அங்குசம் பார்வையில் ‘அஸ்திரம்- தி சீக்ரெட்’
தயாரிப்பு : ‘பெஸ்ட் மூவிஸ்’ தனசண்முகமணி. டைரக்ஷன் : அரவிந்த் ராஜகோபால், கதை : எம்.எஸ்.ஜெகன் தமிழ்நாடு ரிலீஸ் : ‘ஃபைவ் ஸ்டார்’ செந்தில். நடிகர்—நடிகைகள் : ஷாம், நிரா, நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர், டி.எஸ்.எம்.ரஞ்சித் வெண்பா. விதேஷ் ஆனந்த். ஒளிப்பதிவு : கல்யாண் வெங்கட்ராமன், இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டிங் : பூபதி. பி.ஆர்.ஓ. : ஏ.ஜான்.
கொடைக்கானலில் மக்கள் கூடியிருக்கும் ஒரு பூங்காவில் இளைஞன் ஒருவன் கத்தியால் தனது வயிற்றை தானே கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். இந்த தற்கொலை வழக்கை விசாரிக்க களம் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் அகிலன்[ ஷாம் ]. இதே பாணியில் மதுரையிலும் சென்னையிலும் இரு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் அதிர்ச்சியாகிறார். ஒரு சம்பவத்தில் தோளில் குண்டடிபட்டு மெடிக்கல் லீவில் இருக்கும் போது, எஸ்.பி.அருள் டி.சங்கரிடம் இதைச் சொல்லி, இது தற்கொலைகள் அல்ல, திட்டமிட்ட கொலை என்கிறார். விசாரணையைத் தீவிரப்படுத்த உத்தரவிடுகிறார் எஸ்.பி.
அந்த திட்டமிட்ட கொலைச் சம்பவங்களுக்கு காரணம் யார்? தற்கொலை எப்படி கொலையாகிறது? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘அஸ்திரம்’.
இன்ஸ்பெக்டர் அகிலன் [ ஷாம் ] மெடிக்கல் லீவில் இருக்கும் போது, அவரது கல்லூரி நண்பன் விஜய், அகிலனைச் சந்தித்து சில சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்ததும் அஸ்திரத்தின் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. எட்டாம் நூற்றாண்டில் ஜப்பானில் இருந்த ஒரு மன்னர் ஆட்சியில், அரசாங்கத்திற்கு துரோகம் செய்தவர்களின் கையில் கத்தியைக் கொடுத்து, தங்களது வயிற்றில் தாங்களே கிழித்துக் கொண்டு சாகும் கொடூர தண்டனை வழங்குவார்களாம். இன்னொரு புறம் அரசருடன் சில சிப்பாய்கள் செஸ் விளையாடி ஜெயித்துவிட்டால், தோல்வியைத் ஜீரணிக்க முடியாத மன்னன், சிப்பாய்களின் கையில் கத்தியைக் கொடுத்து இதே பாணியில் சாகடிப்பானாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த இரண்டு வரலாற்றுச் சம்பவங்களையும் அது குறித்த எழுதப்பட்ட ‘செஸ்-தி சீக்ரெட்’ என்ற பழங்காலத்து புத்தகம் ஒன்று கொடைக்கானலில் இருக்கும் சிறுவன் மார்ட்டின் [ விதேஷ் ஆனந்த் ] கையில் கிடைத்ததையும் கரெக்டாக கனெக்ட் பண்ணி, இந்த ’அஸ்திரம்’ கதைக்கு ஸ்ட்ராங் ஃபவுண்டேஷன் போட்டிருக்கார் கதாசிரியர் ஜெகன். இந்த ஃபவுண்டேஷனை ஷார்ப்பான ஸ்கிரிப்ட் மூலம் சூப்பர் எக்ஸ்பிரீயன்ஸ் த்ரில்லிங் பில்டிங்கை கட்டியெழுப்பிவிட்டார் டைரக்டர் அரவிந்த் ராஜகோபால்.
