ஊரைவிட்டே ஒதுக்கிய அவலம்- கட்டப்பஞ்சாயத்தாருடன் கைக்கோர்த்த பொறையார் காவல்நிலையம்!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ஊரைவிட்டே ஒதுக்கிய அவலம்- கட்டப்பஞ்சாயத்தாருடன் கைக்கோர்த்த பொறையார் காவல்நிலையம்!

காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள் என பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்திலும்கூட, ஊர் பஞ்சாயத்தார் என்று சொல்லிக்கொண்டு இஷ்டத்துக்கு கட்டப்பஞ்சாயத்து செய்யும் அவலங்கள், இன்னமும் கிராமப்புறங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை பிரதிபலிக்கிறது மயிலாடுதுறை மாவட்டம் பூந்தாழை கிராமத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் குமாரி என்கிற எஸ்தர் ராணிக்கு நேர்ந்த வேதனைச் சம்பவம்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கஷ்டமான சூழ்நிலையில் வசித்து வரும் எஸ்தர் ராணி

 

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

காரணம் என்ன?

3

கடந்த, 55 வருடங்களாக பூந்தாழை, தொட்டியந்திடல் கம்பன் நகர் பகுதியில் வசித்துவருகிறார் குமாரி. இவரது அப்பா பெயர் சங்குநாதன், அம்மா பெயர் காவேரி அம்மாள்.

இவரது, அம்மா காவேரி அம்மாளுக்கு பிறந்த பிள்ளைகள் நல்லப்பொண்ணு என்கிற பிச்சையம்மாள் (அக்கா இறந்துவிட்டார்), முத்தையன் என்கிற முண்டாரி (அண்ணன்), குமாரி என்கிற எஸ்தர் ராணி ஆகிய மூன்று பேர்.

4

இவர், வசித்துவரும் இடம் தனது அக்கா நல்லப்பொண்ணு என்கிற பிச்சையம்மாளுக்கு அப்பா சங்குநாதன் பூந்தாழை என்கிற ஊரில் கொடுத்த சுமார் 2 கிரவுண்ட் புன்செய் இடமாகும்.

குமாரிக்கு யேசுவா என்கிற கிருஷ்ணமூர்த்தியுடன் இரண்டாவது திருமணம் செய்யப்பட்டபிறகு, அக்கா நல்லப்பொண்ணு என்கிற பிச்சையம்மாள் வசித்த வீட்டில் தானும் சேர்ந்து வசித்து வந்துள்ளார். அக்கா நல்லப்பொண்ணு என்கிற பிச்சையம்மாள் இறந்துவிட்டார்.

பிறகு, குமாரி மட்டுமே அந்த இடத்தில் வசித்துவந்துள்ளார். இவருக்கு தெபோராள் என்ற மகள் உள்ளார்.
தனது, கணவர் யேசுவா என்கிற கிருஷ்ணமூர்த்தியின் முதல் மனைவி கனகவள்ளிக்கு மோகன் என்கிற எசேக்கியல், கனகராஜ், இம்மானுவேல் என மூன்று பிள்ளைகள், திருவங்காடு பண்டாரவடைத்தெருவில் வசித்துவந்தனர்.

இதில், மோகன் என்கிற எசேக்கியல் மட்டும் திடீரென்று ஆறுமாதத்திற்கு முன்பு குமாரி வசித்துவந்த தொட்டியந்திடல், கம்பன் நகர், பூந்தாழை முகவரியிலுள்ள குடிசை வீட்டிலிருந்து குமாரியையும் அவரது மகளையும் அடித்து விரட்டிவிட்டு குடியேறிவிட்டார்.

இந்த ஊரிலேயே நீ இருக்கக்கூடாது!

இதனால், அவருக்கு பயந்து பக்கத்து தெருவில் வாடகை வீட்டில் வசிந்துவந்துள்ளார்கள். வருமானம் எதுவும் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாததால் தான் வசித்த வீட்டிற்கு அருகிலேயே குடிசை போட்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த வீட்டில் மின்சாரம்கூட கிடையாது.

