“தம்பி….. வா….. தலைமையேற்க….. வா…. உன் ஆணைக்குக் கட்டுப்படுகின்றோம்” – அமைச்சர் உதயநிதிக்கு ஒரு திறந்த மடல்

0

“தம்பி….. வா….. தலைமையேற்க….. வா…. உன் ஆணைக்குக் கட்டுப்படுகின்றோம்” –  அமைச்சர் உதயநிதிக்கு ஒரு திறந்த மடல்

அன்பு இளவல் ‘மானமிகு‘ இளவல் உதயநிதிக்கு, வணக்கம்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

நலம். நலம் வாழ்க.

எதிர்வரும் ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து யார் ஆட்சி அமைப்பது என்பதில் ஒரு தெளிவு ஏற்பட்டுவிடும். அதைத் தொடர்ந்து திமுக அமைச்சரவையிலும், திமுக மாவட்டச் செயலாளர்களிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று சமூக ஊடகங்களில பல மூத்த பத்திரிக்கையாளர்கள் பல்வேறு தகவல்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

- Advertisement -

அதில் சில தகவல்களில் ஒற்றுமையும், பல தகவல்களில் உள்ள வேற்றுமைகள் மலைக்கும் மடுவுக்குவுக்குமாக உள்ளன. என்றாலும் மூத்த பத்திரிக்கையாளர்கள் மணி, இலட்சுமணன், துக்ளக் ரமேஷ் ஆகிய மூவரின் பேச்சில் ஓர் ஒற்றுமை இருந்தது. அது என்னவெனில், திமுக அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் உதயநிதி துணை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கூறினார்கள்

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதைக் கேட்டவுடன் எனக்கு மகிழ்ச்சி வரவில்லை. காரணம் அரசியல் சட்டப்படியான அதிகாரம் பெற்ற பொறுப்பு அல்லத் துணை முதல்-அமைச்சர். அஃது ஒரு லேபிள். அவ்வளவுதான்.

இளவல் உதயநிதி, உங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பை நான் ஏற்றமைக்குக் காரணம், நீங்கள் கலைஞர் பேரன், தளபதியின் மகன் என்பதால் அல்ல, ஒரு செய்தியாளர் சந்திப்பில், “உங்கள் தலைவர் யார்” என்று கேட்டபோது, தாத்தாவைச் சொல்வரா? தந்தையைச் சொல்வரா? என்று செய்தியாளர்கள் எதிர்நோக்கியிருந்த நிலையில், “ என் தலைவர் தந்தை பெரியார், என் வழிகாட்டி, ஆசிரியர் வீரமணி” என்று பதில் சொன்னபோது என் நினைவுகள் கலைஞரைச் சுற்றிவந்தது.

கலைஞர் ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கனிமொழியைப் பற்றி பேச்சு வந்தது. அப்போது கலைஞர்,“என்னை வீட்டில் சந்திக்கவரும் கட்சி முன்னணித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் என்னைத் தலைவர், தலைவர் என்றே அழைப்பார்கள். இதைப் பார்த்துவிட்டு வீட்டில் உள்ள என் மனைவி, மகன்கள், மகள்கள் மட்டுமல்ல வீட்டுக்கு வந்த மருமகள்கள்கூடத் தலைவர் என்றுதான் அழைப்பார்கள். அப்படி அவர்கள் அழைப்பதை இயல்பாகவே எடுத்துக்கொள்வேன். எல்லாரும் என்னைத் தலைவர் என்று அழைக்கும்போது, சிறுமியாக இருந்த கனிமொழியிடம், ‘உன் தலைவர் யார்” என்று கேட்டேன். கனிமொழி என்னைத்தான் சொல்லும் என்று எண்ணியிருந்தபோது, கனிமொழி,“என் தலைவர் தந்தை பெரியார்” என்று சொன்னபோது நான் அதிர்ச்சி அடையவில்லை, மாறாக, சான்றோன் எனக் கேட்ட தாயாகவும் அவையில் முந்தியிருக்கச் செய்த தந்தையாகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டார்.

