‘மின்மினி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இசைப்புயல் மகள்!
‘மின்மினி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இசைப்புயல் மகள்!
இயக்குநர் ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது மகுடத்தின் மீது வைரக்கல் போல சிறப்பான தருணம். முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் குடும்பத்தில் இருந்து வந்த கதீஜா, ஏற்கனவே பல பாடல்களில் தனது குரல் மூலம் இசை ஆர்வலர்களின் கவனத்தை வென்றுள்ளார். ‘மின்மினி’ படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற செய்தியை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
‘மின்மினி’ படத்தை ஹலிதா ஷமீம் எழுதி இயக்குகிறார், மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாக காத்திருந்து ஒரு திரைப்படத்தை படமாக்கும் அதன் முயற்சி சினிமா பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆங்கர் பே ஸ்டுடியோவுடன் இணைந்து ‘மின்மினி’ படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கௌரவ் காளை, பிரவின் மற்றும் கௌரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
’பூவரசம் பீப்பி’, ’சில்லு கருப்பட்டி’, ’ஏலே’ மற்றும் ’லோனர்ஸ்’ (அமேசான் பிரைமில் வெளியான ஆந்தாலஜி ’புத்தம் புது காலை விடியாதா’வின் ஒரு பகுதி) உள்ளிட்ட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹலிதா ஷமீமின் முந்தைய படைப்புகள் காரணமாக ‘மின்மினி’ படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
-மதுரை மாறன்