தமிழ்ப்பார்வையாளனுக்கு முற்றிலும் புதுவிதமான கதைக்களம், அந்தக் களத்தில் களமாடும் புலனாய்வுப் புலி இன்ஸ்பெக்டர் அகிலனாக ஷாம் செம ஃபிட்டாக இருக்கார். கட்டுமஸ்தான உடல், நிதானமாகவும் நுண்ணிய அறிவுடனும் விசாரிக்கும் பாணி, ஒரு கட்டத்தில் அந்தக் கொலைகாரனும் தனது நண்பன் விஜய்யும் தனது வீட்டிலேயே வயிற்றைக் கிழித்துக் கொண்டு செத்ததும் வெளிப்படுத்தும் அதிர்ச்சி, தன்னை விசாரிக்கும் போலீசிடம் காட்டும் அசால்ட் முகம் என நடிப்பிலும் க்ளைமாக்ஸில் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷ ஆக்ஷன் சீக்வென்ஸிலும் நன்றாகவே ஸ்கோர் பண்ணியுள்ளார் ஷாம். எல்லாத் திறமைகள் இருந்தும் சினிமாவில் சரிவர சாதிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோக்களில் ஷாமும் ஒருவர்.
இவரது மனைவி பிரியாவாக நிரா. நியூஸ் சேனலில் வேலைபார்க்கும் இவருக்கு சீன்கள் ரொம்பவே குறைவு தான் என்றாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தாய்மை உணர்வை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஷாமுக்கு உதவியாக நிற்கும் சப்.இன்ஸ்பெக்டர் சுமந்த் கேரக்டரில் வரும் ரஞ்சித் புதுமுகம் என்றாலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இவரின் மனைவியாக வெண்பா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஹீரோயின் நிராவுக்கு குழந்தை ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காகவே க்ளைமாக்ஸில் வெண்பா கேரக்டரை கழுத்தறுத்து குளோஸ் பண்ணிட்டார் போல டைரக்டர்.
இடைவேளைவிடும் நேரம் கொலைகாரன் என நம்பப்படும் மார்ட்டின் எண்ட்ரியாகி, ஷாம் கண் முன்னாலேயே அவனும் வயிற்றைக் கிழித்துக் கொண்டு செத்ததும் ‘அட என்னடா இது நமக்கு வந்த சோதனை”ன்னு நினைச்சுக்கிட்டு, ரிலாக்ஸா ஒரு டீ சாப்பிட்டு போய் உட்கார்ந்தால், அதுக்குப் பிறகு தான் உண்மையான மார்ட்டின் வேறொருத்தன் என்ற செம ட்விஸ்டுடன் ஒரு ஃபளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணி அசத்துகிறார் டைரக்டர் அரவிந்த் ராஜகோபால்.
அந்த ஃப்ளாஷ்பேக்கில் மனநல மருத்துவர் நிழல்கள் ரவி, மார்ட்டினின் அப்பாவாக ஜீவா ரவி, மார்ட்டினுக்கு [ விதேஷ் ஆனந்த் ] இன்ஸ்பெக்டர் ஷாம் மீது ஏன் கொலைவெறி ஏற்படுகிறது என பக்கா இண்ட்ரஸ்டிங்கான சம்பவங்களையெல்லாம் குழப்பமே இல்லாமல் சொல்லிவிட்டார் டைரக்டர். அந்த சின்னப் பையன் விதேஷ் ஆனந்த் மிரள வைக்கிறான்.
செஸ் விளையாட்டில் செக்மேட் டேஞ்சர், தொடர் தோல்விகள் தான் ஒருத்தனை மனச்சிதைவுக்குள்ளாக்கும் காரணி, மெஸ்மரிசம் என்பது சயிண்டிஃபிக்காக நிரூபிக்கப்படாவிட்டாலும் அதை அரசியல்வாதிகளுடன் சாமியார்களுடனும் கம்பேர் பண்ணியவிதம், நம்பர் பூட்டு, அதில் ஒரு செல்போன் நம்பர், கார் நம்பர் பிளேட் என டைரக்டர் அரவிந்த் ராஜகோபாலின் டெக்னிக்கல் உழைப்பும் பாராட்டுக்குரியது.
ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட் ராமன், மியூசிக் டைரக்டர் சுந்தரமூர்த்தி, எடிட்டர் கோபி இந்த மூன்று பேருமே இந்த அஸ்திரத்தின் முக்கியத்தூண்களில் முதன்மைத் தூண்கள்.
“அந்த சீக்ரெட்டை சொல்லட்டுமா…” என்ற டயலாக்குடன் ‘அஸ்திரம்-2’-க்கான அஸ்திவாரம் போட்டுள்ளார் டைரக்டர்.
இந்த ‘அஸ்திரம்’ சூப்பர் த்ரில்லிங் எக்ஸ்பிரீயன்ஸ் செஸ் கேம்.
— மதுரை மாறன்.