வழக்கு விசாரணையை நீடித்துக்கொண்டு போவது பிணைகளை மறுப்பது ஜீவாதார உரிமைக்கு எதிரானது! ஆசிரியர் கி.வீரமணி
வழக்கு விசாரணையை நீடித்துக்கொண்டு போவது பிணைகளை மறுப்பது ஜீவாதார உரிமைக்கு எதிரானது! கி.வீரமணி அறிக்கை ! வழக்கு விசாரணை என்ற பெயரில் காலத்தை நீடித்துக்கொண்டே போவது – பிணைகளைத் தொடர்ந்து மறுப்பது – அடிப்படை ஜீவாதார உரிமைக்கு எதிரானது என்னும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அவரது அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில், டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு பிணை (ஜாமீன்) வழங்குவது சம்பந்தமான வழக்கில் நேற்று (9.8.2024) அவ்வழக்கினைத் தொடுத்துள்ள சம்பந்தப்பட்டவர்களிடம் (அமலாக்கத் துறை, சி.பி.அய். ) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விசுவநாதன் ஆகிய இருவரும் எழுப்பியுள்ள பிரச்சினை மிகவும் முக்கியமானது – அதுவும் இன்றைய காலகட்டத்தில்.
விசாரணை என்பது விரைவில் முடிக்கப்பட வேண்டிய ஒன்றே! ‘‘ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையை எவ்வளவு விரைவில் முடிக்கவேண்டும் (right to speedy trial) என்பதும், தனி நபர் சுதந்திரம் (Personal Liberty) என்பதும் மிகமிக முக்கியமானவையாகும்.
அரசோ, பிராசிகியூஷன் அமைப்புகளோ, அதேபோல் நீதிமன்றங்களோ பிணை உரிமைகள் வழக்குகளை காலம் தாமதித்து நீதி வழங்குவது கூடாது; குற்றம் மிகவும் சீரியஸ் ஆனது என்று கூறி, கைது செய்யப்பட்டவரின் உரிமைகளை நிறுத்தி வைக்கக் கூடாது” என்று ஜஸ்டிஸ் கே.வி.விசுவநாதன் அவர்கள் கூறியதும், அதுபோலவே, ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்கள், ஜாமீன் வழங்க விசாரணைக்கு வந்துள்ள அவ்வழக்கில் ‘‘கூடுதல் நிபந்தனையை, மணீஷ் சிசோடியா என்ற டில்லி துணை முதலமைச்சருக்கு விதிக்கவேண்டும்” என்று வற்புறுத்தியபோது, ‘‘மக்களிடம் வேர் பிடித்துள்ள இப்படிப்பட்டவர்களுக்கு அத்தகைய நிபந்தனைகள் தேவையில்லை” என்று ஓங்கி அடித்துள்ளார். ‘‘விசாரணை இல்லாத தண்டனை காலமாகவே இருக்கலாமா?” என்றும் கேட்டுள்ளார்.
இப்படிப்பட்ட வழக்குகளில் தேவையற்ற காலதாமதம் செய்வது அரசமைப்புச் சட்ட அடிப்படை ஜீவாதார உரிமைகளுக்கு எதிரானது என்பதை நன்கு இடித்துக் காட்டியுள்ளது, உச்சநீதிமன்றத்தின்மீது – அது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் இறுதி நம்பிக்கை என்ற கருத்து உறுதியாகிறது!
தமிழ்நாட்டில் மேனாள் அமைச்சர் வழக்கு விசாரணையை இன்னும் எவ்வளவுக் காலத்திற்கு நீடிப்பு?
தமிழ்நாட்டில், மேனாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களும் ஓராண்டுக்குமேல் சிறையில் உள்ளது மட்டுமல்லாமல், அவருக்குத் தொடர்ந்து இதய சிகிச்சை அதன் விளைவுகளால் பாதிப்பு என்ற நிலையில்கூட, அவரது பிணை (ஜாமீன்) மனுவை கடுமையாக ஆட்சேபித்து வருவது, ஏதேதோ புதுப் புதுக் காரணங்களைக் குறிப்பிட்டு ‘‘விசாரணை இல்லாத தண்டனை காலத்தை” நீட்டித்து வருவது, அரசமைப்புச் சட்டம் அவருக்கு அளித்துள்ள தனி நபர் சுதந்திர உரிமை, விரைந்த விசாரணை என்ற இரு அடிப்படை உரிமைகளையும் பறிப்பதாக ஆகாதா?
செந்தில்பாலாஜி என்ற தனி நபருக்காக நாம் இதனைச் சுட்டிக்காட்டவில்லை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படலாமா என்பது எண்ணிப் பார்க்கப்படவேண்டும்.
நீண்ட கால சிறையில் இருந்தவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டால், சிறைத் தண்டனைக்கு யார் பொறுப்பு?
நீண்ட காலம் விசாரணைக்கு முன்பே ஒரு நபர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தால், ஒரு வாய்ப்பு – வழக்கு விசாரணையின் முடிவில், ‘‘அவர் விடுதலை செய்யப்பட்டால், அவர் அனுபவித்த தண்டனைக் கொடுமைக்கு தக்க பரிகாரம் என்ன காண முடியும்?” என்ற கேள்விக்கு எவர்தான் பதில் அளிக்க முடியும்? அது நியாய விரோதம் அல்லவா?
பொதுவாகவே சட்ட மரபு என்பது
Bail is right
Jail is an exception
என்பதுதானே பொதுவான வழக்குகளில் கடைப்பிடிக்கப்படும் வழமை.
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு – மறுக்கப்பட்ட தீர்ப்பே!
இம்மாதிரி வழக்குகளில் ‘‘சீரியஸ் குற்றம்‘‘ என்ற முத்திரை குத்தி, பிணை (ஜாமீன்) மறுப்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியபடி, அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமை – அதன் அடிப்படைக் கட்டுமானத்திற்கே முரணான நடவடிக்கையாக அமையுமே என்பதால்தான், நீதிபதிகள் சரியான முறையில் இவ்வாறு கூறியுள்ளனர். நீதி வழங்கப்படல் வேண்டும்.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி அல்லவா? ” என்பதாக அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
– அங்குசம் செய்திப்பிரிவு.