அருண் நேரு பிறந்த நாள் கொண்டாட்டமும் – திருச்சி அரசியலில் நடைபெறும் மாற்றமும் !

0

திமுக அரசியலில் மட்டுமல்ல திருச்சி அரசியலிலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய அரசியல் அதிகாரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் கே என் நேரு. இவரது குடும்பத்திலிருந்து தற்போது அரசியல் பிரவேசம் எடுத்து இருப்பவர் அருண் நேரு.

கே. என். நேருவைப் போல அருண் நேருவை திருச்சியின் அரசியல் அதிகார மையமாக கொண்டுவர வேண்டும் என்ற முயற்சிகள் தற்போது தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அரசியலில் அறிமுகமான பிறகு மிக விமர்சையாக பிரம்மாண்டமாக இந்த ஆண்டு டிசம்பர் 12 நடைபெற்ற ‌அருண் நேருவின் பிறந்தநாள் நிகழ்வு அமைந்திருந்தது.

திருச்சி சாஸ்திரி ரோடு இரண்டாவது கிராசில் அமைந்திருக்கக் கூடிய கே .என்.நேருவின் அலுவலகத்தில் பிரம்மாண்ட வளைவுகளுடன், தெரு முழுக்க பந்தல் போடப்பட்டு பேண்டு வாத்தியங்கள் முழங்க, மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி என்று தடால் புடலாக திருச்சியில் டிசம்பர் 11ஆம் தேதியே பிரம்மாண்ட கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வட்ட செயலாளர்கள் முதல் மாவட்ட பிரதிநிதிகள், முக்கிய நிர்வாகிகள், திமுக உடன் பிறப்புகளும் என்று ஆயிரக்கணக்கானோர் சாஸ்திரம் இருக்கக்கூடிய அலுவலகத்தை நோக்கி காலை முதலே அணி திரண்டு வந்தனர். மேலும் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள், சுவர் விளம்பரங்கள் என்று திருச்சி மாநகர் பகுதியே விழாக்கோலம் பூண்டது.

மேலும் திருச்சி திமுக வின் 6வது வார்டு வட்டச்செயலாளர் ஜனா என்பவர் “காத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு” என்ற வசனம் பொறிக்கப்பட்ட 40 கிலோ கேக் வெட்ட வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். மேலும் தொண்டர்களின் விசில் சத்தம் பறக்க தெரு முழுக்க உடன்பிறப்புகளின் நடமாட்டத்தால் சூழ்ந்தது.


இப்படி ஆரவாரத்தோடு பிரம்மாண்டமாக டிசம்பர் 11 அன்று திருச்சியில் அருண் நேரு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. 12ஆம் தேதி சென்னைக்கு புறப்பட்ட அருண் சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றார். மேலும் சென்னையிலும் நிர்வாகிகள் அருண் நேருவை சந்திக்க வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருண் நேருவின் பிறந்த நாள் கொண்டாட்டம் திருச்சியின் அரசியல் அருண் நேருவை தவிர்க்க முடியாதவராக ஆக்குவதற்கு நடத்தப்பட்டது என்று அருண் நேருவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் அரசியலில் தந்தையை போலவே தனக்கென்று தனி இடத்தை அருண் நேரு உருவாக்கிய கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.