ஆடையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்; குழந்தையின் ஆணுறுப்பில் தீவைத்துக் கொடுமை! – அதிர்ச்சி சம்பவம்

0

ஆடையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்; குழந்தையின் ஆணுறுப்பில் தீவைத்துக் கொடுமை! – அதிர்ச்சி சம்பவம்

 

கர்நாடக மாநிலம், தும்கூரில் 3 வயது குழந்தையின் ஆணுறுப்பில் தீவைத்துக் காயப்படுத்திய அங்கன்வாடி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

கர்நாடக மாநிலம், சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ள கோடேகெரே கிராமத்தில், சிறு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. அதில், 17 குழந்தைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றனர். அந்த மையத்துக்கு, தாயை இழந்து, தந்தை, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்துவரும் 3 வயது குழந்தையும் அனுப்பப்பட்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் பாட்டி தன் மூன்று வயது பேரனைக் குளிப்பாட்டும்போது தொடை, ஆணுறுப்பில் தீக்காயங்கள் இருந்ததை பார்த்திருக்கிறார். அது தொடர்பாக விசாரித்தபோது, அங்கன்வாடியில் குழந்தை அடிக்கடி ஆடையிலேயே சிறுநீர் கழித்ததால், ஆத்திரத்தில் உதவி ஆசிரியை ரஷ்மி என்பவர் தொடை, ஆணுறுப்பில் தீப்பெட்டி மூலம் கொளுத்தி துன்புறுத்தியது தெரியவந்தது.

 

ஆனால், குழந்தை இதுபற்றி யாரிடமும் கூறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், குழந்தையின் பாட்டி உரிய அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். அதையடுத்து, தாலுகா குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரின் பரிந்துரையின் பேரில் ரஷ்மி பணியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை துணை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

 

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.