ஒரு நொடியில் எதுவும் நடக்கலாம் ! இதான் ஒரு நொடி த்ரில்லர் சினிமா !

தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம் ...

0

ஒரு நொடியில் எதுவும் நடக்கலாம் ! இதான் ஒரு நொடி த்ரில்லர் சினிமா !

யாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌

இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தில் தமன்குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி. ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.

இம்மாத இறுதியில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும், சமூக செயற்பாட்டாளரும், பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனன், தயாரிப்பாளரும், இயக்குநருமான சி. வி. குமார், நடிகரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் இவர்களுடன் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் கலந்து கொண்டனர்.

- Advertisement -

படத்தின் இயக்குநர் மணிவர்மன் “தயாரிப்பாளர் அழகர் என்னை நம்பி இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தின் கதையை கேரளாவில் உள்ள ஒரு இயக்குநருக்காக உருவாக்கி.. அதை முதலில் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்தீஷிடம் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்ட ரத்தீஷ், இந்த திரைப்படத்தை நாம் இணைந்து உருவாக்கலாம் என்றார். இந்த படத்திற்கு அவரும் இணை தயாரிப்பாளர்.

இன்றைக்கு இந்த திரைப்படம் இந்த அளவிற்கு மக்களை சென்றடைந்திருக்கிறது என்றால்… அதற்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும் தான் முக்கியமான காரணம். இதற்காக இவர்கள் இருவருக்கும் நன்றி. ‌

இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்… எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி… அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற நடந்த சம்பவம் தான் இந்த படத்தின் கதை. படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஒளிப்பதிவாளரும், இணை தயாரிப்பாளருமான கே. ஜி. ரத்தீஷ் பேசுகையில், ” ஒயிட் லாம்ப் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இது. சிறிய தயாரிப்பு நிறுவனம். ஒரு நொடி படத்தின் இன்றைய நிலைக்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும்தான் காரணம். அவர்களுக்கு கோடான கோடி நன்றி. ஒளிப்பதிவாளராக நிறைய இயக்குநர்களிடம் கதை கேட்டு இருக்கிறீர்கள். ஆனால் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறீர்கள் ஏன்? என் நண்பர்கள் கேட்டார்கள். என் நண்பனுக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்?  நன்றி.” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் பேசும் போது “படத்தின் கதையை இயக்குநர் எழுதி முடித்தவுடன் என்னிடம் முழு கதையை விவரித்தார். முதலில் ஒப்புக்கொள்ள தயங்கினேன். அதன் பிறகு,’ உனது திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. துணிந்து பணியாற்று’ என நம்பிக்கை அளித்தார்.

படத்திற்கு பின்னணியிசை அமைக்கும் போது வியப்பாக இருந்தது. முதன்முதலாக இரண்டரை மணி நேர திரைப்படத்திற்கு இசையமைக்க போகிறோம் என்ற மலைப்பு இருந்தது. ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் எனக்கு முழுமையான வழிகாட்டினார். இதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி.

படத்தின் தயாரிப்பாளர் அழகர் ஜி பேசுகையில், ” ஒரு நொடி படத்தின் பணிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேற்கு கோபுர வாசலிலிருந்து தொடங்கினேன். இந்த படத்தினை இயக்குநர் மணிவர்மன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கே ஜி ரத்தீஷும் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். தனஞ்ஜெயன் எங்களையும், எங்கள் குழுவையும் மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்”.

நாயகன் தமன்குமார் பேசுகையில், “எனக்கு உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்கவில்லை.‌ என் வாழ்க்கையில் முக்கியமாக ஒருவர் உதவி செய்தார் என்றால்… அது ஈரோடு மகேஷ் தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் இல்லை என்றால்… கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக திரைத்துறையில் நான் இருந்திருக்க மாட்டேன்.

4 bismi svs

தற்போது ஒரு நொடி படத்தில் நடித்ததால் அனைத்தையும் கடந்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவை சுமாரான வெற்றியை பெற்றிருக்கின்றன. சில படங்கள் வெளிவராமல் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் ஊடகவியலாளர்களான நீங்கள் என் மீது அக்கறை கொண்டு ஊக்கப்படுத்தினீர்கள். இதற்காக இந்த தருணத்தில் நான் உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் தயாரிப்பாளர் அழகர் தான். நல்ல நடிகர்கள் எப்போதும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருப்பார்கள். இதனை ஒரு தயாரிப்பாளரால் தான் முதலீடு செய்து தகுதியான கலைஞர்களையும், நடிகர்களையும் உருவாக்க முடியும்.‌

இந்தப் படத்திற்கு தூணாக விளங்கிய மற்றொருவர் கே ஜி ரத்தீஷ். ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல இணை தயாரிப்பாளர் கூட. அவருடைய பங்களிப்பு என்பது ஈடு இணையற்றது. படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். அவர் ஒரு நாளைக்கு திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் தெளிவாக படமாக்குவார். ஒரு நாளைக்கு 65 ஷாட்களை படமாக்கியிருக்கிறோம். எந்த இடத்திலும் எதற்கும் சமரசம் செய்யாமல் இயக்குநரும், இவரும் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதற்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நடிகைகளும் முழு ஒத்துழைப்பையும் அளித்தனர்.

