாக துணிச்சலோடு முன்னின்றவர் வழக்குரைஞர் போஜக்குமார்.

தற்போது, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் என்ற பெயரில் இயங்கிவரும் அமைப்பின் ஆதி தாயான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பிதாமகன் வழக்குரைஞர் போஜக்குமார்.

ரவுடிகளையும் சமூகவிரோதிகளையும் கையாளுவதைப் போல அல்லாமல், மக்கள் பக்கம் நின்று அவர்களது உரிமைக்காகப் போராடுபவர்களை அரசியல் ரீதியாக கையாள வேண்டுமென்பதற்காக நிறைய மெனக்கெட்டவர். அமைப்பு சார்ந்த அரசியல் போராட்டங்களுக்காக போலீசாரால் பதியப்பட்ட வழக்குகளை, அமைப்பு சார்ந்த வழக்கறிஞராக முன்னின்று நடத்தியவர்.

”இவர்கள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் இல்லை. நியாயத்திற்காக போராடுகிறார்கள். ரவுடிகளைப்போல இவர்களையும் அணுகக்கூடாது. இவர்கள் அரசியல் கைதிகள்.” என்று நீதிபதிகளுக்கே சட்ட வகுப்புகள் பல எடுத்தவர்.

உரிமைக்காக போராடுபவர்களை சமூகவிரோதிகளைப்போல கையாண்ட காவல்துறையினரை, நீதிமன்றக்கூண்டில் ஏற்றி அவர்களது காக்கிச்சீருடை நணையுமளவுக்கு கேள்விகளால் திணறடித்தவர்.

மூத்த வழக்குரைஞர் போஜக்குமார்
மூத்த வழக்குரைஞர் போஜக்குமார்

”ஒருமுறை ஆட்டோ ஓட்டுநர் பிரச்சினைக்காக போலீசு ஸ்டேசன் போனபோது, தோழர் ஒருவரை போலீசார் அடித்துவிட்டார்கள். சம்பவம் கேள்விபட்டு வந்தவர், போலீசு ஸ்டேஷன் முன்பாகவே சட்டைய கழற்றிவிட்டு நடு ரோட்டில் படுத்துவிட்டார். கடைசியில், தோழரை அடித்த அந்த எஸ்.ஐ. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைத்தவர்.

இரவுநேர பார் ஒன்றில் இளம்பெண்களுடன் நீதிபதியும் இருந்ததாக ஊடகங்களில் கிசுகிசு செய்தியான சமயத்தில், அந்த சர்ச்சையில் சிக்கியதாக கருதப்படும் நீதிபதியிடமே, “டிஸ்கோ டான்ஸ்னு சுத்துற நீதிபதிகள் மத்தியில் நீங்கள் ’நேர்மையானவர்’. இவர்களுக்கு நல்ல நீதியை வழங்குங்கள்.” என்று சாதுர்யமாகவும் சமயோசிதமாகவும் அதேசமயத்தில் முகத்துக்கு நேராகவும் எடுத்துரைக்கும் அந்த துணிச்சல் இவரது அடையாளம்.

ஜெ. ஆட்சியில் கிடா வெட்டும் போராட்டத்தை நாங்கள் நடத்தியபோது, போலீசார் எங்கள் மீது கை வைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். நின்ற இடத்திலிருந்து எல்லோருக்கும் தகவல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்.

அந்த சமயத்தில் எங்களை குண்டாசில் போட முயற்சித்தபோதுகூட, கலெக்டர், நீதிபதி என எல்லார்கிட்டயும் விசயத்தை எடுத்து சொல்லி அதை தடுத்து நிறுத்தியவர். உரிமைக்காக போராடுபவர்களின் அரணாக நின்றவர்.” என நெகிழ்ச்சியோடு பகிர்கிறார்கள் அவரோடு பயணித்த தோழர்கள்.

உடல்சார்ந்து ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இயங்கியவர். மருந்து மாத்திரைகளுக்கும் உணவு கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படாதவர். கடைசியில், உடல்நலக்குறைவே அவர் இறப்புக்கு காரணமாகியிருக்கிறது.

அவர் அரணாக நின்ற அமைப்புகளுக்குள்ளேயே ஆயிரம் சிக்கல்கள் இருந்தாலும், அரசியல் வேறுபாடுகள் கடந்து, உழைக்கும் மக்களின் உரிமைக்காக, அரசியல் உரிமைக்காக களமாடிய களப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார், வழக்குரைஞர் போஜக்குமார்.

– இளங்கதிர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.