அங்குசம் பார்வையில் ’பேபி & பேபி’
தயாரிப்பு : ‘யுவராஜ் பிலிம்ஸ்’ பி.யுவராஜ். டைரக்ஷன் : பிரதாப், நடிகர்-நடிகைகள் : ஜெய், பிரக்யா நாக்ரா, சத்யராஜ், யோகிபாபு, சாய் தன்யா, இளவரசு, கீர்த்தனா, ஸ்ரீமன், பாப்ரி கோஷ், ஆனந்தராஜ், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, விஜய் டி.வி.ராமர், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த். இசை : இமான், ஒளிப்பதிவு: சாரதி, எடிட்டிங் : ஆனந்த லிங்கம். பி.ஆர்.ஓ. : “எஸ் 2 மீடியா’ சதீஷ்.
பொள்ளாச்சி பகுதி ஜமீன் பரம்பரையான சத்யராஜ்—கீர்த்தனா தம்பதியின் மகன் ஜெய், காதல் திருமணம் செய்ததால் பெற்றோரோல் ஒதுக்கப்படுவதால், மனைவியுடன் துபாய் செல்கிறார். மதுரையைச் சேர்ந்த ஜோதிடத்தில் அதீத நம்பிக்கையுள்ள இளவரசுவின் மகன் யோகிபாபு, வேலைக்காக துபாய் செல்கிறார். ஆண் வாரிசுக்குத் தான் ஜமீன் சொத்து என்பதில் கறாராக இருக்கிறார் சத்யராஜ். பெண் வாரிசு பிறந்தால் தான் வீடு செழிக்கும், சொத்து சேரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் இளவரசு.

இவர்கள் நினைத்தது போலவே ஜெய்க்கு ஆண் குழந்தையும் யோகிபாபுவுக்கு பெண் குழந்தையும் துபாயிலிருந்து வேறு வேறு ஃப்ளைட்டில் சென்னைக்கு வருகிறார்கள். சென்னை ஏர்ட்போர்ட்டில் எதேச்சையாக நடக்கும் ஒரு சம்பவத்தால் ஆண் குழந்தை யோகிபாவிடமும் பெண் குழந்தை ஜெய்யிடமும் இடம் மாறிவிடுகிறது. அதன் பின் நடக்கும் களேபரங்கள் தான் இந்த ‘பேபி & பேபி’.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காமெடி சரவெடிக்கு க்யாரண்டியான இந்தக் கதையை படம் முழுவதும் நமுத்துப் போக வைத்துவிட்டார் டைரக்டர். பல இயக்குனர்களிடம் சினிமா டிரெய்னிங் எடுத்து படம் எடுக்க வருவார்கள் சில டைரக்டர்கள். ஆனால் இப்படத்தின் டைரக்டர் பிரதாப்போ, இந்தப் படத்தை எடுத்து டிரெய்னிங் எடுத்துட்டார் போல. ஏன்னா படத்தில் காமெடி நடிகர்கள் அம்புட்டுப்பேர் இருந்தும் அமெச்சூர்த்தனமான சீன்களால் டிவி சீரியலே தேவலைங்கிற ரேஞ்சுக்கு நம்மள டென்ஷாக்கிவிட்டார்.
படம் முழுவதும் ‘தெளிர்ச்சி’ இல்லாமலே இருக்கிறார் ஜெய். சிரிப்பு நடிகரிலிந்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக ட்ரை பண்ணியிருக்கிறார் யோகிபாபு. ஜெய்யின் அக்காவாக பாப்ரி கோஷ், இவரது கணவராக ஸ்ரீமன், ஜெய்யின் மாமனராக நிழல்கள் ரவி ஆகியோர் வந்து போகிறார்கள். படத்துல கொஞ்சமே கொஞ்சமாச்சும் சிரிக்க முடிஞ்சதுன்னா.. அது ஆனந்தராஜ் + சிங்கம்புலி கூட்டணியால் தான். மொட்டை ராஜேந்திரனும் தங்கதுரையும் கொலைவெறியைத் தூண்டுகிறார்கள். பிரக்யாவும் சாய் தன்யாவும் ஹீரோயின்கள் லிஸ்டில் இருக்கிறார்கள். “ஆராவமுதே..ஆராவமுதே…”பாடலால் இதமளிக்கிறார் இமான்.
”குழந்தைகளில் ஆணென்ன, பெண்ணென்ன” என்ற நீதி போதையுடன், ஸாரி.. போதனையுடன் படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் பிரதாப். தயாரிப்பாளர் யுவராஜுக்குத் தான் ‘கிர்ர்ரடிச்சிருக்கும்.
— மதுரை மாறன்.