இந்தத் திரைப்படத்தில் மூத்த அரசியல்வாதியான பழ கருப்பையா அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் போது அவருடன் பேசும் போது பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக ”சினிமாவில் நம்பர் ஒன்.. நம்பர் டூ என்பது இருந்து கொண்டே இருக்கும். பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர்கள்தான் மாறுவார்கள்.‌ அது நிலைத்த புகழ் அல்ல. நிலைத்த புகழ் என்பது… யார் ஒருவர் ஈகை, தியாகம் , வீரம், அன்பு.. இருக்கிறதோ அவர்தான் நடித்த புகழை பெறுவார்” என சொன்னார். அது உண்மைதான். அவர் சொன்னதை தினமும் நான் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன். என்னால் முடிந்த சிறிய சிறிய உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தப் படத்திற்கு கேபிள் சங்கரின் பங்களிப்பும் மகத்தானது. இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது போனில் தொடர்பு கொண்டு ‘அயோத்தி’ படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் பேசப்படுகிறது. அதற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது’ என பாராட்டினார். அப்போது அவரிடம், ‘நான் இன்று ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்த படமும் சிறப்பாக வரும்’ என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.‌ படத்திற்கு  டப்பிங் செய்யும் போது ஒரு கேரக்டருக்காக கேபிள் சங்கர் பின்னணி பேச வந்தார். படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, தனஞ்ஜெயனை அழைத்து வந்தார்.  அவர் வந்த பிறகு இந்தப் படத்திற்கான முகவரியே மாறிவிட்டது.

தயாரிப்பாளர் சி. வி. குமார் பேசுகையில், ” ஹீரோ தமன் குமாரும், டைரக்டர் மணியும் இணைந்து நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் ‘கண்மணி பாப்பா’ என்ற படத்தினை வழங்கினர். அந்தப் படமும் சிறந்த படம் தான். அந்தப் படம் சரியான நபரின் கையில் கிடைக்காததால் வெளியீடு சிறப்பாக இல்லை. அதனால் வெற்றியும் கிடைக்கவில்லை. ஒரு நொடி எனும் இந்தத் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது என கேள்விப்பட்டேன். இந்த திரைப்படம் தனஞ்ஜெயனின் கைகளுக்கு கிடைத்திருக்கிறது. அவர் இந்த திரைப்படத்தை சிறப்பான முறையில் வெற்றி பெற செய்வார். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகர் ஆரி அர்ஜுனன் பேசுகையில்,  ‘வாய்ப்புகளைத்  தேடி ஓட வேண்டும். நல்ல படைப்புகள் வெளியாக வேண்டும்.  ஒரு நொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பாளர்கள் விரும்பும் தரமான இயக்குநர் கிடைத்திருக்கிறார்  மகிழ்ச்சி. இப்படத்தின் கதைதான் அனைவரையும் ஒன்றிணைந்து, எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்ற வைத்து. இந்த படம் வெளியான பிறகு ஹீரோ தமன் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்.

நாம் நமது தவறுகளை எப்போது ஒப்புக்கொள்கிறோம்…. நாம் செய்யும் தவறுகளை எப்போது திருத்திக் கொள்கிறோம்… என்பது மிகவும் முக்கியமானது. தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம்”.

படத்தை வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோஸ்தருமான தனஞ்செயன் பேசும் போது, “இயக்குநர் மணிவர்மனிடம் படத்தில் ஒரு திருத்தத்தை சொன்னேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். அது கதையின் போக்கையே மாற்றிவிடும் என்பதை அவர் விளக்கிய பிறகு.. நானும் உணர்ந்தேன். இது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இயக்குநர் மணிவர்மன் போன்றவர்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். மணிவர்மன் போன்றவர்கள் திரையுலகில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.‌

ஏப்ரல் 26 ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டோம். கோடை விடுமுறை தொடங்கியதால் இந்த தேதி சிறப்பானது என கருதி வெளியிடுவதற்காக திரையரங்குகளை தொடர்பு கொண்டோம். அவர்கள் ‘அரண்மனை 4’, ‘ரத்னம்’ என இரண்டு பெரிய திரைப்படங்கள் அன்றைய தேதியில் வெளியாகிறது என சொன்னார்கள். ஆனால் இப்போது நடிகர் ஆரி சொன்ன தகவலால் உற்சாகமடைந்திருக்கிறேன். ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒரு நொடி படத்திற்கு கூடுதலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

பேச்சாளர் ஈரோடு மகேஷ் பேசுகையில், ”  ‘ஒரு நொடி’ இந்த பட குழுவினருக்கு இந்த படம் எவ்வளவு முக்கியமோ… அந்த அளவிற்கு என்னுடைய நண்பன் தமனுக்கும் இந்த படம் முக்கியம். ஒரு மனிதன் ஒரு வெற்றிக்காக ஒரு மாதம் உழைக்கலாம். ஓராண்டு உழைக்கலாம். ஈராண்டு உழைக்கலாம். ஆனால் பன்னிரண்டு ஆண்டு காலம் உழைத்திருக்கிறார். ஒரு வெற்றிக்காக தன்னுடைய வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகளை தியாகம் செய்தவர் என்னுடைய நண்பர் தமன் குமார். எல்லாம் வல்ல இறைவனின் ஆசியால் இந்த திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்”

மதுரை மாறன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.