அத்தை கனிமொழியும் உதயநிதியும்
அத்தை கனிமொழியும் உதயநிதியும்

நீங்களும் உங்கள் அத்தை கனிமொழியும் கலைஞரின் வாரிசுகள் அல்ல, திராவிட இயக்கத்தின் வாரிசுகள் என்றே நான் எண்ணி மகிழ்கிறேன். கனிமொழி அவர்கள் தேசிய அரசியலில் இருப்பதால், மாநில அரசில் நீங்கள் பங்கேற்றிருப்பதால் உங்களின் பார்வைக்குச் சில செய்திகளை வைக்க விரும்புகிறேன்.

அது என்னவெனில்,“திமுக மாநில உரிமைகளைப் பற்றி பேசும்போது, ஆளுநர்கள் தேவை இல்லை என்று கருத்து தெரிவிக்கும்போது, மாநில அரசின் பட்டியிலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்குச் செல்லப்பட்டது. அதை மீட்கவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற போது திமுகவின் மீது பாஜக, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு,‘பாஜக ஆட்சியில் 5 ஆண்டுகள் (1999-2004), காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகள் (2004-14) என 15 ஆண்டுகாலம் ஒன்றிய அரசின் அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்த நிலையில் மாநில உரிமைகள் பற்றி, ஆளுநர் வேண்டாம் என்பது பற்றி, கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வருவது குறித்து என்ன ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பல திமுக முன்னணியினர் மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சி போடுவதுபோல வழவழ… கொழ..கொழ என்றே பதில் என்ற எதையோ பேசி மழுப்பிச் செல்வார்கள் என்பது வாடிக்கையாகவே இருந்தது.

கலைஞர் - ஸ்டாலின் - உதயநிதி
கலைஞர் – ஸ்டாலின் – உதயநிதி
4 bismi svs

இந்நிலையில், பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் குமரகுரு இதே கேள்வியைத் தொலைக்காட்சி ஊடக விவாதத்தில் முன்வைத்தபோது திமுக மாணவர் அணியின் தலைவர் இராஜீவ்காந்தி பதில் சொல்ல முனைந்தபோது என்னைப் போன்றவர்களுக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது. காரணம், பழம் தின்று கொட்டைப்போட்ட திமுகவினரே பதில் சொல்லமுடியாமல் நழுவிக் கொண்டிருக்கும் போது நாம் தமிழர் கட்சியிலிருந்து வந்த இவர் என்ன சொல்லப்போகிறார் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

இராஜீவ்காந்தி பதில் அளித்தபோது,“15 ஆண்டு கால ஒன்றிய ஆட்சியில் நாங்கள் பங்கெடுத்தபோது மாநில உரிமைகள் தொடர்பாக எதையும் ஆக்கப்பூர்வமாக செய்யவில்லை என்று நீங்கள் குற்றம் சாட்டுகின்றீர்கள். உங்கள் பார்வையில் திமுக குற்றம் செய்தது என்றே நான் ஒத்துக்கொள்கிறேன். திமுக இப்போது கேட்கும் மாநில உரிமைகள் உங்கள் பார்வையில் குற்றமுடையதா? ஆதரிக்கப்பட வேண்டியதில்லையா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்” என்றவுடன் பாஜக குமரகுரு பதில் சொல்லமுடியாமல் சிரித்து இராஜீவ் காந்தியின் கேள்வியைக் கடந்து சென்றார் என்பது வரலாறு.

ஜூன் 4ஆம் தேதி ஆட்சி அமைப்பது இந்தியா கூட்டணியா? பாஜக கூட்டணியா? என்பதைவிடுத்து, யார் ஆட்சி வந்தாலும், திமுகவின் நெடுநாள் கோரிக்கையான, மாநில உரிமைகள், நீட் விலக்கு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வருதல், ஆளுநர் பதவி ஒழிக்கப்படுதல், மாநிலங்களில் இந்தித் திணிப்பு, ஒன்றிய அரசில் தமிழ் ஆட்சிமொழி, திருக்குறள் தேசிய நூல் என்பனவற்றைத் திமுக பட்டியலிட்டு வைத்துக்கொள்ளவேண்டும். எந்த ஒன்றிய அரசாக இருந்தாலும் திமுகவின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாது. ஏன் என்றால், திமுகவின் நோக்கம் மாநிலச் சுயாட்சி, தனிநாடு கோரிக்கையில் முடியும் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, திமுக முன்வைக்கும் கோரிக்கைகளை மறுப்பார்கள் இல்லையென்றால் பின்னர்ப் பார்க்கலாம் என்று தள்ளிவைப்பார்கள்.