குற்றம்சாட்டப்பட்ட மோகன் என்கின்ற எசக்கியல்

 

ஏற்கனவே, குமாரி குடியிருந்த வீட்டை அபகரித்தது மட்டுமல்லாமல், இப்போது வசிக்கும் இந்த குடிசையிலிருந்தும் வெளியேறவேண்டும், இந்த ஊரைவிட்டே ஓடிவிடவேண்டும் என்று மோகன் என்கிற எசேக்கியல் தினமும் குடித்துவிட்டு வந்து அசிங்க அசிங்கமாக திட்டுவதும் அடிப்பதும் என மிகக் கொடூரமான செயல்களை செய்துவந்ததாக குற்றஞ்சாட்டுகிறார் குமாரி.

 

வயதான காலத்தில் தினந்தோறும் மோகன் என்கிற எசேக்கியலால் சித்திரவதைகளை அனுபவித்துவருவதாக கண்ணீர் வடிக்கிறார்.

பேரன் பேத்திகளையும் அடிக்கிறான்!

இதுகுறித்து, நம்மிடம் குமாரி என்கிற எஸ்தர் ராணி கூறுகையில், ”என்னோட மகள் தெபோராளை திருமணம் செய்துகொடுத்தேங்கய்யா. அவளும் குடும்பப்பிரச்சனையால இங்குதான் தங்கியிருக்கா.

 

அவளையும் அசிங்கமாக பேசி, குழந்தைகளை அதாவது என் பேரன் – பேத்திகளையும் அடித்து விரட்டுறான் இந்த மோகன் என்கிற எசேக்கியல்.

என் பேரனை அடிச்சு காயப்படுத்தியதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போயி மருந்து போட்டு வந்தோம். என்னை ஏற்கனவே தலையில அடிச்சு இப்பவும் ஆஸ்பத்திரி ஸ்கேனுன்னு அலைஞ்சுக்கிட்டிருக்கேன்.

நிர்வாணமா வந்து அசிங்கப்படுத்துறான்!
என்னோட அப்பா எனக்கு கொடுத்த இடம், என் கணவரோட முதல் மனைவிக்கு பிறந்த மோகன் என்கிற எசேக்கியல் எப்படிங்கய்யா உரிமை கொண்டாடமுடியும்? தினந்தோறும் பெண்கள், குழைந்தைகள்னுக்கூட பார்க்காம எங்களை அடிக்கிறதுக்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கு? குடிச்சிட்டு நிர்வாணமா வந்து நின்னு அசிங்கப்படுத்துறான் அய்யா.

ஊரைவிட்டே ஒதுக்கிய கட்டப்பஞ்சாயத்தார்!

ஏற்கனவே, அமாவாசைக் கூட்டத்துல ஊரு பஞ்சாயத்தாரிடம் எங்களுக்கு நடக்குற கொடுமைகளைச் சொன்னோம். உன் பேத்தி (தெபோராளின் மகள்) காதல் திருமணம் செய்துக்கிட்டு போய்ட்டா. அதனால, இந்த ஊர்லேயே உனக்கு இடமில்ல.

அதனால், உன் மகளும் நீயும் எங்காவது ஓடிவிடுங்கன்னு மோகன் என்கிற எசேக்கியலுக்கு சாதகமா ஊர் பஞ்சாயத்தார் பேசினாங்க. அதுமட்டுமில்ல, இந்த ஊரிலிருந்து எங்களை பஞ்சாயத்தார் அசோக், ரமேஷ் மற்றும் கோபி ஆகியோர் சேர்ந்து ஒதுக்கிவெச்சுட்டாங்க.

 

இதனால, நான் வசிக்குற பூந்தாழை கிராமத்துல வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்னு எந்த பொருளும் வாங்கமுடியாம, ஆக்கூர் முக்குட்டு என்கிற ஊருக்குப்போயி வாங்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம்.

இதுக்கு, இன்னொரு காரணமும் இருக்கு. என்னோட அண்ணன் முத்தையன் என்கிற முண்டாரியும் இந்த சொத்துக்கு ஆசைப்பட்டு பிரச்சனை செய்துக்கிட்டிருக்காரு. இதனால, ஊரில் யாரும் எங்களுக்கு உதவல.

