ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி!
ஒரே கயிற்றில் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்ட
வயதான தம்பதி!
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியான பால் வியாபாரியும் அவரது மனைவியும் உடல் நலக் குறைவு மற்றும் வறுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தங்களது வீட்டில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இச்சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் பலராமன். வயது 76. பால் வியாபாரி.
அவரது மனைவி ஜெயலட்சுமி. வயது 70.
இத்தம்பதியினருக்கு ஒரே மகள். அவருக்கு திருமணமாகி கும்பகோணத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பால் வியாபாரியான பலராமனும், அவரது மனைவி ஜெயலட்சுமியும் வியாழக்கிழமை மாலை தங்களது வீட்டில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வழக்கம்போல் பால் வாங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் வியாழக்கிழமை மாலை பலராமனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதுதான் பலராமனும் அவரது மனைவியும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதுபற்றிய தகவலின் பேரில், தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு அவ்விருவரின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
76 வயதான பலராமன் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அதேபோல, எழுபது வயதான அவரது மனைவி ஜெயலட்சுமி இரண்டு கால்களிலும் மூட்டு வலி ஏற்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் கீழே விழுந்ததில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
வயதான காலத்தில் உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த தங்களைப் பராமரிக்க எவரும் இல்லாத நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு தேவையான போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, வேறு யாருக்கும் சுமையாக இருக்கக் கூடாது என முடிவு செய்து, அவ்விரும் ஒரே கயிற்றில், அதுவும் ஒரே சுருக்கில் இருவரது கழுத்துகளையும் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