கலைஞருடன் உதயநிதி
கலைஞருடன் உதயநிதி

இந்நிலையில் திமுகவின் கோரிக்கைக்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைத் திரட்டுவது இன்றியமையாத ஒன்றாகும். அப்படி ஆதரவு திரட்டுவதற்கு, இளைஞர் அணியிலிருந்தும், மாணவர் அணியிலிருந்தும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் வீதம் 234 தொகுதிக்கு 23400 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆதரவு திரட்டும் இந்தப் படைக்கு “மாநிலச் சுயாட்சிப் பிரச்சாரப் படை” என்று பெயர் சூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர் கலைஞைர் அவர்களின் மனசாட்சியாக இருந்து செயல்பட்ட திராவிட இயக்கச் சிந்தனையாளர் முரசொலி மாறன் மாநிலச் சுயாட்சிப் பிரச்சாரப் படை என்ற அமைப்பை நிறுவினார். அது ஏனோ செயல்படாமல் போய்விட்டது என்பது காலத்தின் பிழை.

அந்தக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட பிழையைச் சரி செய்ய உங்கள் காலத்தில் மாநிலச் சுயாட்சிப் பிரச்சாரப் படை உங்கள் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அந்தப் படை ஒவ்வொரு வார இறுதி நாள்களில் 2 நாட்கள் மக்களைச் சந்தித்து, மாநிலச் சுயாட்சி குறித்துப் பேச்சரங்கம், பயிலரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், பொதுமக்களின் கேள்விக்குப் பதில் சொல்லுதல் போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்திட வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு இதன் மூலம் திமுகவின் மாநில உரிமைகள் தொடர்பானவற்றை நிறைவேற்ற அழுத்தத்தைத் தந்துகொண்டிருக்க முடியும். வரும் இந்த 5 ஆண்டுகளில் திமுக மாநில உரிமைகள் குறித்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் அண்ணாவால் அறிவு சார்ந்த உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழம் என்ற இந்த மாபெரும் மக்கள் இயக்கம் இனியும் தேவையான என்ற கேள்வி எழுவதை யாராலும் தடுக்கமுடியாது என்ற நிலை ஏற்படும்.

மு.க.ஸ்டாலின் - உதயநிதி அம்மாவுடன்
மு.க.ஸ்டாலின் – உதயநிதி அம்மாவுடன்

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வு முன்னேற்றம் பெற்றுத் தன்னிறைவு அடையும்வரை திமுக என்ற இயக்கம் இம் மண்ணில் இருக்கவேண்டும். அதன் இருப்பை வெளிப்படுத்தவும், நோக்கங்களைத் தெளிவுபடுத்தவும், இளவல் உதயநிதி தலைமையில் “மாநிலச் சுயாட்சிப் பிரச்சாரப் படை” அமைக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொறுப்பை இளைஞராக உங்கள் மீது சுமத்தி விட்டு நாங்கள் ஓய்வெடுப்போம் என்று எண்ணிவிட வேண்டாம். திராவிட இயக்கச் சிந்தனைகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அகவை முதிர்ந்த கோடிக்கணக்கான தொண்டர்களும் இளவல் உதயநிதியின் பின்னால் அணி வகுத்து நிற்போம். உறுதி.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் மொழியில்,“தம்பி வா…. மாநிலச் சுயாட்சிப் பிரச்சாரப் படைக்குத் தலைமையேற்க வா…. உன் ஆணைக்குக் கட்டுப்படுகின்றோம்” என்று இளவல் உதயநிதியை அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,
திராவிட இயக்கப் பற்றாளார்களில் ஒருவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.