 

தினம் தினம் எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் செத்து செத்து வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.
காவல்துறைதான் மோகன் என்கிற எசேக்கியல், முத்தையன் என்கிற முண்டாரியிடமிருந்து எங்களைக் காப்பாத்தணும்” என்று கையெடுத்து கும்பிடும் குமாரி இதுகுறித்து பொறையார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வீட்டை அவன்கிட்டேயே கொடுத்துடு- எஸ்.ஐ ஜோதி!

அதற்குப்பிறகு நடந்ததுதான் அநியாயத்தின் உச்சம். பூந்தாழை கிராமத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள பொறையார் காவல்நிலையத்திற்கும் 73 வயதான குமாரி கஷ்டப்பட்டு சென்றுள்ளார்.

பொறையார் உதவி காவல் ஆய்வாளர் ஜோதி

புகாரை வாங்கிய எஸ்.ஐ ஜோதி, “வயசான காலத்துல உனக்கு ஏன்மா இதெல்லாம்? பேசாம அவன்கிட்ட கொடுத்துட்டு வேலைய பாரும்மா” என்று அலட்சியமாக பேசி அனுப்பியுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட மோகனை அழைத்துகூட எஸ்.ஐ ஜோதி விசாரிக்காததன் விளைவு, அன்றைய தினத்திலிருந்துதான் மோகனின் அட்டகாசம் அதிகரிக்க ஆரம்பித்தது.

 

அதற்குப்பிறகுதான், குமாரியையும் அவரது மகள், பேத்திகளை அதிகமாக அடித்து விரட்ட ஆரம்பித்துள்ளார். எஸ்.ஐ. ஜோதி வேறு இடத்திற்கு மாறுவதை காரணம் காண்பித்து, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளார். காவல் நிலைய எழுத்தரும் ஏட்டுவுமான ஆதிநாரயணனனும் அவருடன் நின்ற இன்னொரு போலீஸும் புகாருக்கு நடவடிக்கை எடுக்கமுடியாது, என்று குமாரியை விரட்டியடித்துள்ளனர்.

அடிதாங்க முடியாமல் மீண்டும் பொறையார் காவல்நிலையத்திற்கு ஓடிவந்து இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவிடம் கண்ணீரோடு முறையிட்டார்கள் குமாரியும் அவரது மகள் தெபோராள், பேரன் – பேத்திகளும். அவர், குப்புசாமி என்கிற காவலரை நியமித்து விசாரிச்சொன்னார்.

காவலர் குப்புசாமி

 

ஊரே எதிரா இருக்கு- காவலர் குப்புசாமி!
ஊருக்குள் சென்று காவலர் குப்புசாமி விசாரித்தபோது, ”என்னையையே விசாரிக்கிறீங்களா?” என்று போலீஸ் குப்புசாமியையே எதிர்த்து பேசியுள்ளார் கட்டப்பஞ்சாயத்து அசோக். ”என் மீதே புகார் கொடுப்பியா உனக்கு என்ன தைரியம்?” என்று குமாரியையும் அவரது மகளையும் கடுமையாக திட்டி அடிக்கப்பாய்ந்திருக்கிறார் அசோக் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

 

ஆனாலும் இதுவரை காவல்துறை சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊரே குமாரிக்கு எதிராக இருக்கிறது என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கைவிரித்திருக்கிறார் போலீஸ் குப்புசாமி.

மோகன் என்கிற எசேக்கியலுடன் கூட்டு சேர்ந்து ஊர்க்காரர்களே ஒதுக்கிவைத்திருக்கிறார்கள் என்றுதானே காவல்நிலையத்தைத் தேடி நியாயம் கேட்டு புகார் கொடுத்துள்ளார் வயதான மூதாட்டி குமாரி என்கிற எஸ்தர் ராணி?

இதுகுறித்து ‘அங்குசம்’ செய்திக்காக எஸ்.ஐ. ஜோதியை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது… ”

நான், இங்கிருந்து மாறுதல் ஆகி (டிசிபி) மாவட்ட குற்றப் பிரிவுக்கு செல்ல இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று சமாளித்தவரிடம், “புகார் கொடுத்து சில நாட்கள் கழித்தபிறகுதானே ட்ரான்ஸ்ஃபர் வந்தது? அதற்குள், குற்றஞ்சாட்டப்பவரை அழைத்து விசாரித்திருக்கலாமே?” என்று கேட்டதற்கு தற்போது குப்புசாமி என்ற காவலர் விசாரிக்கிறார் என்று கூறி நழுவினார்.

காவலர் குப்புசாமியிடம் நாம் கேட்டபோது, ”குமாரி என்கிற எஸ்தர் ராணியின் புகார் தொடர்பாக விசாரிக்கப்போனேன்.
புகாருக்குள்ளான மோகன் என்கிற எசேக்கியல் குடிபோதையில் இருந்ததால விசாரிக்க முடியல.

ஊரே குமாரி என்கிற எஸ்தர் ராணிக்கு எதிரா இருக்கு”என்ற குப்புசாமியிடம், “அதனாலதானே ஊரே ஒதுக்கி வெச்சிருக்குன்னு புகார் கொடுத்திருக்காங்க?” என்று நாம் கேட்டபோது, ”அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” என்று ஃபோனை துண்டித்தார்.

இதுகுறித்து, பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவிடம் நாம் கேட்டபோது ”அது முழுவதும் குடும்ப பிரச்சனை. அவங்க பையன் தான் பிரச்சினை பண்றான். வேற எதுவும் இல்ல” என்று கேஷுவலாக கூறியவரிடம், ஊரை விட்டு ஒதுக்கி வெச்சாங்களாமே? என்று நாம் கேட்க, ”நம்மக்கிட்ட அப்படியெல்லாம் புகார் கொடுக்கலையே” என்றார், குமாரி என்கிற எஸ்தர் ராணியின் புகாரைக்கூட முழுமையாக படிக்காத அல்லது பாடிக்காததுபோல் காட்டிக்கொண்ட இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு.

ஆண் என்னும் திமிர், கட்டப்பஞ்சாயத்தாரின் துணை, வி.ஏ.ஓ அலுவலகத்தில் வேலை பார்க்கும் உறவினரின் செல்வாக்கு என மோகன் என்கிற எசேக்கியல் ஆண் துணை இல்லாத; கேட்க ஆளில்லாத அப்பாவி வயதான பெண்களை அடித்து விரட்டிக்கொண்டிருக்கிறார்.

வேறு வழியில்லாமல் ஊர் பஞ்சாயத்தாரிடம் முறையிடுகிறார்கள். காதல் திருமணத்தை காரணம் காட்டி ஊரை விட்டே ஒதுக்கி வைக்கிறார்கள் கட்டப்பஞ்சாயத்தார்.

இதனால், எங்கும் நியாமல் கிடைக்காமல் பொறையார் காவல்நிலையத்தை நாடிவந்து புகார் கொடுத்தும் இதையெல்லாம், சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் குற்றஞ்சாட்டப்பட்டவரை காவல்நிலையத்திற்குக்கூட அழைத்து விசாரிக்காமல், ஊராரை பகைத்துக்கொண்டு அவர்களால் என்ன செய்யமுடியும்? என்று கட்டப்பஞ்சாயத்துக் காரர்களிடமே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது பொரையார் காவல்நிலைய போலீஸ்.

கட்டப்பஞ்சாயத்துக் காரர்களே எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்கள் என்றால் காவல்நிலையம் எதற்கு? அங்கு, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐக்கள், ஏட்டுகள், போலீஸார் என அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் எதற்கு சம்பளம் வழங்கப்படவேண்டும்? பேசாமல் ஆளுக்கொரு சொம்பை கையில் கொடுத்து ஆல மரத்தடியிலேயே அமர வைத்துவிடலாமே என்று கேள்வி எழுப்புகிறார்கள், இச்சம்பவத்தை கேள்விப்படும் சமூக ஆர்வலர்கள்.

மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்

பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையிலான போலீஸாரின் அலட்சியப்போக்கு குறித்து, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங் ஐ.பி.எஸ்ஸின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, ”சம்பந்தப்பட்ட புகார் குறித்து உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

எழிலன்

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.